கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

(இன்று 03.05.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல்வர் பினராயி விஜயன் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2-ஆம் தேதி) நடைபெற்றது.

இதில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நெமம் தொகுதியை கூட பா.ஜ.க. இந்த தேர்தலில் இடது சாரியிடம் விட்டு கொடுத்து விட்டது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல் மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில், கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை. வகுப்புவாதம் அல்லது மதவேற்றுமையை கேரளா ஏற்று கொள்ளாது என கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ள நிலையில், பா.ஜ.க.வை தாக்கும் வகையில் முதல் மந்திரி விஜயன் கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையும் தாமரை

தமிழக பாஜக

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் தாமரை மலா்ந்துள்ளது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

வெற்றி வேட்பாளா்கள் நான்கு போ் வரை பேரவைக்குச் செல்லவுள்ளனா். கடந்த 2001-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது, 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூா், தளி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இப்போது அதிமுக: 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பெற்று பேரவையில் நுழைந்த பாஜக, இப்போது அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்று மீண்டும் பேரவைக்குச் செல்லவுள்ளது. நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வென்றுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி

அதிமுக இரட்டை இலை சின்னம்

பட மூலாதாரம், BHASKER SOLANKI

சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட16 அமைச்சர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மா.ஃபா.பாண்டியராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்தனர். இதில் நிலோஃபர் கபீல், எஸ்.வளர்மதி, ஜி.பாஸ்கரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மற்ற 27 பேர் போட்டியிட்டனர்.

இதில் முதல்வர் பழனிசாமி - எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்), கே.ஏ.செங்கோட்டையன் (கோபி),செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு),பி.தங்கமணி (குமாரபாளையம்), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆர்.காமராஜ் (நன்னிலம்), கே.சி.கருப்பணன் (பவானி), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), கடம்பூர்ராஜூ (கோவில்பட்டி), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி )ஆகிய 14 அமைச்சர்கள் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), வி.சரோஜா (ராசிபுரம்), எம்.சி.சம்பத் (கடலூர்), வெல்லமண்டி நடராஜன் ( திருச்சி கிழக்கு), கே.டி.ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை) பி.பெஞ்சமின் (மதுரவாயல்), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), கே.பாண்டியராஜன் (ஆவடி) ஆகிய 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.

அவிநாசியில் போட்டியிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், பொள்ளாச்சியில் போட்டியிட்ட பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"எல்லா புகழும் வங்கப் புலி மம்தாவுக்கே" உத்தவ் தாக்கரே புகழாரம்

உத்தவ் தாக்கரே, முதல்வர் மகாராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கத்தின் சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதைக் குறிப்பிட்டு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று (மே 02, ஞாயிற்றுக்கிழமை) மம்தாவை பாராட்டியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்திலுள்ள 292 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் சுய மரியாதைக்கான போராட்டத்தை தன்னத்தனியாக முன்னெடுத்தார் மம்தா. "இந்த தேர்தல் வெற்றிக்கான எல்லா புகழும் வங்க பெண் புலிக்கே சென்று சேரும்" என தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் உத்தவ் தாக்கரே.

பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் உட்பட பல மத்திய அமைச்சர்கள், பல மாநில தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்கு களமிறங்கினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து இருக்கிறார் மம்தா. நான் மம்தா பானர்ஜி அவர்களையும், வீரு கொண்ட மேற்கு வங்க மக்களையும் வாழ்த்துகிறேன் என பாராட்டியுள்ளார் மகாராஷ்டிர முதல்வர் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :