தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமார் 12 மணி நேரத்தைக் கடந்திருக்கும் நிலையில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 124க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறுவது உறுதியானதையடுத்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து திமுக சட்டமன்றக்குழு கூடி தங்களின் தலைவராக மு.க. ஸ்டாலினை தேர்வு செய்யும் நடைமுறைகள் இனி நடைபெற வேண்டும். இந்த நிலையில், புதிய முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினை சம்பிரதாய வழக்கத்தின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி திமுக 41 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி தலா ஒரு இடத்திலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன. திமுக போட்டியிட்ட 173 இடங்களில் 126 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பட மூலாதாரம், TNDIPR
அதிமுக கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட 179 தொகுதிகளில் 66 இடங்களில் முனனிலை வகிக்கிறது. 15 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதற்கான முடிவுகள் வந்துள்ளன. பாஜக, பாமக ஆகியவை நான்கு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
திமுக கூட்டணி சட்டப்பேரவையில் 140 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைவது உறுதியானதையடுத்து, அவருக்கு பிரதமர் மோதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தேசிய நலன்களுக்காகவும், மாநில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் கோவிட் பெருந்தொற்றை ஒழிக்கவும் இணைந்து பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புக்குரிய நண்பர் ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலாக மாற்றி பெரும் புகழும் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
வெற்றி பெற்ற பிரபலங்கள்
முதல்வர் எடப்படாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் கணிசமான முன்னிலை பெற்றுள்ளார்கள். பல அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுகவின் மருத்துவர் எழிலன் முன்னிலை வகிக்கிறார். நடிகை குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகிக்கிறார். காரைக்குடி தொகுதியில் பாஜகவின் எச்.ராஜா பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
தேர்தல் ஆணையத் தகவல்களின்படி முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ள 232 தொகுதிகளில் திமுக மட்டும் 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது ஆட்சியைப் பிடிக்கத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிக்கை. ஆனால், இந்த 118 என்பது திமுக சின்னத்தில் போட்டியிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையையும் சேர்த்துதான். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய சொந்த கட்சியில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கும் இடங்கள் 137. இதெல்லாம் தேர்தல் ஆணைய முன்னிலை நிலவரத்தின்படி.
வழக்கம்போல, தேர்தல் ஆணைய முன்னிலை நிலவரம், தாமதமாகவே அப்டேட் செய்யப்படுகிறது. சில தனியார் ஊடகங்கள் அளிக்கிற விரைவான முன்னிலை நிலவரங்களின்படி திமுக மட்டுமே 118 இடங்களில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி மட்டுமே பெரும்பான்மை பெறாத ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படப் போகிறதா என்பதை மிக நெருக்கமாக போட்டி நடக்கும் தொகுதிகளின் முடிவுகளைப் பொறுத்தே கூற முடியும்.
தேர்தல் ஆணையத் தரவுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ECI
அமைச்சர்கள் பின்னடைவு
அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்கிறார் எமது செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், விழுப்புரம் தொகுதியில் சி வி சண்முகம்,ஆவடி தொகுதியில் மாஃபாய் பாண்டியராஜன், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி தொகுதியில் தபால் வாக்குகளில் முதலில் அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார். தற்போது இவிஎம் வாக்கு எண்ணிக்கையின் படி, அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் உள்ளார் என்கிறார் பிரமிளா.
ஓபிஎஸ் பின்னடைவு
தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடியை போடி தொகுதி வாக்காளர்கள் அளித்துள்ளனர்.
போடி சட்டமன்ற தொகுதியில் இரண்டம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக 6538 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 6414 பெற்றுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் போட்டியாளராக விளங்கும் தங்க தமிழ்செல்வன் தற்போது முன்னிலையில் இருக்கிறார். போடி தொகுதியில் 2011 மற்றும் 2016ல் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றிருந்தார். தற்போது அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுகசார்பில் போட்டியிட்டுள்ள தங்கதமிழ்செல்வன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிட்டுள்ள முத்துசாமி ஆகிய மூவரும் பல ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தவர்கள் என்கிறார் பிரமிளா.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் - 6 இடங்களிலும், பாஜக - 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஒரே இடத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் அங்கு ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை.
சுயேட்சை ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது என்கிறார் பிபிசி தமிழுக்கான செய்தியாளர் நடராஜன் சுந்தர்.
புதுச்சேரி பிராந்தியம்
காமராஜர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 3849 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 2132 வாக்குகள் பெற்றுள்ளார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிச்சர்ட் ஜான்குமார் 2847 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் மாஸ்டர் 2651 வாக்குகள் பெற்றுள்ளார்.
உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிப்பால் கென்னடி 4109 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன் 2141 வாக்குகள் பெற்றுள்ளார்.
கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் 5714 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வானந்த் 1079 வாக்குகள் பெற்றுள்ளார்.
மங்கலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் 4566 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சன் குமாரவேல் 3926 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் 4768 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 3637 வாக்குகள் பெற்றுள்ளார்.
காரைக்கால் பிராந்தியம்
காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4180 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 2606 வாக்குகள் பெற்றுள்ளார்.காரைக்கால் வடக்கு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் 3738 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், வேட்பாளருமான ஏ.வி.சுப்ரமணியன் 3553 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஏனாம் பிராந்தியம்
ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் வேட்பாளருமான என்.ரங்கசாமி 1174 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் 1036 வாக்குகள் பெற்றுள்ளார்.
மாஹே பிராந்தியம்
மாஹே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத் 1285 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிதாசன் மாஸ்டர் 1139 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தின் தானியங்கி அப்டேட்டை இதே பக்கத்தில் கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனினும், வழக்கமான வேகத்தில் அல்லாமல் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படுவதால் ஒவ்வொரு சுற்றுக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.
தமிழ்நாடு தேர்தல் முன்னிலை நிலவரம்:
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வரும் முகவர்கள், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் முடிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். இல்லாவிட்டால், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களும் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்
தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்த பிறகு சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.
அதன் பிறகு ஒரு பெரிய அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி வசம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சிப்பொறுப்பு கை மாறியது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 2011, 2016 என தொடர்ந்து இரண்டு முறை ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை அதிமுக தலைமையிலான அரசு நிறைவு செய்துள்ளது. இப்போது, மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை தொடருவதை லட்சியமாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
திமுகவை பொருத்தவரை, அதன் தலைவர் மு.கருணாநிதி மறைவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தனது தலைமையில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்:
தொடர்ந்து 10 ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருந்த திமுகவை, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்தலை ஸ்டாலின் தலைமை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், நடந்து முடிந்த தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி மோதலாகக் கருதப்படுகிறது.
இது தவிர, டி.டி.வி. தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மற்றொரு அணி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி என மேலும் மூன்று அணிகள் தேர்தல் களம் கண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
திருப்பத்தை சந்திக்கும் புதுச்சேரி அரசியல்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற அணி, என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக இடம்பெற்ற அணி தேர்தல் களம் கண்டுள்ளன. அங்கு இந்த இரண்டு கூட்டணிக்கு இடையேதான் நேரடி மோதல் நிலவுகிறது.
புதுச்சேரி நிலவரம்
புதுச்சேரியில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பெரும்பான்மை பலம் இழந்த காங்கிரஸ் ஆட்சி நெருக்கடியை சந்தித்தது. அதன் சில எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி வகித்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். இதனால் இந்த தேர்தல் அங்கு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 16,387 ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினார்கள். இந்த தேர்தலை கண்காணிக்க ஒரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி பெற்ற 6.29 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்தினர். இந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழக தேர்தல் பரப்புரைகளின்போது கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் கூடியது. பிறகு மாநிலத்தில் பரவலாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இது குறித்து தனது கடும் அதிருப்தியை சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்திருந்தது.
மேலும், கொரோனா வழிகாட்டுதல்களை கட்டாயம் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தேர்தலில் கோவிட்-19 வழிகாட்டுதல்களை பின்பற்றி பிறருக்கு எடுத்துக்காட்டாக அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் திகழ வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அவற்றைப் பின்பற்றியே இன்றைய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












