திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், DMK
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆறு தொகுதிகளிலும் வி.சி.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், தி.மு.க. அத்தனை இடங்களை ஒதுக்க முன்வரவில்லை.
இது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் திருமாவளவன்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் வி.சி.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. அப்போது அலுவலகத்திற்கு வெளியில் கூடியிருந்த தொண்டர்கள், இந்த ஆறு இடங்களை ஏற்கக்கூடாது; கூடுதல் இடங்களைப் பெற வேண்டுமென கோஷம் எழுப்பினர்.
வெளியில் வந்த திருமாவளவன் தொண்டர்களை சமாதானப்படுத்தினார். தற்போதைய சூழலை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
இதற்குப் பிறகு தி.மு.க. தலைமையகமான அறிவாலயம் சென்ற திருமாவளவன், 6 தொகுதிகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் சனாதன பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு யுத்த களமாக இந்த தேர்தல் களம் அமையவிருக்கிறது. தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியையும் குறிவைத்து, பா.ஜ.க. மற்றும் சங்கபரிவார அமைப்புகள் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அவர்களால் இங்கே காலூன்ற முடியாத நிலை, பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், காங்கிரஸ் கோலோச்சிய பல மாநிலங்களில், எந்த காலத்திலும் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது என்ற நிலையில் இருந்த வடகிழக்கு மாநிலங்களில், சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது பா.ஜ.க. ஆனால், தமிழ்நாட்டில் எதையும் செய்ய இயலவில்லை. உ.பியில், கர்நாடகத்தில், ம.பியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த அவர்களால், தமிழ்நாட்டில் கனவு பலிக்கவில்லை. தி.மு.கவின் தலைவர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் சமூக நீதி மண்ணாக விளங்கும் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும், ஜாதிவெறி மதவெறி சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறது பா.ஜ.க. அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.
புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டிலும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய வேண்டும், திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தி, சமூக நீதி அரசியலை அழிக்க வேண்டுமென அவர்கள் முயற்சிக்கிறார்கள். இந்தச் சூழலில் 2019ல் இருந்து தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் பயணித்து வருகிறது வி.சி.க. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள், 2017ல் இருந்தே தி.மு.க. கூட்டணியில் பயணித்து வருகிறோம். சனாதன சக்திகள் வலிமை பெற்றுவிடக்கூடாது, சமூக நீதிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எந்த நிபந்தனையும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தக் கூட்டணியில் பயணித்துவந்திருக்கிறோம்.

பட மூலாதாரம், DMK
இந்த நிலையில், தி.மு.க., வி.சி.க.வோடு தொகுதி உடன்பாடு குறித்துபேச்சு வார்த்தை நடத்தியதில் 6 இடங்களில் போட்டியடுவது என முடிவுஎடுத்திருக்கிறோம். எங்கள் உயர்நிலைக்குழுவிலும் தலைமைக் குழுவிலும் இடங்களின் எண்ணிக்கை தொடர்பாக அதிருப்தி தெரிவித்தனர். இருந்தாலும் தமிழகத்தை சூழ்ந்துள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு, தி.மு.க. கூட்டணியில் தொடர்வதுதான் முதன்மையானது, மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிடக்கூடாது, அதற்கு விசிக காரணமாக இருந்திடக்கூடாது என்ற அடிப்படையில் வி.சி.க. இந்த தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறினால், பா.ஜ.கவின் கரம் வலுப்பெற்றுவிடும் என்ற அச்சம் இருக்கிறது. அ.தி.மு.கவுடன் பழகிக்கொண்டே அதை அழிக்க முயல்கிறார்கள். அதற்கு பல சான்றுகள் உள்ளன. உடனிருக்கிற கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவதில் பா.ஜ.கவினர் வல்லவர்கள். புதுச்சேியில் என்.ஆர். காங்கிரசை பலவீனப்படுத்தியிருக்கிறார்கள். ஹரியானாவில் அதைத்தான் செய்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் வேறூன்றினால் என்ன ஆகும்? ஆகவே தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவதும் வெல்வதும் முக்கியம்.
எந்தந்தத் தொகுதிகள் என்பது குறித்து விரைவில் முடிவுசெய்வோம். ஆறு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியடுவோம். தற்போது கிடைக்கக்கூடிய சின்னத்தில் பொறுத்தமான சின்னத்தைத் தேர்வுசெய்வோம்.
தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கட்டிக்காப்பாற்றிய மக்கள் நலன்களை, சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் என்ற முறையில் எங்கள் பிரசாரம் அமையும்.
மற்ற கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கட்சிக்கும் தனது சொந்த நலன்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் சுதந்திரம் உண்டு. தி.மு.க. கூட்டணி உடைந்துவிடக்கூடாது என்பது எங்கள் கவலை. இருந்தபோதும் அவர்கள் தங்கள் கட்சி நலன்களை முன்வைத்து, சுதந்திரமாக முடிவெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு 3 இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இடதுசாரிக் கட்சிகள் ஆகியோருடன் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை இறுதிசெய்யப்படும்: சி.பி.ஐ
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு நாளை முடிவுசெய்யப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (சி.பி.ஐ.) தி.மு.கவுக்கும் இடையில் மார்ச் 2ஆம் தேதி முதல் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்களை ஒதுக்கீடு செய்து தி.மு.க. ஒப்பந்தம் செய்தது. இதற்கடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மாலை நான்கு முப்பது மணியளவில் தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்திற்கு முத்தரசன், சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்ட சி.பி.ஐ தலைவர்கள் அங்கு வந்தனர். அவர்களுடன் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சு வார்த்தை இணக்கமாக நடைபெற்றது. எங்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்று நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏதும் கிடையாது" என்று தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 25 தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.ஐ., 0.79 சதவீத வாக்குகளைப் பெற்றது. எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றிபெற்றது. 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 12 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களைக் கைப்பற்றியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








