செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதில் என்ன சிக்கல்? - அதிர்ச்சிப் பின்னணி

HBL PLANT

பட மூலாதாரம், HLL biotech fb page

படக்குறிப்பு, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி வளாகம்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பரவலால் தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் சூழலில், செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன நடக்கிறது?

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதிலும், கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 28 லட்சத்து 82 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரமாக உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

என்.ஓ.சி கொடுப்பதில் தாமதம் ஏன்?

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால், கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விகிதம் அதிகரித்துள்ளது.

இதனால், அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் கூட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, கோவேக்ஸின் தடுப்பூசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனமும் தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம், `தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை துரிதப்படுத்தலாம்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரவிக்குமார் எம்.பி.

பட மூலாதாரம், RAVIKUMAR MP

படக்குறிப்பு, ரவிக்குமார் எம்.பி.

உதாரணமாக, `` செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இங்கு 2012 ஆம் ஆண்டு மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதற்காக ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்காக 594 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 400 பணியாளர்கள் வரையில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் 250 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் இந்த நிறுவனம் முடங்கியே கிடக்கிறது. காரணம், மத்திய அரசின் தடையில்லா சான்று கிடைக்காததுதான்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.

செங்கல்பட்டில் ஏன் தடுப்பூசி வளாகம்?

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைக் கட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டதற்கு சில காரணங்கள் உள்ளன. உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்காற்றி வந்துள்ளது. டிப்தீரியா, டெட்டானஸ், போலியோ என தடுப்பு மருந்துகளை தயாரித்ததில் தமிழ்நாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்நிலையில், குன்னூரில் செயல்பட்டு வந்த லூயி பாஸ்டியர் மையம், கிண்டி கிங் ஆய்வகம், உத்தரபிரதேசம், கசோலியில் செயல்பட்டு வந்த தடுப்பூசி உற்பத்தி மையங்களை மத்திய அரசு மூடியது. சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்த காலகட்டத்தில் இவைகள் மூடப்பட்டன. காரணம், `இந்த மையங்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் இல்லை' என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததுதான். இவற்றை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தியிருக்கலாம். அதிலும், குன்னூரில் இருந்த லூயி பாஸ்டியர் தடுப்பூசி ஆய்வகம் `ரேபிஸ்' எனப்படும் வெறிநாய்க்கடிக்கான தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது.

HLL BIOTECH

பட மூலாதாரம், HBL

படக்குறிப்பு, ஹெச் எல் எல் பயோடெக்

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் வி.சி.க உள்பட அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அன்புமணியின் இந்த முடிவை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் விரும்பவில்லை. அப்போது சுகாதாரத்துறை செயலராக இருந்த சுக்லா, அமைச்சரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு என்னவானது எனத் தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை மூடிய விவகாரம், உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவே கூறப்பட்டது. இந்தச் சூழலில்தான், செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைக் கட்ட உள்ளதாக அறிவித்தார்கள்" என்கிறார்.

பாரத் பயோடெக்கின் லாபம் என்ன?

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ரவிக்குமார் எம்.பி, `` 2012 ஆம் ஆண்டில் தடுப்பூசி வளாக பணிகள் தயார்நிலைக்கு வந்துவிட்டன. அப்போது இருந்த காங்கிரஸ் அரசும் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கவில்லை. அடுத்து பதவிக்கு வந்த பா.ஜ.க அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது வரையில் அங்கு உற்பத்தியைத் தொடங்கவில்லை. பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைத்துவிட்டனர். இதற்கிடையில் கொரோனா தொற்று அதிகரித்ததால், மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் வைரஸின் மரபணுத் தொடரை பிரித்தெடுக்கும் பணியைச் செய்தது. அதனை அடிப்படையாக வைத்து தடுப்பூசி மருந்தை தயாரிப்பதற்காக பாரத் பயோடெக்குடன் ஒப்பந்தம் போட்டனர். இதன் தொடர்ச்சியாக கோவேக்ஸின் மருந்தை கண்டுபிடித்தனர். இந்த மருந்து ஐ.சி.எம்.ஆருக்கு சொந்தமானது. ஆனால், இரண்டு தரப்பும் ஒப்பந்தம் போட்டுச் செயல்பட்டு வருகின்றன.

VACCINE

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

இந்நிலையில், `செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் வளாகத்தை எங்களிடம் கொடுத்தால் இன்னும் கூடுதலாக உற்பத்தி செய்வோம்' என மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தடுப்பூசியை ஐ.சி.எம்.ஆர் கண்டறிந்தாலும் மாநில அரசுக்கு 600 ரூபாய் என்ற விலையிலும் தனியாருக்கு 1,200 என விலையிலும் விற்கின்றனர். இதனை மத்திய அரசும் ஊக்குவிக்கிறது. இதனைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 70,000 கோடி ரூபாய் அளவுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கிறது. அதாவது, 50 சதவிகித ஊசியை செலுத்தினாலே இந்த லாபம் வருகிறது. இதுதவிர, செங்கல்பட்டு வளாகத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.

மொத்த தேவை 280 கோடி டோஸ்கள்

இதற்கு மாறாக, ஹெச்எல்எல் பயோடெக்குடன் ஒப்பந்தம் போட்டு ஐ.சி.எம்.ஆரே தடுப்பூசியை உற்பத்தி செய்யலாம். இங்கு ஒரே மாதத்தில் லட்சக்கணக்கான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. குறிப்பாக, இங்கு அனைத்துமே தயார் நிலையில் உள்ளது. ரஷ்ய அரசோடு ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் போட்டு ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஆர்வம் காட்டி வருகிறது. பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளும் வந்துள்ளன. அஸ்ட்ராஜெனகாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டும் மத்திய அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க முடியும். இதன் மூலம் குறைவான விலையில் மக்களுக்கு விற்க முடியும்.

COVAXIN

பட மூலாதாரம், NORBERTO DUARTE

தற்போது தடுப்பூசி உற்பத்திக்காக மட்டும் 35,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அப்படியிருந்தும் தட்டுப்பாடு உள்ளது. 140 கோடி மக்களுக்கு 2 டோஸ் கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு 280 கோடி டோஸ் வேண்டும். தற்போது வரையில் 14 கோடி பேருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டோம். இதில், இரண்டு டோஸ்களையும் போட்டவர்களின் எண்ணிக்கையும் அடக்கம். இந்த வேகத்தில் சென்றால் தடுப்பூசி போட்டு முடிக்கவே 2 ஆண்டுகள் ஆகும்.

விழுப்புரம் நிலவரம் என்ன?

உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பைப் பார்த்தால் வாரத்துக்கு குறைந்தது 30,000 பேருக்கு தடுப்பூசியை போட முடியும். அதிகபட்சமாக 50,000 பேருக்கு போட முடியும். இங்கு 45 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கையே 5 லட்சத்து 80 ஆயிரம். `இவர்களுக்கு 15 நாளில் ஊசி போட்டு முடிப்போம்' என்கிறார்கள். ஆனால் தடுப்பூசி விநியோகத்தில் பற்றாக்குறை நீடிக்கிறது. வாரத்துக்கு 10,000, 3,000 எனக் குறைவாகவே ஊசி வருகின்றது. தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறையில் நீடிக்கிறது. எனவே, உற்பத்தியை அதிகரிக்க நமது ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி தயாரிக்கும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்கிறார்.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமா?

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தொடர்பாக எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்திய அரசின் மேற்பார்வையில் உள்ள பொதுத்துறை நிறுவனமாக செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் உள்ளது. இந்த மையத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என தமிழக முதல்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அந்த மையத்தில் தடுப்பூசியை தயாரிக்கும் திறன் உள்ளது. இரண்டாவதாக, சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு செயல்படுத்தினால் அதிகப்படியான உற்பத்தியைக் கொடுக்க முடியும். எங்களுக்குத் தெரிந்தவரையில் இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` நிபுணத்துவமும் தொழில்நுட்பமும் சேரும்போது உற்பத்தி அதிகரிக்கும். இதனால் 2 டோஸ் தடுப்பூசி மருந்து அதிகமாகக் கிடைத்தாலும் நல்லதுதான். இதனைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன். இப்படியொரு வளாகத்தைப் புதிதாகத் தொடங்க முடியாது. அங்கு ஏற்கெனவே அனைத்து வசதிகளும் உள்ளன. இன்னும் சில விஷயங்களை மேம்படுத்தி பணிகளைத் தொடங்கினால், இன்று இல்லாவிட்டாலும் வரக் கூடிய மாதங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்".

`குறைந்த விலைக்கு தடுப்பூசி கிடைக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறதே?' என்றோம். `` தடுப்பூசி உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை இன்னொருவரிடம் இருந்துதானே பெறுகிறோம். அதில் சவால்கள் உள்ளன. இதனை உயர்மட்ட அளவில் விவாதித்து நமக்கு இருக்கக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் என்னுடைய கருத்து" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: