தங்கம் விலை உயர்வு: முதலீடு செய்ய சரியான நேரமா இது? - கொரோனா வைரஸ் பரவலால் திடீர் விலையேற்றம்

தங்கம் விலை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவின் தங்கத் திருவிழாவான அக்ஷய திருதியை, 2021ஆம் ஆண்டுக்கான தேதி மே மாதம் வரவிருக்கிறது. அதேபோல சித்திரை, வைகாசி, ஆனி என இந்தியா முழுக்க வரிசையாக திருமண நிகழ்வுகள் நடக்கும் காலமிது. இந்திய திருமணங்களில் தங்கத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது.

எனவே இந்த நேரத்தில் தங்கம் விலை ஏற்றம் கண்டால், அது இந்தியாவிலிருக்கும் சாமானியர்களை பெரிதும் பாதிக்கும். இத்தனை நாட்களாக சரிந்து கொண்டிருந்த தங்கம் விலை, தற்போது ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணங்களைப் பார்ப்பதற்கு முன், அதன் விலை நிலவரங்களைப் பார்த்துவிடுவோம். சென்னையில் 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,770 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,375 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2020 காலகட்டத்தில், உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை மார்ச் 2021 வரை தொடர்ந்து சரிவை கண்டு வந்தது. தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறது.

எவ்வளவு விலை ஏற்றம்

கடந்த மார்ச் 31-ம் தேதி சென்னையில் 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,550 ரூபாயாக இருந்தது. தற்போது அதே 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 4,770 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சுமார் 220 ரூபாய் (4.8 சதவீதம்) விலை அதிகரித்திருக்கிறது.

ஏன் இந்த திடீர் விலையேற்றம்?

தங்கம் விலை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு பங்குச் சந்தைகளிலும், உலக பொருளாதாரத்திலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் தற்போது மிகவும் முக்கியமான ஒன்று கொரோனா தொற்று.

உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி 1.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்படி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு இருந்ததை விட, தற்போது புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. எனவே கடந்த ஆண்டைப் போல, மீண்டும் பொருளாதாரம் முடங்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. சில மேற்கத்திய நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருக்கின்றன.

பொருளாதாரம் சரியாக இல்லாத போதும், போர் போன்ற காலகட்டங்களிலும், பூகோள அடிப்படையிலான பிரச்னைகள் எழும் போதும் தங்கத்தின் விலை இயல்பாகவே அதிகரிக்கும்.

அந்த சமயங்களில் முதலீட்டாளர்கள், மற்ற முதலீடுகளைப் காட்டிலும் தங்கத்தை அதிகம் நம்புவார்கள். இதற்கு சாட்சியாக கடந்த பல மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள், தற்போது சில வாரங்களாக ஏற்றம் காண முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே தற்போது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு, கொரோனா மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதுபோக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.35 ரூபாயாக விழ்ச்சி கண்டிருக்கிறது. ஆக டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதால் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். இதுவும் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இது எல்லாம் போக, சில மாதங்களுக்கு முன்பு, சர்வதேச சந்தையில் 1,675 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த, ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை மீண்டும் 1,740 டாலரைத் தொட்டு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இனி வரும் வாரங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2020 ஆகஸ்டில் உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களின் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், அடுத்த சில ஆண்டுகளில் தங்கம் புதிய உச்சத்தைத் தொடும் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறி இருந்தார். அதோடு தங்கத்தின் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் முதலீடு செய்வேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலை 10 முதல் 15 சதவிகிதம் சரிவதெல்லாம் பெரிய வீழ்ச்சி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறியது போலவே கடந்த ஆகஸ்டு 2020 முதல் மார்ச் 2021 வரை சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த தங்கம் தற்போது, கடந்த சில வாரங்களாக மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலை 2,000 டாலரை தொடும் என, கடந்த ஆண்டு கணித்து இருந்தது கோல்ட்மேன் சாக்ஸ் என்கிற முன்னணி நிதி நிறுவனம். கடந்த ஆண்டே, சர்வதேச தங்கம் விலை 2,000 டாலரைத் தொட்டு வர்த்தகமானதை நாம் கண் முன்னே கண்டோம்.

அந்நிறுவனத்தை தொடர்ந்து, பேங்க் ஆஃப் அமெரிக்கா என்கிற நிறுவனம், கடந்த ஏப்ரல் 2020-ல், ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலை அடுத்த 18 மாதங்களுக்குள் 3,000 அமெரிக்க டாலரைத் தொடும் எனக் கணித்து இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

அதே போல ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும், சர்வதேச தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 2,000 டாலரை மீண்டும் தொடும் என கணித்திருக்கிறது.

உலக பொருளாதார சூழல் மீண்டும் பழையபடி சீராக இயங்கவில்லை எனில், கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்த படவில்லை எனில், இவர்கள் கணித்தது போல தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொடும் என எதிர்பார்க்கலாம்.

இப்போது தங்கத்தை வாங்கலாமா?

தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில், தங்கத்தை வாங்கலாமா? என சென்னையில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம்.அதற்கு "22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 2020 காலகட்டத்தில் சுமார் 5,300 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது அதே தங்கம் சுமார் 4,300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இது கிட்டத்தட்ட 19 சதவீத விலை சரிவு. கொரோனா பரவல் மற்றும் இந்திய ரூபாய் பலவீனமடைந்திருப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கு மேல் விலை வீழ்ச்சி காண்பதற்கான வாய்ப்பு குறைவு. இனி வரும் மாதங்களில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. எனவே தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் இப்போதே வாங்குவது நல்லது" என்றார்.

அக்ஷய திருதியை

மீண்டும் அச்சமூட்டும் கொரோனா: உயரும் தங்கத்தின் விலை - முதலீடு செய்ய சரியான இது நேரமா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தங்கம் மிக அதிகமாக விற்பனையாகும் காலகட்டங்களில் அக்ஷய திருதியை தினமும் ஒன்று. ஏற்கனவே சர்வதேச தங்கம் விலை, அதிக அளவில் கொரோனா பரவுவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதனோடு அக்ஷய திருதியை தினத்தன்று ஆபரண தங்கத்தை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். எனவே இயற்கையாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அக்‌ஷய திருதியை முன்னிட்டு மேலும் அதிகரிக்கலாம் என்பதே சந்தை வல்லுநர்களின் கருத்தாகவும் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: