தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்: நூலிழையில் தப்பியவர்கள், தவறவிட்டவர்கள் யார் யார்?

பட மூலாதாரம், Twitter
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 7 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
2 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நட்சத்திரங்கள் பலர் வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார்கள். சில பிரபலங்கள் நூலிழையில் தப்பியிருக்கிறார்கள். பல இடங்களில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட இறுதி வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.
சென்னை தியாகராயநகர் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதிதான் தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்திய நாராயணனைவிட வெறும் 137 வாக்குகளே அதிகம் பெற்றிருக்கிறார் அவர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 56,035. நோட்டாவில் 1617 பேர் வாக்களித்துள்ளனர்.
தவறவிட்ட சுப்புலட்சுமி
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஒருவர் வென்றிருக்க, மொடக்குறிச்சி பேரவைத் தொகுதியில் முடிவு வேறு வகையில் அமைந்திருக்கிறது. அங்கு போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

பட மூலாதாரம், Subbulakshmi Jagadeesan/FB
அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி 78125 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியிலும் 2,342 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆட்டம் கண்ட துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடைசி சுற்றுகள் வரை பின்தங்கியிருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும்போது 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த வி ராமு மொத்தம் 84,394 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் துரைமுருகனை விட ராமு கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார். தபால் வாக்குகளில்தான் துரைமுருகனுக்கு 1178 வாக்குகள் அதிமாகக் கிடைத்திருக்கின்றன. நோட்டாவுக்கு 1889 வாக்குகள் கிடைத்துள்ளன.
முருகனுக்கு...
தென்காசி சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். இதேபோல மேட்டூர் தொகுதியில் பாமகவின் சதாசிவம் 656 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
இதேபோல விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன் 862 வாக்குகள் வித்தியாசத்திலும், நெய்வேலியில் திமுகவின் சபா ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்று பேரவைக்குச் செல்ல இருக்கிறார்கள்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒரு பிரபலம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மற்றொரு நட்சத்திரம் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகன் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் கயல்விழி மொத்தம் 89,986 வாக்குகளைப் பெற்றுள்ளார். வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் இருவருக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 400 மட்டுமே. தபால் வாக்குகளில் சுமார் 900 வாக்குகள் கயல்விழிக்கு கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோரும் போட்டியிட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் ஹாசனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. மொத்தம் எண்ணப்பட்ட 26 சுற்றுகளில் 23-ஆவது சுற்றில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வானதி சீனிவாசனுக்குக் கூடுதலாகக் கிடைத்தன. அதன் பிறகு முடிவு மாறிப்போனது.
பிற செய்திகள் :
- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?
- தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் - பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி
- கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்
- கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள்
- பிரசாந்த் கிஷோர்: "இத்துடன் போதும்... நிறுத்துகிறேன், விலகுகிறேன்"
- தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












