பிரசாந்த் கிஷோர்: "இத்துடன் போதும்... நிறுத்துகிறேன், விலகுகிறேன்"

பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், TWITTER

தேர்தல் உத்திகள் தொடர்பான வேலை போதும், இத்துடன் நிறுத்திக் கொண்டு விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார் ஐபேக் நிறுவனத்தின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர்.

இது தொடர்பாக இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், "இப்போது நான் செய்வதை தொடர விரும்பவில்லை. போதுமான அளவுக்கு உழைத்து விட்டேன். இப்போது எனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. வேறெதையாவது வாழ்வில் செய்ய ஆசைப்படுகிறேன். எனவே இந்த இடத்தில் இருந்து விலக விரும்புகிறேன்," என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

தமது பணியை திருப்திகரமாக செய்து முடித்ததாகக் கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருபக்க சார்பாக இருந்ததாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மாநிலத்தில் மத ரீதியாக வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்த பல வழிகளை பாஜக கையாண்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் தடுக்கும் என நம்பினோம். ஆனால், அது மெளனப் பார்வையாளராக மட்டுமே இருந்தது என்று அவர் கூறினார்.

இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளின் வெற்றிக்காக நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம் என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு தொடர்ந்து இருந்தது. நரேந்திர மோதி ஒரு பிரதமராக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு இருக்கும் பிரபலம் எல்லா நேரத்திலும் கைகொடுக்காது என்று நான் நம்பினேன் என்று அவர் தெரிவித்தார்.

வெகுஜனங்களுடன் எளிதாக கலக்கும் மமதாவின் குணத்தை பாஜகவினர் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் ஒட்டுமொத்த தேர்தல் பரப்புரையின்போதும் மமதா பானர்ஜியை மட்டுமே நம்பி நாங்கள் பணியாற்றினோம் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், AITC

திரிணாமூல் காங்கிரஸில் பிராந்த் கிஷோரின் தலையீடு தேவைக்கு அதிகமாக இருந்ததாகக் கூறி மமதா பானர்ஜியை விட்டு பல தலைவர்கள் பிரிந்து முந்தைய ஆண்டுகளில் பிரிந்து சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் ஒருவர்தான் நந்திகிராம் தொகுதியில் மமதாவை எதிர்த்து பாஜக வேட்பாளராக களமிறங்கிய சுவேந்து அதிகாரி. இவர் உள்பட சுமார் 30 பேர் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோர்த்தனர். ஆனாலும், அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியை மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங், அதற்கு முன்பு பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளின் தேர்தல் உத்திகளுக்கு மூளையாக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் ஆலோசனை கூறும் பணியில் இருந்து தாம் விலகினாலும் தமது ஐபேக் நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என்று அவர் தெரிவித்தார். ஐபேக் நிறுவனத்தில் அறிவுஜீவிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் என பலதரப்பட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தங்களுடைய சேவைகளை தொடர்ந்து வழங்குவார்கள் என்று கூறினார் பிரசாந்த் கிஷோர்.

தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் வெற்றிக்காக இவரது சொந்த நிறுவனமான ஐபேக் ஆயிரக்கணக்கானோரை தற்காலிக ஊழியர்களாகவும் நூற்றுக்கணக்கானோரை மாத ஊதியம் பெறும் ஊழியர்களாகவும் பணியில் அமர்த்தி அக்கட்சியின் தேர்தல் பரப்புரை உத்திகளை வகுத்தது. திமுகவின் சமூக ஊடக பிரசாரங்கள், தேர்தல் விளம்பர உத்திகள் போன்றவற்றை வடிவமைத்து வெகுஜனத்திடம் அவற்றை கொண்டு சேர்க்க பிரசாந்த் கிஷோரின் குழு இரவு, பகலாக உழைத்தது.

அரசியல் ரீதியாக அவரது நிறுவனத்தின் செயல்பாடுகளை திமுகவின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் அவ்வளவாக அறியாதபோதும் கட்சியின் செயல்பாடுகளில் ஒரு தனியார் நிறுவனத்தின் தலையீடு இருப்பதை அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் கட்சி மேலிட தலைவர்களான ஸ்டாலின், அவரது மகன் மற்றும் மருமகனின் நேரடி தொடர்பில் இருந்த பிரசாந்த் கிஷோர், கட்சி அளவில் நிலவிய தடைகளைத் தாண்டி தமது உத்திகளை ஸ்டாலினிடம் விளக்கி அவர் மூலமாக அவற்றை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டார். அதன் பலன்கள் தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது.

நவீன தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகளின் உதவியுடன் தேர்தல் உத்திகளை வகுப்பதில் கைதேர்ந்தவரான பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறார். இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பறந்து, பறந்து தமது தேர்தல் பரப்புரை ஆலோசனை பணிகளை அவர் மேற்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: