கொரோனா சுனாமியில் உத்தர பிரதேசம்: மருத்துவ கட்டமைப்பின் அவலம் அம்பலம்

உத்தரப்பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும்.

நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து வந்தாலும், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

கன்வால் ஜீத் சிங்கின் தந்தை நிரஞ்சன் பல் சிங். வயது 58. கோவிட் தொற்று ஏற்பட்ட இவரை ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்று கொண்டிருந்தபோதே இவரது உயிர் பிரிந்தது. நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத்தால், நான்கு மருத்துவமனைகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

`அன்றைய நாள் என் மனம் உடைந்ததுபோல ஆனது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால், அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால், அரசு, காவல்துறை, சுகாதாரத்துறை என யாருமே எங்களுக்கு உதவவில்லை.` என்று கான்பூரில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் என்னிடம் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, கோவிட் பரவல் தொடங்கியபோது, உத்தரபிரதேசத்தில் 8,51,620 பேருக்கு நோய் பாதித்து, 9,830 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மற்ற மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது இது மோசமாகத் தெரியவில்லை என்று நினைத்த நிலையில், இந்த இரண்டாம் அலை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், நிறைந்து வழியும், கோவிட் சோதனைச்சாவடிகள், மருத்துவமனைகளால் திருப்பி அனுப்ப்ப்படும் நோயாளிகள், மாநில தலைநகரான லக்னோ மற்றும் இதர நகரங்களிலும் மயானங்களில் தொடர்ந்து எரியும் சடலங்கள் என பல காட்சிகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

சுமார் 24 கோடி மக்கள் தொகையுடன், இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. நாட்டில் ஆறில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராக உள்ளார். தனி நாடாக பிரிக்கப்பட்டால், உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனீஷியாவுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை உத்தரப்பிரதேசம் பிடிக்கும். பாகிஸ்தான் மற்றும் பிரேசிலைவிட மக்கள்தொகை அதிகமுள்ள பகுதி இது.`

அரசியல் ரீதியாகவும், இந்தியாவிற்கு முக்கிய மாநிலமாக உள்ளது. இங்கிருந்து இந்திய பிரதமர் மோதி உட்பட 80 பேர் நாடாளுமன்றம் சென்றுள்ளனர். மோதி வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், இங்கிருந்து போட்டியிட்டார். இதனால், இம்மாநிலத்திற்கு சில நன்மைகளும் நடந்துள்ளன.

தற்சமயம், 1,91,000 பேர் கோவிட் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தினமும், ஆயிரக்கணக்கானோர் புதிதாகப் பாதிக்கப்படுவதாக செய்திகளும் வெளியாகின்றன. இது உண்மை நிலையைவிட குறைவான எண்ணிக்கையாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்த சூழல், அம்மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பின் நிலையை அனைவருக்கும் காட்டியுள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பல அமைச்சரவை உறுப்பினர்கள், டஜன் கணக்கான அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பேசி, அவர்களின் சோகக்கதைகளை கேட்டறிந்தேன்.

உத்திர பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்திர பிரதேசம்

கான்பூரில் உள்ள ஒரு செய்தியாளர் பகிர்ந்த காணொளியில், நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு மனிதர், அரசு லாலா லஜபதி ராய் மருத்துவமனையின் வாகன நிறுத்த வளாகத்தில் அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறொருவர் அமர்ந்துள்ளார். இருவருமே கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் இடமில்லை.

அரசால் நடத்தப்படும் கன்ஷிராம் மருத்துவமனையில் ஒரு பெண்மணி கண்ணீர் மல்க அமர்ந்துள்ளார். இரு மருத்துவமனைகளில் தனது நோய்வாய்ப்பட்ட தாயை சேர்க்க மறுத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

`நோயாளிகளுக்கான படுக்கைகள் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், அவரை தரையில் படுக்க வையுங்கள். குறைந்தபட்சம் அவருக்கு சிகிச்சையாவது அளியுங்கள். இதுபோல நான் பல நோயாளிகளை பார்த்துவிட்டேன். எங்களைப்போலவே பலரையும் திருப்பி அனுப்புவதை நான் பார்த்தேன். படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் கூறுகிறார். அவை எங்கு உள்ளன என்று தயவு செய்து சொல்லுங்கள். அம்மாவிற்கு சிகிச்சை அளியுங்கள்` என்று அவர் அழுதார்.

`யாருமே வரவில்லை`

மாநிலத் தலைநகரான லக்னோவிலும் இதே மோசமான நிலைமைதான்.

சுஷில்குமார் ஸ்ரீவத்சவா என்பவருக்கு, ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி, காரில் வைத்தபடியே ஒவ்வொரு மருத்துவமனையாக குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். கடைசியாக அவருக்கு படுக்கை கிடைத்தப்போது, நிலைமை கைமீறி சென்றுவிட்டது.

அவரது மகன் ஆஷிஷை தொடர்புகொண்டு பேசியபோது, அவர் பேசும் நிலையிலேயே இல்லை. `என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். நான் பேசும் நிலையில் இல்லை.` என்று என்னிடம் கூறிவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் சந்திரா, மறைந்த தன் மனைவின் உடலை அங்கிருந்து எடுத்துச்செல்ல அதிகாரிகள் உதவத் தவறியதால் உதவிகேட்டு தன் கைப்பட ஹிந்தியில் எழுதிய கடிதம், சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

`நானும் என் மனைவியும் கொரோனா நோயாளிகள். நேற்று காலையிலிருந்து அரசு உதவி எண்ணுக்கு 50 முறை தொடர்புகொண்டுவிட்டேன். யாருமே மருந்து கொண்டு வந்துகொடுக்கவோ, எங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று காலை என் மனைவி உயிரிழந்துவிட்டார்.` என்று அதில் இருந்தது.

உத்திர பிரதேசம்
படக்குறிப்பு, உத்திர பிரதேசம்

தனிப்பட்டமுறையில் சொல்லவேண்டுமென்றால், இந்த பெருந்தொற்று காலத்தில் இம்மாநிலம் இத்தனை கஷ்டங்களை அனுபவிப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றே சொல்லுவேன். பல ஆண்டுகளாக, இங்குள்ள மோசமான சுகாதார வசதிகளை நான் பார்த்துள்ளேன். என் குடும்பத்தினரின் சொந்த கிராமம் அங்குதான் உள்ளது. சாதாரண நாட்களிலேயே ஒரு மருத்துவரையோ, அவசர வாகனத்தையோ கண்டுபிடிப்பது கடினமான விஷயமாகும்.

பெருந்தொற்று காலத்தில் அது இன்னும் கடினம் ஆகிவிட்டது.

பிரதமரின் தொகுதியான வாரணாசியில், நிர்மலா கபூர் என்ற 70 வயது பெண்மணி கடந்த வியாழக்கிழமை கோவிட் தொற்றால் உயிரிழந்தார். அந்த சூழல் மிகவும் பயமுறுத்தும் விதமாக உள்ளது என்று விளக்குகிறார் விமல் கபூர்.

`அவசர ஊர்தியிலேயே பலர் இறப்பதை நான் பார்க்கிறேன். படுக்கைகள் இல்லாமல், மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்புகிறார்கள், தேவையான கோவிட் மருந்துகள் இல்லாமல், மருந்து அளிப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.`

தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்றபோது, `பிணக்குவியலை` பார்த்ததாக கூறுகிறார் அவர். உடலை எரிக்கும் கட்டைகளின் விலை மூன்று மடங்காகியுள்ளதோடு, உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

`இதுபோல நான் பார்த்ததே இல்லை. எங்கு பார்த்தாலும் அவசர வாகனங்கள், அதில் பிணங்கள்.` என்கிறார் அவர்.

இதுபோல, கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் பல சோகக் கதைகளை சுமந்துகொண்டுள்ளது இந்த மாநிலம். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரே நாளில் 30,596 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஒருநாளில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவே.

உத்தரப் பிரதேசம்

பட மூலாதாரம், Sumit kumar

இதுவே, மாநிலத்தின் முழு நிலையை வெளிகொண்டுவரவில்லை என்று செயற்பாட்டாளர்களும், எதிர்கட்சி தலைவர்களும் கூறுகின்றனர். அதிக பரிசோதனைகள் செய்யாமலும், தனியார் சோதனைக்கூடங்களில் இருந்து வரும் முடிவுகளை கணக்கில் கொள்ளாமலும் விட்டதன் மூலம், முழு எண்ணிக்கையை அரசு மறைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதுபோலவே தோன்றுகிறது. நான் பேசிய பலரும், தங்களால் பரிசோதனை செய்துகொள்ள முடியாமல் போனது என்றோ, தங்கள் பரிசோதனை முடிவுகளை அரசு இணையதளத்தில் பதிவேற்றவில்லை என்றோதான் கூறுகிறார்கள். லக்னோவை சேர்ந்த 62 வயதாகும் அஜய் சிங், தனது மனைவியின் பரிசோதனை முடிவை காண்பித்தார். ஆனால், அந்த முடிவு குறித்த எந்த தகவலும் அரசு தரவுகளில் இல்லை.

கான்பூரில் இறந்த சிங், வாரணாசியில் இறந்த கபூரின் தாய் என யாருமே இதில் சேர்க்கப்படவில்லை. அவர்களின் இறப்பு சான்றிதழில், கோவிட்தான் காரணம் என்று எழுதவில்லை.

இது குறித்து இந்திய ஊடகங்களும், அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளன. அரசு தரவுகளில் குறிப்பிடப்படும் இறப்பு எண்ணிக்கைக்கும், வாரணாசி மற்றும் லக்னோவில் உள்ள மயானங்களில் உள்ள உடல்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக அவை கூறுகின்றன.`

இந்த சூழல், மிகவும் மோசமாக உள்ளதாக கூறுகிறார் ஹெரிடேஜ் மருத்துவமனைகளின் இயக்குநரான அன்ஷுமான் ராய்.

` பல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடல்நிலை சரியில்லாமல் போவதே நிலைமை இப்படி இருக்க காரணம் என்கிறார் அவர்.

`நாம் 200% வேலை செய்யவேண்டிய இடத்தில் நம்மால் 100% கூட செய்ய முடியவில்லை. இதற்கு, நமது சுகாதாரத்துறை முழுக்க முழுக்க மனிதவளத்தை நம்பியுள்ளதே காரணம்` என்கிறார் அவர்.

விமர்சகர்களோ, இரண்டாம் அலையை சமாளிக்க தயாராகாமல் இருந்தமைக்காக, மத்திய, மாநில அரசுகளையே குற்றம் சாட்டுகின்றனர்.

செப்டம்பர் - பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு இடைவேளை இருந்தது. அந்த சூழலை பயன்படுத்தி மருத்துவர்களை தயார் செய்து, ஆக்சிஜன் சிலிண்டர்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி வைத்திருந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார்கள் என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

தரவுகள் ஆய்வு: ஷதாப் நஸ்மி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: