தமிழக தேர்தல் முடிவுகள்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி, பாதி அமைச்சர்கள் மட்டுமே கரை சேர்ந்தனர் - வாக்கு வித்தியாசம் என்ன?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

தமிழக அமைச்சரவையில் மொத்தம் 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களில் நிலோஃபர் கஃபீல் (தொழிலாளர் துறை அமைச்சர்), ஜி பாஸ்கரன் (காதி மற்றும் கிராம தொழிற்சாலை அமைச்சர்), எஸ் வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மைனாரிட்டி நலன் அமைச்சர்) ஆகியோருக்கு இந்த முறை தேர்தலில் நிற்க அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

மீதமுள்ள 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் அல்லது முன்னிலையில் இருக்கிறார்கள். மீதமுள்ள 11 அமைச்சர்கள் தோல்வியடைந்து இருக்கிறார்கள் அல்லது பின்னடைவில் இருக்கிறார்கள் என தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.

வெற்றி பெற்ற அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கடந்த 2016 தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றவர்கள் வாக்கு வித்தியாசம்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சம்பத் குமாரை விட 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்களிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

அவரைத் தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில், திமுகவின் தங்க தமிழ் செல்வனை விட 11,021 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமபுற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. அதிக பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக இருந்த தொண்டாமுத்தூரில் திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதியை விட 41,630 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதுவரை அத்தொகுதிக்கான முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்கிறது தேர்தல் ஆணைய தரவுகள்.

அவரைத் தொடர்ந்து குமாரபாளையம் தொகுதியில் நின்ற மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் தங்கமணி, திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை விட 31,646 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை உறுதி செய்திருகிறார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான கே ஏ செங்கோட்டையன், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஜி வி மணிமாறனை விட 28,563 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை மற்றும் விவசாய அமைச்சர் கே பி அன்பழகன், பாலக்கோடு தொகுதியில் திமுகவின் பி கே முருகனை விட 28,100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற 16 அதிமுக அமைச்சர்களில் 25,000 வாக்குகள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெற்றவர்கள் வெறும் ஐந்து பேர் மட்டுமே.

அவரைத் தொடர்ந்து பவானி தொகுதியில் நின்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன், திமுகவின் கே பி துரைராஜை விட 22,523 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

கால்நடை வளத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை தொகுதியில் காங்கிரசின் தென்னரசை விட 21,895 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றிருக்கிறார்.

சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதியில், திமுகவின் பழநியப்பனை விட 19,044 வாக்குகளை அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தேர்தல் ஆணைய தரவுகள் படி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

திண்டுக்கல் தொகுதியில் நின்ற ஸ்ரீநிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை விட 17,747 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தன் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், திமுகவின் மணிமாறனை எதிர்த்து திருமங்களம் தொகுதியில் போட்டியிட்டு 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில், அமமுகவின் டிடிவி தினகரனை எதிர்த்துப் போட்டியிட்டார். 12,403 வாக்குகளை கூடுதலாகப் பெற்று, தினகரனை தோற்கடித்து இருக்கிறார்.

கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் வேதாரணயம் தொகுதியில் 12,329 வாக்குகள் கூடுதலாகவும், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை தெற்கு தொகுதியில் 9,121 வாக்குகள் அதிகமாகவும், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதியில் 4,424 வாக்குகள் கூடுதலாகவும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆரணி தொகுதியில் 3,128 வாக்குகள் கூடுதலாகவும் பெற்று தங்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

மா ஃபாய் பாண்டியராஜன்

பட மூலாதாரம், Getty Images

தமிழ் மொழி மற்றும் கலாச்சார அமைச்சர் மா ஃபாய் பாண்டியராஜன் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாசர் 55,275 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதே போல மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட கிராமபுற தொழில் துறை அமைச்சர் பி பெஞ்சமினை விட திமுக வேட்பாளர் கே கணபதி 31,721 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

தமிழக சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சி வி சண்முகத்தை எதிர்த்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லக்‌ஷ்மணன் 14,868 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னணியில் இருக்கிறார். இந்த மூன்று தொகுதிகளுக்கும் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :