மனம் திறந்த கமல்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வேட்பாளர்களை சந்தித்த பின்னணி என்ன?

பட மூலாதாரம், Makkal Neethi Maiyam
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஓய்வில் உள்ளனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்துடன் 4 நாட்கள் பயணமாக கொடைக்கானலில் முகாமிட்டுள்ளார். அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி, `ஹெர்னியா' எனப்படும் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடிகர் கமல் நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின்போது, பிரசாரத்தில் மக்களிடம் கிடைத்த வரவேற்பு குறித்தும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அவர் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனித்தனியாக கமல் சந்தித்து வருகிறார்.
அப்போது பேசும் கமல், `நீங்கள் கொடுக்கும் தகவல்கள் என்பது கட்சியை வலுப்படுத்தவும் மக்களிடம் இன்னும் நெருக்கமாகச் செல்வதற்கும் பயன்படும். நான் வருத்தப்படுவேன் என நீங்கள் நினைக்க வேண்டாம். அதை கேட்பதற்குத்தான் நான் இருக்கிறேன். எது எங்கே சரியாக நடக்காமல் போயிருந்தாலும் அதற்கு நானே பொறுப்பு' எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பிரசாரத்தில் தாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து சில வேட்பாளர்கள் விவரித்துள்ளனர். அவை அனைத்தையும் கமல் உள்வாங்கிக் கொண்டதாக ம.நீ.ம நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், MNM
மேலும், கமலிடம் சில வேட்பாளர்கள் பேசும்போது, ` மக்கள் சாதாரண அடிப்படை விஷயங்களுக்கே சிரமப்படுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், சுகாதாரமின்மை என உள்ளாட்சித்துறை சார்ந்த பிரச்னைகளே அதிகம் உள்ளன. வீட்டுக்குள் குடிநீர் வருவதிலும் வீட்டில் இருந்து கழிவுநீர் செல்வதிலும் மக்கள் ஏராளமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குடிநீர் இல்லாமல் வாஷிங்மெஷின் கொடுப்பதாக கூறப்படும் வாக்குறுதிகளையெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை' எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதி நிலவரம் குறித்துப் பேசிய கமல், `கோவை நகருக்குள்ளேயே பாவப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். அங்கு அடிப்படை வசதிகளுக்குக்கூட மக்கள் கஷ்டப்படுவதை நானே கண்கூடாகப் பார்த்தேன். இதனையே சரிசெய்து கொடுக்காமல் இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். கழிப்பிட வசதியில்லாமல் தெருவைப் பயன்படுத்தும் சூழல்களும் உள்ளன. நாம் இறங்கிச் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன' என வேதனைப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை மக்கள் எதிர்கொள்ளும்விதம், பிரசாரத்தில் கிடைத்த வரவேற்பு, மக்களின் கோரிக்கைகள், தொகுதி நிலவரம் என்ன என்பது குறித்து ஆர்வத்துடன் கேட்டு அறிகிறார்.
`அடுத்தகட்டத்துக்கு நாம் செல்லும்போது இன்னும் சரியான திட்டமிடலோடு செல்ல வேண்டும்' என்பதை ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தி வருகிறார். இதில், சில தொகுதிகளில் நன்றாக உழைத்த தன்னார்வலர்களையும் நேரில் வரவழைத்துப் பாராட்டியதாகவும் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்திப்புகளில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வேட்பாளர் தன் முன்னே அமர்ந்ததும் அவரிடம் பேசும் கமல், ` நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பேசுங்கள். இரண்டாவது கட்ட நிர்வாகிகளிடம் பேசிவிட்டு அந்தக் குறை என்னிடம் வருவதைவிட, நேரடியாக என்னிடமே கூறுங்கள்,' என்கிறார்.
இதனைக் கவனித்த அவரது மருத்துவர் ஒருவர், `அனைவரும் சொல்கின்ற கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி நடக்கிறீர்கள். ஆனால், நாங்கள் சொல்வதை மட்டும்தான் நீங்கள் கேட்பதில்லை. கால் வலிக்கு முழுமையான ஓய்வு கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை மட்டும் காதில் வாங்கிக் கொள்வதில்லை,' என ஆதங்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், MNM
கமல் நடத்தும் வேட்பாளர் சந்திப்பு குறித்து, பல்லாவரம் தொகுதி ம.நீ.ம வேட்பாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `இவ்வளவு வாக்குகள்தான் வாங்கினீர்கள்' என்றெல்லாம் பொதுவாக குறை கூறப்படுவது வழக்கம். அதற்கு முன்னதாகவே, தேர்தல் களத்தில் என்ன நடந்தது என கமல் அழைத்துப் பேசுவதை ஆரோக்கியமான ஒன்றாகத்தான் பார்க்கிறோம். ஒரு வேட்பாளர், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டிருக்கிறார். தொடர்ந்து பிரசாரக் களத்தில் இருந்த ஒருவரிடம், என்ன கருத்துகளைப் பெற முடியும் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார்," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``நான் போட்டியிட்ட தொகுதியில் 40 தன்னார்வலர்கள் சிறப்பாக வேலை பார்த்ததாக கமலிடம் தெரிவித்தோம். `அவர்களை வரச் சொல்லுங்கள்' என்றார்.
மறுநாள் காலை (17 ஆம் தேதி) அவர்களை நேரில் சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேல் அவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் வரையில் இந்த சந்திப்பு தொடரும்," என்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய அரசு தயாராக உள்ளது. கிராம சபைக் கூட்டம், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் என கமல் தொடர்ந்து பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருவதாகவும் ம.நீ.ம நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












