கமல் ஹாசனினின் மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், பெண்கள், விளையாட்டுக்கான செயல்திட்டம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், பெண்கள், விளையாட்டுக்கான செயல்திட்டம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், Getty Images

சீருடைப் பணியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு சர்வதேச பார்வையாளர்களுக்கான விளையாட்டாக மாற்றப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவித்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், இளைஞர்கள், பெண்கள், விளையாட்டிற்கான செயல்திட்டங்கள் இன்று வெளியிடப்பட்டன. விளையாட்டைப் பொறுத்தவரை, மக்களிடம் ஒழுக்கத்தை, நேர மேலாண்மையை மேம்படுத்த ஆரோக்கியமான தமிழகம் இயக்கத்தை நடத்தப்போவதாகவும் பஞ்சாயத்து ஒன்றிய அளவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும் என்றும் ஜல்லிக்கட்டு சர்வதேச பார்வையாளர்கள் பங்கேற்கும் விளையாட்டாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கான செயல்திட்டத்தைப் பொறுத்தவரை, அரசின் சீருடைப் பணி ஒவ்வொன்றிலும் 50 சதவீதம் பெண்கள் இருப்பதை உறுதிசெய்வோம் என்றும் துன்பத்தில் இருக்கும் பெண்கள் தங்க அவசரகால விடுதிகள் அமைக்கப்படும் என்றும் பெண்களுக்கான நாப்கின்கள் பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் என்றும் மகளிர் வங்கி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கொரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல, இளைஞர்களுக்கான செயல்திட்டத்தில்,50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் 100 ச.கி.மீட்டருக்குள் வேலை கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் ஓர் இளைஞர் மற்ற இளைஞர்களுக்கு நிதிச் சலுகை வழங்கினால், அவருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் தொழிலாளர்களுக்கு வட்டியில்லா மின்-பைக்குகள் வழங்கப்படும் என்றும் கல்விக்காகவும் வேலைக்காகவும் இளைஞர் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக ஏற்கனவே டாக்டர் மகேந்திரன் உள்ள நிலையில், துணைத் தலைவராக பொன்ராஜ் நியமிக்கப்படுவதாக கமல் அறிவித்தார்.

இதற்குப் பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "விருப்ப மனுக்களின் எண்ணிக்கை நானூறைத் தாண்டியிருக்கிறது. தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது" என்றார்.

மநீம கூட்டணியில் இணைந்த சரத்குமார்

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டிருப்பதாக அறிவித்த சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். குறிப்பாக அக்கட்சியின் சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என தன்னிச்சையாக அக்கட்சி அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், "இது அரசியல். அரசியலில் அப்படித்தான் நடக்கும் விரைவில் தொகுதி பங்கீடு முடிவுசெய்யப்படும். சமத்துவ மக்கள் கட்சியுடன் கைகுலுக்கிவிட்டோம் என்பது உண்மை" என்றார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டபோது, "முழுவதுமாக அவை நிறைந்த பின்னர் பெயர் வைப்போம். கூடுவதுதான் முக்கியம். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பதே நல்ல பெயர்தான்" என்றார் கமல்.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் எண்ணமுண்டா என செய்தியாளர்கள் கேட்டபோது, "மாற்றத்திற்காக கூட்டணி வைக்கும் எண்ணம் உண்டு. அதை ஜாக்கிரதையாகச் செய்வோம்" என்றார்.

முன்னதாக, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, கமல் தனது பயணத்தைத் துவங்குவதாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி பிறகு ரத்துசெய்யப்பட்டது.

அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "பர்மிஷன் கிடைப்பது போன்ற விஷயத்தால் அதைச் செய்ய முடியவில்லை. அதைக் கொடுக்கும் அதிகாரம் யாரிடமிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அதை நான் கணக்குப் போட்டுச் சொல்ல வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார் கமல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: