புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி?

RANGASAMY
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, புதுச்சேரியிலிருந்து பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் உள்ள 30 தொகுதிகளுக்கான 15வது சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 324 பேர் போட்டியிட்டனர்.

குறிப்பாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் இடையே மிகப்பெரிய இருமுனை போட்டியாக பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும், பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

எதிர்த் தரப்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து 13 இடங்களில் போட்டியிட்ட திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தவிர்த்து இந்த தேர்தலில் 116 சுயேட்சை வேட்பாளர்களில், 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியுற்றதால், இக்கட்சி இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

சுயேச்சை வேட்பாளர்களின் எழுச்சி

புதுச்சேரி சுயேச்சை வேட்பாளர்களின் எழுச்சி உள்கட்சி அரசியலாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கண்ணன் கூறுகையில், "இந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், தொகுதிப் பங்கீட்டின் போது அதிக தொகுதிகளை பாஜகவிற்கு விட்டுக் கொடுக்கும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக எதிர்பார்த்த தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரால் போட்டியிட முடியாமல் போனது. இதனால் கடந்த ஆட்சிக் காலத்தில் இக்கட்சிக்குத் துணையாக இருந்த ஆதரவாளர்களை சுயேச்சையாக களமிறக்கி விட்டுள்ளார். புதுச்சேரியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் தேர்தல் வேட்பாளர் படிவத்தை ரங்கசாமியிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்ற பிறகே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

puducherry

சுயேட்சை வேட்பாளர்களும் ரங்கசாமி ஆதரவாளர்கள் போன்றே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் காரணத்தினாலேயே சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெற்றனர். பல இடங்களில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்," என்கிறார்.

"புதுச்சேரி வரலாற்றில் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்பட்டது. பல தொகுதிகளில், இறுதி வரை வெற்றி யார் பெறுவார்கள் என்று கணிக்கமுடியாத அளவிற்கு கடும் போட்டி நிலவியது. அதிலும், பிரதான ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கடினமாகக் கருதப்பட்ட தொகுதிகளில், தகுதியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் புதிதாகக் களம் கண்ட சுயேச்சை வேட்பாளர்கள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்குப் பல இடங்களில் போட்டியாக இருந்துள்ளனர்." என்று கூறுகிறார் கண்ணன்.

அதிமுகவுக்குக் கடுமையான வீழ்ச்சி

புதுச்சேரியில் நடைபெற்ற இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியடைந்து கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த அதிமுகவுக்கு எதிர்பார்த்த இடங்களை இந்த தேர்தலில் பாஜக வழங்கவில்லை. ஆனால், கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவருக்கும் இடம் கொடுத்தது. ஆனால், அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜகவின் எதிர்ப்பு அலையே தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளது.

குறிப்பாக அதிமுக களம் கண்ட இடங்களில் சிறுபான்மையினர், தலித் சமுதாயத்தினர் வாக்குகள் கணிசமாக இருந்துள்ளது. இந்த சூழலில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில், போட்டியிட்டதால் அதிமுகவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர்களால் சில தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதுச்சேரி வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றுள்ளது.

பாஜக வெற்றி எவ்வாறு சாத்தியமானது?

புதுச்சேரியில் முதல் முறையாக பாஜக அதிக இடங்களை வென்றது, அக்கட்சிக்கு இருந்த ஆதரவு அலை என்று அர்த்தம் இல்லை என்கின்றனர் மூத்த அரசியல் செயல்பாட்டாளர்கள்.

"புதுச்சேரியில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் போட்டியிட்ட நமச்சிவாயம், ஜான்குமார், ஜான்குமார் மகன் விவிலியன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு புதுச்சேரியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. இவர்கள் அனைவருமே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இருவர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த தனிப்பட்ட செல்வாக்கு வெற்றியாக மாற என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உதவியுள்ளது. அதை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மேற்கொண்டு தோல்வியுற்ற மற்ற மூன்று தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்துள்ளனர்.

RANGASAMY
படக்குறிப்பு, ரங்கசாமி

புதுச்சேரியின் இந்த வெற்றி பாஜக அலை என்று கூற முடியாது. ரங்கசாமியின் ஆதரவு அலையே பாஜக வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், புதுச்சேரி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. கடந்த ஆட்சியிலிருந்து மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தே இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர்," என்கிறார் புதுச்சேரி அரசியல் நகர்வுகளைக் கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் நடராஜன்.

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் தோல்வியடைந்திருப்பதை மக்களின் அதிருப்தியாகப் பார்க்க முடியாது. இது அதிருப்தியாக இருக்குமேயானால் திமுக அதிக இடங்களைப் புதுச்சேரியில் வெற்றி பெற்றிருக்க முடியாது. புதுச்சேரி மக்கள் தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையிலேயே வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலிலும் தெரிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

NARAYANASAMY

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த வேட்பாளர்கள் இறுதி நேரத்தில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்ட காரணத்தினால், எதிர்த்துப் போட்டியிடச் சரியான வேட்பாளர்கள் இல்லாமல் போனது சுயேட்சை மற்றும் பாஜக வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கான வேட்பாளர்களைத் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதே புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் திமுக

"திமுகவை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே இந்த சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காகக் கடுமையாகச் செயல்பட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாகவே ஜெகத்ரட்சகனை தேர்தல் தொடங்குவதற்கு முன்பு புதுச்சேரிக்கு அழைத்து வந்து முழு மூச்சுடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் தமிழகத்தைப் போன்று ஸ்டாலின் ஆதரவு அலை புதுச்சேரியில் திமுக வெற்றிக்கு உதவியுள்ளது.

குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட போது, 9 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை மட்டுமே திமுக பிடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டமன்ற தேர்தலில், 13 இடங்களில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக புதுச்சேரியில் திமுக 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது," என்கிறார் சமூக செயற்பாட்டாளர் கண்ணன்.

அரசியல் தலைவர்கள் எதிர்பார்ப்பது போன்று மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறானது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் நடராஜன்.

"காங்கிரஸ் கட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் துணை நிலை ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த காரணத்தினால் சொந்த கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே அதிருப்தியடைந்தனர். மத்திய அரசுடன் இணக்கமான செயல்பாடுகள் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்களை இங்கே செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிக்குச் சென்றனர்.

மற்றொருபுறம் புதுச்சேரியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் ரங்கசாமிக்கு ஆதரவாகச் செயல்படக் கூடியவர்கள். எதிர்காலத்தில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் அமையும் பட்சத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கே அவர்களது ஆதரவு இருக்கும்," என்று கூறுகிறார் நடராஜன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுள்ளது. தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்து வரும் ஒரு சில நாட்களில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். தற்போது வரை தேசிய ஜனநாயக கட்சியில் முதல்வர் யார் என்பது குறித்து பாஜக மேலிடம் உறுதியாகக் கூறவில்லை. இருந்த போதிலும் இந்த கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரே முதல்வர் என்று அறிவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :