ஸ்ரீதர் வேம்பு: சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் சி.இ.ஓ - எப்படி சாத்தியம்?

பட மூலாதாரம், Zoho Corp
- எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
- பதவி, பிபிசி
"நான் தொலைவிலிருந்து இயங்கும் சி.இ.ஓ" என்கிறார் ஸ்ரீதர் வேம்பு. அவ்வாறு கூறிக் கொண்டு அவர் வெளியே பார்த்தால் பச்சை பசேலென நெற்பயிர்கள் பறந்து விரிந்து கிடக்கின்றன.
ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர், சோஹோ நிறுவனத்தை கடந்த 1996-ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிகான் வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியாவில் நிறுவினர். க்ளவுட் அமைப்பில் இயங்கும் இந்த மென்பொருள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 9,500 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் இந்த சகோதரர்கள் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் என்கிறது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை கலிஃபோர்னியாவில் செலவழித்துவிட்டு, ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை வலுவாக கட்டமைத்த ஸ்ரீதர், அமைதியான ஒரு இடத்துக்கு மாற தீர்மானித்தார். மிகவும் அமைதியான ஒரு தமிழக கிராமத்தில் குடிபெயர்ந்தார்.

பட மூலாதாரம், Zoho Corp
அந்த பச்சைப் பசேலென்று இருக்கும் கிராமம், தென்காசி மாவட்டத்தில் ஒரு மலை அடிவாரத்தில் இருக்கிறது.
அக்கிராமத்தில் 2,000-க்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகிறார்கள். அக்கிராமத்தில் நல்ல பெரிய சாலைகள் எதுவும் இல்லை. எல்லா நேரங்களிலும் தண்ணீர் கிடைக்காது. கழிவுநீர் வடிகால் அமைப்புகள் கூட கிடையாது. மின்சாரம் எப்போது வரும் போகும் எனக் கூறமுடியாது. எனவே ஸ்ரீதர் டீசல் ஜெனரேட்டர்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் இருந்து கொண்டு எப்படி நிறுவனத்தை நிர்வகிக்க முடிகிறது?
இணையம் எனும் மிக முக்கியமான ஒரு சாதனம் இருக்கிறது. ஸ்ரீதர் அதிவேக ஃபைபர் ஆப்டிக் இணைய இணைப்பு வசதியை கொண்டுள்ளார். அதன் மூலம் தன் நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.
ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நிர்வகிக்கும்போது அதற்கான பலன்களும் சேர்ந்தே வருகின்றன என்கிறார் ஸ்ரீதர்.
"பொதுவாக பெரிய முடிவுகளை எடுப்பது போன்ற சூழலை நான் கையாள நேரிடும் மற்றப்படி எனது குழுவினரே பல முடிவுகளை எடுத்துவிடுவர்" என்கிறார்.
கிராமப் புற வாழ்கையைத் தழுவிய ஸ்ரீதர்

பட மூலாதாரம், Zoho Corp
சோஹோ நிறுவனத்தின் எந்த ஒரு மூத்த அதிகாரியோ அல்லது ஸ்ரீதரின் உதவியாளர்களோ அவர் வசிக்கும் கிராமத்துக்கு அருகில் வசிக்கவில்லை. இருப்பினும், தன் நிறுவனத்தின் தலைவர்களோடு நேரடியாக தொடர்பில் இருக்கிறார். அவர்களோடு பணியாற்றுகிறார். அதை மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொள்கிறார் ஸ்ரீதர்.
"நானே ஒரு குழுவுக்கு நேரடியாக தலைமைதாங்குகிறேன். ப்ரோகிராமர்களோடு நெருங்கி பணி செய்கிறேன். சில அதி தொழில்நுட்ப திட்டங்களில் பணியாற்றுகிறேன். எங்களின் பொறியாளர்கள் அடங்கிய மென்பொருள் குழு உலகம் முழுவதும் பரவியிருக்கிறது." என்கிறார்.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட பண்ணை வீட்டில் தற்போது வசித்து வருகிறார் ஸ்ரீதர். அவர் கிராம புற வாழ்கையை முழுமையாக அனுபவித்து வருகிறார். அவரது வீட்டில் குளிர்சாதன வசதி இல்லை. போக்குவரத்துக்கு மின்சார ஆட்டோ ரிக்ஷாக்களைப் பயன்படுத்துகிறார் அல்லது சைக்கிளைப் பயன்படுத்துகிறார். கிராம மக்களோடு பேசுவதற்கு, உள்ளூரில் இருக்கும் டீ கடைக்குச் செல்கிறார்.
"நான் இங்கு வாழ்கையை மிகவும் கொண்டாடுகிறேன். இந்த கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலரோடு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது," என்கிறார்.
சிஇஓ-க்களுக்கு என வகைப்படுத்தப்பட்டிருக்கும் உடைகளை விடுத்து பெரும்பாலான நேரங்களில் பாரம்பரிய உடையான வேட்டியிலேயே காணப்படுகிறார்.
’நான் ஒரு பிரபலமல்ல’

பட மூலாதாரம், Zoho Corp
ஊடக வெளிச்சத்தினால் அவரை உள்ளூர் மக்கள் பலரும் அறிவர். ஆனால், அவரோ தான் ஒரு பிரபலமல்ல எனக் கூறுகிறார். முன்னறிவிப்பின்றி யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தான் இருக்கும் கிராமத்தின் பெயரை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
"கிராம புறத்தில் இருக்கும் சமூக வாழ்கை பெரிதும் மாறுபட்டது. மக்களுக்கு நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள நேரமிருக்கிறது. சிலர் திடீரென உணவருந்த வீட்டுக்கு வருமாறு அழைப்பார்கள். சமீபத்தில் நான் அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்த போது, பல உரையாடல்களை மேற்கொண்டேன்" என்கிறார்.
மேலும் தான் ஆடம்பரமாக எப்போதும் இருந்ததில்லை என்பதால் இடம் மாறிய பிறகு, தான் தன்னுடைய பழைய வாழ்கையை இழக்கவில்லை என கூறுகிறார் ஸ்ரீதர் வேம்பு.
ஸ்ரீதர் தன் வியாபாரம் தொடர்பான விஷயங்களையும், டிரெண்டுகளையும் தெரிந்து கொள்ள சமூக வலைதளத்தைப் பயன்படுத்துகிறார். தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களை பின்பற்றுவதாகவும், பலரோடு உற்சாகமான உரையாடல்களை மேற்கொள்வதாகவும் கூறுகிறார்.
சாட்டிலைட் அலுவலகங்கள்

பட மூலாதாரம், Zoho Corp
கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலகங்கள் மூடப்பட்டு பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள்.
இதன் விளைவாக, ஊழியர்கள் அலுவலகத்துக்கு திரும்ப அனுமதிக்கப்பட்ட பிறகும், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தொலை தூரத்தில் இருந்து வேலை பார்ப்பதை நிரந்தரமாக்க விரும்புகிறார்கள்.
ஆனால் ஸ்ரீதரோ எல்லோருக்கும் முன் இந்த விஷயத்தைச் செயல்படுத்திவிட்டார். கொரோனாவுக்கு முன்பே தானும், தன்னுடைய ஊழியர்களையும் வேறு இடத்துக்கு மாற்றியதன் விளைவாக, தன் நிறுவனத்தில் ஒரு நிலையான வேலை மாதிரி (Sustainable Working Model) இருப்பதாக நம்புகிறார்.
சோஹோ நிறுவனம் தன்னுடைய முதல் கிராம புற அலுவலகத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தென்காசி மாவட்டத்தில் நிறுவியது. அப்போதிலிருந்து சோஹோ நிறுவனம் இந்தியாவின் பல கிராம புறங்களில் 30 சாட்டிலைட் அலுவலகங்களைத் திறந்துள்ளது.
"இப்படிப்பட்ட மாதிரி எப்படி மேம்படும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே இருந்தோம். ஆனால் இப்படிப்பட்ட சாட்டிலைட் அலுவலகங்களை நிறுவ நிறைய முதலீடு செய்தோம். இணைய சாதனங்களுக்கு நிறைய முதலீடு செய்து வருகிறோம்," என்றார்.
20 - 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை பார்க்க விரும்புவார்கள் எனவும், சமூக உரையாடல்களுக்கான தேவையை சாட்டிலைட் அலுவலகங்கள் பூர்த்தி செய்யும் எனவும் எதிர்பார்க்கிறார். இது ஊழியர்கள் சென்னைக்கு வர வேண்டிய தேவையைக் குறைக்கும்.
"எங்கெல்லாம் ஊழியர்கள் குழு இருக்கின்றதோ, அங்கெல்லாம் சாட்டிலைட் அலுவலகங்களை நிறுவ முயல்கிறோம். ஊழியர்கள் ஒரு சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்துவிட்டு, மற்ற நாட்களில் அலுவலகம் வரலாம்" என விளக்குகிறார்.
சாட்டிலைட் அலுவலகங்களில் 100 பேர் வேலை பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீதர்.
ஏன் இந்த இடமாற்றம்?

பட மூலாதாரம், Zoho Corp
இந்தியாவில் பிறந்த ஸ்ரீதர், தன் மூதாதயர்கள் கிராமத்தில் கழித்த பள்ளி விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக நினைவுகூர்கிறார்.
கல்விக்காகவும், வேலைக்காகவும் அமெரிக்காவுக்குச் சென்ற போதும், ஒரு நாள் இந்திய கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என விரும்பினார்.
ஸ்ரீதர் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வெளியேறுவதாகக் கூறிய போது, அவரோடு பணியாற்றியவர்களுக்கு அவரது முடிவு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை.
"ஸ்ரீதர் எப்போதும் தொலைவிலிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கலிஃபோர்னியாவில் இத்தனை ஆண்டு காலம் இருந்த போதும், 90 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் சென்னையில் இருந்து தான் வேலை செய்தனர்" என்கிறார் சோஹோ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவர் ப்ரவல் சிங்.
ஸ்ரீதர் தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், சிங்கப்பூர் என பல இடங்களில் இருக்கும் தன் ஊழியர்களோடு, தன் கிராமத்தில் இருந்த படியே தொடர்ந்து உரையாடுகிறார்.
கல்வி மீதான விரக்தி

பட மூலாதாரம், Zoho Corp
கல்வி அமைப்பு முறையை கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீதர், சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் இருக்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இருப்பினும், தன் வெற்றிக்கும் தன் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என குறிப்பிடுகிறார் ஸ்ரீதர்.
"கணிதம் சார்ந்த துறையில் பேராசிரியர் ஆவதற்காக என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன், இப்போது மிகவும் அடிப்படையான கூட்டல் கழித்தலைச் செய்து கொண்டிருக்கிறேன்"
அன்றாட வாழ்கையில் கோட்பாடுகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்களுக்கு புரிய வைப்பதற்கு முன், எந்த வித சூழ்நிலையுமின்றி அவர்களுக்கு அக்கோட்பாடுகளைக் கற்பிப்பதில் எந்த பயனும் இல்லை என்கிறார் ஸ்ரீதர்.
"பயிற்சியில் நான் ஒரு எலெக்ட்ரிகல் பொறியாளர். நான் மேக்ஸ்வெல் கோட்பாடுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை"
"மேக்ஸ்வெல் கோட்பாடுகள் மிகவும் முக்கியமானது. மின்சார மோட்டார்கள் எப்படி இயங்குகின்றன என்பதை, அம்மோட்டார்களை பிரித்தும் சேர்த்தும் பார்த்த பின் தான் அது முக்கியமானதாக இருக்கும் என நான் வாதிடுவேன்" என்கிறார் ஸ்ரீதர்.
சோஹோ பள்ளிகள்

பட மூலாதாரம், Zoho Corp
சோஹோ ஸ்கூல்ஸ் என்கிற பெயரில் ஸ்ரீதர் பள்ளிகளை அமைத்து நடத்தி வருகிறார். இப்பள்ளியில் பழங்கால முறையில் பயிற்றுவிக்கும் முறையோ அல்லது கற்பிக்கும் முறையோ இல்லை.
தமிழகத்தில் அப்படி இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. தென்காசியில் அமைந்திருக்கும் அப்படிப்பட்ட பள்ளி ஒன்றை அடிக்கடி பார்வையிடுகிறார் ஸ்ரீதர்.
மென்பொருள் தொழில்நுட்பம், நிர்வாக வடிவமைப்பு, க்ரியேட்டிவ் ரைட்டிங் என பல தலைப்புகளில் இரண்டு ஆண்டு காலத்துக்கு தீவிரமான பயிற்சி வகுப்புகள் இந்த பள்ளிக் கூடத்தில் நடத்தப்படுகிறது. இப்பள்ளிகளில் சேர 17 - 20 வயதுடையவர்களாக, 12 ஆண்டுகள் பள்ளிக் கூடத்தில் அடிப்படைக் கல்வியைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உணவும், மாதம் 140 அமெரிக்க டாலர் பயிற்சி ஊதியமும் வழங்கப்படுகிறது.
"நாங்கள் உங்களுக்கு ப்ரோகிராமிங்கைக் கற்றுக் கொடுக்கிறோம். நீங்கள் உண்மையான செயலிகளை வடிவமையுங்கள்" என்கிறார் ஸ்ரீதர். இதை "ஒரு விஷயத்தைச் செய்வதன் மூலம் கற்றுக் கொள்வது" என்கிறார்.
"திரவ இயக்கவியலைப் புரிந்து கொள்ளாமலேயே நீங்கள் ஒரு நல்ல தண்ணீர் குழாய்களைச் சரி செய்யும் பிளம்பராக இருக்க முடியும். அதே போல கணிணி அறிவியலின் ஆழமான கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமலேயே நீங்கள் ஒரு நல்ல ப்ரோகிராமராக இருக்க முடியும். அதைத் தான் முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
சுமார் 900 மாணவர்கள் சோஹோ பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு தற்போது அந்நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
"நாங்கள் பல விஷயங்களைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் அதை பொது நலப் பணி எனக் குறிப்பிட விரும்பவில்லை. நாங்கள் வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வது, எங்கள் நிறுவனத்துக்கு உதவும், அதோடு பயிற்சி பெறுபவருக்கும் உதவுகிறோம்" என்கிறார் ஸ்ரீதார்.
இதோடு நிறுத்தப் போவதில்லை

பட மூலாதாரம், Zoho Corp
தென் இந்தியாவில் கிராம புற மற்றும் பகுதி நகர்புற நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் 250 படுக்கைகளைக் கொண்ட ஒரு மருத்துவமனையைக் கட்டும் திட்டத்தை அறிவித்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
கடந்த ஜனவரி மாதம் இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து கிராமத்தில் இருந்து கொண்டே வேலை செய்யவிருக்கிறாரா?
கொரோனா பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வந்த பின் தன் அமெரிக்க அலுவலகத்தைப் பார்வையிட இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் அது ஒரு சிறிய சுற்றுப் பயணமாக இருக்கும் என்கிறார்.
அமெரிக்காவுக்கே மீண்டும் நிரந்தரமாகச் செல்லும் யோசனை இல்லை என்கிறார்.
"நான் ஒரு நிறுவனத்தை நடத்துகிறேன். என் நிறுவனம் செல்வச் செழிப்போடு இருக்கிறது. எனவே நானும் செல்வச் செழிப்போடு வாழ்கிறேன் என்று பொருளல்ல. எனக்கு அதில் விருப்பமில்லை"
"நான் இந்த வாழ்கையை எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன்"
"பணம் ஒரு சர்வரோக நிவாரணி என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் சமூகத்தோடு ஒன்றி இருக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்
- க்யூபாவில் பதவி விலகும் ராவுல் காஸ்ட்ரோ: முடிவுக்கு வந்த 60 ஆண்டுகால சகாப்தம்: அடுத்தது என்ன?
- சரக்கு கப்பல் மோதியதில் மீன்பிடி படகில் இருந்த 9 பேர் மாயம், மூவர் சடலமாக மீட்பு - என்ன நடந்தது?
- "அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்" - விவேக் மனைவி அருட்செல்வி
- இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று: பிரசாரத்தை ரத்து செய்த ராகுல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












