கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?

oxygen

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது, தென் மாநிலமான கேரளா மட்டும் தேவைக்கும் அதிகமாகவே ஆக்சிஜனை வைத்துக் கொண்டு நிம்மதியாகச் சுவாசித்து வருகிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகமாகவே தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது.

மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு கொடுத்தது போக மீதி ஆக்சிஜனை ஏற்றுமதி செய்து வருகிறது கேரளா. அண்டை மாநிலங்களான தமிழ்நாட்டுக்கு 70 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கியிருக்கிறது. கர்நாடகாவுக்கு 16 மெட்ரிக் டன் கொடுத்திருக்கிறது.

"கொரோனா சிகிச்சைக்காக எங்களுக்கு ஒரு நாளைக்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. பிற சிகிச்சைகளுக்கு 45 மெட்ரிக் டன் தேவைப்படும். மாநிலத்தில் நாள்தோறும் 199 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையெனில் இன்னும் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்" என்கிறார் கேரளா மற்றும் லட்சத்தீவுக்கான மருத்துவ ஆக்சிஜன் கண்காணிப்புப் பிரிவு அதிகாரி ஆர் வேணுகோபால்.

கேரளாவிலும் மற்ற மாநிலங்களைப் போல கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. ஆனால் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு என்பதுதான் சாதகமான அம்சம்.

"வெகு முன்னதாகவே கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்து கண்டுபிடித்து விடுகிறோம். அதனால் விரைவாகச் சிகிச்சையளிக்க முடிகிறது. ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது" என கேரளாவின் கொரோனா தீவிர நடவடிக்கைப் பிரிவின் உறுப்பினரான முகமது அஷீல் கூறுகிறார்.

"காய்ச்சல் போன்ற சிறு தென்பட்டால்கூட அதைக் கண்டறிந்து கூறும் வகையிலான வார்டுக் குழுக்களை மறுசீரமைத்திருக்கிறோம். எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. உறுதி செய்யப்பட்டால் உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கிவிடுகிறோம்" என்கிறார் அஷீல்.

கடந்த வாரத்தில் தினசரி ஆக்சிஜன் தேவையின் அளவு 73 மெட்ரிக் டன்னில் இருந்து 84 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை என்கிறார் வேணுகோபால்

"ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இப்போது 100 சதவிகத் திறனில் இயங்கவில்லை. தேவை அதிகரித்தால் 100 சதவிகிதத் திறனுடன் ஆலைகளை இயக்கலாம். மாநிலத்தில் இப்போது 11 காற்றைப் பிரிக்கும் ஆலைகள் இருக்கின்றன " என்றார் அவர்.

ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் சிறிய ஆலைகளை நிறுவ முடியும் என்று கூறும் வேணுகோபால், அதற்கு ரூ.2.2 கோடி செலவு பிடிக்கும் என்கிறார்.

பாலக்காட்டில் இயங்கும் ஐனாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மட்டும் 149 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்கிறது. காற்றைப் பிரிக்கும் ஆலைகளில் இருந்து 44 மெட்ரிக் டன் கிடைக்கிறது. பிற ஆலைகள் சுமார் 6 டன் அளவுக்கு ஆக்சிஜனை தயாரிக்கின்றன.

"தேவை அதிகரிக்கும நிலை ஏற்பட்டால் ஆறே மாதத்தில் புதிய ஆலையை அமைக்கலாம்" என்று வேணுகோபால் கூறுகிறார்.

கடந்த ஆண்டு வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள மாநிலமாகத்தான் கேரளா இருந்தது. மாநிலத்தில் எப்போது முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதோ அப்போதே ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கு தனியாருக்கு அழைப்பு விடுத்தார் வேணுகோபால்.

"ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஏன் கடிதம் எழுதினேன் என்று தெரியாது. ஆனால் அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது." என்கிறார் வேணுகோபால்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: