கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷ்ருதி மேனன்
- பதவி, பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழு
இந்தியாவுக்கு தடுப்பூசி தயாரிப்புப் பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா, மற்ற நாடுகளின் பயன்பாட்டுக்காக தன்வசம் உள்ள தடுப்பூசி டோஸ்களை வழங்கும் திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில், 10 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் தொகை மட்டுமே கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளது. இந்த நாடு, வைரஸ் உச்சத்தை எட்டி வரும் வைரஸ் பாதிப்புகள் மற்றும் கொரோனா மரணங்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி என்ன?
அமெரிக்கா, சுமார் 60 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி டோஸ்களை கண்டறிந்துள்ளதாகவும் அவை தனது கையிருப்புக்கு கிடைக்கும்போது அவற்றை பிற நாடுகளுடன் பகிர்வதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த விவரங்கள் குறித்து தொடர்ந்து இந்தியாவுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்துக்கு இதுவரை அங்கீகாரம் தரப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு தேவைப்படும் குறிப்பிட்ட சில மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள தடுப்பசி தயாரிப்பு நிறுவனங்கள், மூச்சுக்குழாய் சிகிச்சைக்குதேவைப்படும் பம்ப்புகள், வடிகட்டும் கருவிகள் போன்றவற்றை வாங்க முன்னுரிமை தருவதற்காக அமெரிக்க பாதுகாப்பு தயாரிப்பு சட்டத்தில் சில திருத்தங்களை சேர்த்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இந்தியா நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரிக்கிறது. அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் சில முக்கியமான மூலக்கூறுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதற்கு அந்நாடு விதித்துள்ள சில கட்டுப்பாடுகளே காரணம் என்றும் அவற்றை தளர்த்துமாறும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போது இந்த விவகாரத்தை சரி செய்து விட்டதாகவும் மற்றொரு தடுப்பூசியான கோவோவாக்ஸுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களைப் பெறுவதிலேயே பிரச்னை உள்ளதாகவும் கூறினார்.
லிவர்பூலின் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணரான டாக்டர் சாரா ஷிஃப்லிங், மருந்தக விநியோக சங்கிலி என்பது மிகவும் சிக்கலான மற்றும் நிபுணத்துவம் நிறைந்தது என்று கூறினார்.
சர்வதேச அளவில் தேவை மிக, மிக அதிகமாக உள்ளபோதும், அதை பிற துறைகளில் இருப்பது போன்ற வழிகளில் பூர்த்தி செய்து விட முடியாது. காரணம், புதிய விநியோகஸ்தர்களை எவரும் எளிதாக நம்ப மாட்டார்கள் என்றார்.
இதேவேளை, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை தயாரிக்கும் பயோலாஜிக்கல் இ என்ற மற்றொரு இந்திய நிறுவனத்தின் தயாரிப்புக்கும் அதன் விரிவாக்கத்துக்கும் நிதி ரீதியாக உதவி செய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அந்த நிறுவனம் 2022ஆம் ஆண்டு கடைசியில் குறைந்தபட்சம் 100 கோடி டோஸ்களை தயாரிக்க உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தடுப்பூசி தயாரிப்பை பெருக்க இந்தியா என்ன செய்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பாளர்களாக விளங்குவது கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனம் மற்றும் கோவேக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்தான்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கோவிஷீல்டின் பெரும்பாலான ஏற்றுமதியை கடந்த மார்ச் மாதம் இந்தியா நிறுத்தி வைத்தது. அரிதாக மிகச்சின்னஞ்சிறிய அளவில் சில நாடுகளுக்கு அந்த தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா அனுமதித்தது. மேலும், உலக அளவில் அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கோவேக்ஸ் தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனமான ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் இந்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இதில் எந்தவொரு தடுப்பூசி நிறுவனமும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான உரிமத்தை கேட்டு இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம், சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V என்ற கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியது.
ஸ்புட்னிக் V தடுப்பூசி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்த, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தரவுப்படி, ஐந்து மருந்தக நிறுவனங்கள் மூலம் 850 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்தை இந்தியா தயாரிக்கும். அவை இந்தியாவின் தேவைக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படும். ஆனால், அந்த தடுப்பூசியின் தயாரிப்பு இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை.
தடுப்பூசி தயாரிப்பின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியின் தேவையை சமாளிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே போராடி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 60 மில்லியன் முதல் 70 மில்லியன் டோஸ்கள்வரை மாதந்தோறும் தயாரிப்போம் என்று சீரம் நிறுவனம் அறிவித்தது. இதில் கோவிஷீல்டு மற்றும் இன்னும் இந்தியாவில் உரிமம் வழங்கப்படாத நோவாவேக்ஸ் அடங்கும்.
ஆனால், கடந்த மார்ச் மாதம் அந்த எண்ணிக்கையை 100 டோஸ்கள் ஆக்குவோம் என கூறிய நிறுவனம், பிறகு அந்த திட்டத்தை ஜூன் மாதம்வரை தள்ளிவைத்தது.
கடந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்துக்காக 200 மில்லியன் டோஸ்களை ஆரம்பகால விநியோகமாக வழங்க சீரம் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அந்த மருந்தை வறிய நிலை நாடுகளுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. அதன்படி அஸ்ட்ராசெனிகாவின் 100 மில்லியன் டோஸ்கள், நோவாவேக்ஸின் 100 மில்லியன் டோஸ்கள் கையிருப்பில் இருந்திருக்க வேண்டும்.
இதில் முதல் 100 மில்லியன் டோஸ்களை கடந்த ஃபிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் சீரம் நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு தரவுகளின்படி அந்த எண்ணிக்கையில் 30 மில்லியன் டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில், கோவாக்ஸ் திட்டத்தின்படி இந்தியாவுக்கு 10 மில்லியன் டோஸ்கள் தரப்படுவதுதான் உடன்பாடு.
மேலும், இரு தரப்பு வர்த்தக உடன்பாட்டின்படி, அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியில் 900 மில்லியன் டோஸ்களும் நோவாவேக்ஸ் 145 மில்லியன் டோஸ்களும் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
கோவாக்ஸ் திட்டத்தின் அங்கமாக உள்ள காவி அமைப்பு, முன்பே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி உறுதியளித்த தடுப்பூசி மருந்துகளை சீரம் நிறுவனம் தந்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில்தான் தனக்கு பிரிட்டனைச் சேர்ந்த அஸ்ட்ராசெனிகவிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ள தகவலை சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. இதுவும் மிக மோசமான நிலையில் உள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய காரணம் என்று சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












