கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு

பட மூலாதாரம், Reuters
கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா தலைநகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ராணுவத்தின் உதவியை டெல்லி அதிகாரிகள் கோரியுள்ளனர்.
நகரில் உள்ள மருத்துவனைகளில் இடமில்லை. ஐசியூ படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு என டெல்லி நிலை குலைந்து வருகிறது.
இந்நிலையில்தான் டெல்லி அரசு கோவிட் பராமரிப்பு இடங்களையும், ஐசியுக்களையும் ராணுவம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை பெருந்துயரில் தள்ளியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக நாட்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான புதிய தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தற்போது வெளியாகும் தகவலை காட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பலர் மருத்துவனைகளில் இடம் கிடைக்காமல் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
இந்த வார இறுதியில் டெல்லியில் ஒரு நாளைக்கு 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டெல்லியில் சுகாதார நிலையங்கள் நிரம்பி வழிவதாக டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
"பாதுகாப்பு அமைச்சக்கம் தனது வளங்களை கொண்டு கூடுதல் கோவிட் சிகிச்சை மையங்களை வழங்க உதவினால் அது டெல்லி மக்களுக்கு தகுந்த உதவியாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்வதில் மிக அவசர தேவை உள்ளது என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே ராணுவ சேமிப்பில் உள்ள ஆக்சிஜனை மருத்துவனைகளுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஓய்வுப் பெற்ற ராணுவ மருத்துவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
டெல்லிக்கு போதிய ஆக்சிஜன் தரப்படவில்லை என முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார். ஒதுக்கப்பட்ட் அளவில் ஆக்சிஜனை மத்திய அரசு விநியோகிக்கப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய அரசின் அதிகாரிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை மறுக்கின்றனர். போக்குவரத்தில்தான் சிக்கல் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா ஒரு நாளில் ஆயிரக்கணக்கான டன் அளவில் ஆக்சிஜனை உற்பத்தி நடக்கிறது. ஆனால் அதை விநியோகிப்பதில் உள்ள குறைவான முதலீடே இந்த நிலைமைக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
டெல்லி மருத்துவனைகளே ஆக்சிஜன் தேவை என அவசர செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.
ஞாயிறன்று பத்ரா மருத்துவனையில் ஒரு மருத்துவர் உட்பட 12 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.
"எனது மருத்துவனையின் பாதி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் சாலைகளில் சிலிண்டர்களை கொண்டு காத்திருக்கிறார்கள், அதை நிரப்புவதற்கு ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்," என ஸ்ரீ ராம் சிங் மருத்துவமனையின் நிர்வாகி மருத்துவர் கெளதம் சிங் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- அதிமுகவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி
- தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் - பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி
- கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்
- கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள்
- பிரசாந்த் கிஷோர்: "இத்துடன் போதும்... நிறுத்துகிறேன், விலகுகிறேன்"
- தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












