நடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்

- எழுதியவர், ஏ.ஆர்.மெய்யம்மை
- பதவி, பிபிசி தமிழுக்காக
(நடிகர் விவேக் இறந்தபோது எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அவரது நினைவு நாளை ஒட்டி மீண்டும் பகிரப்படுகிறது).
"எனது நகைச்சுவை உணர்வுக்கு ஊன்றுகோலாக இருப்பது மதுரை. அந்த மண்ணிலிருந்து தான் நான் உத்வேகம் பெறுகிறேன். மதுரையின் தெருக்களில் ஒரு நாள் வலம் வாருங்கள், அந்த மக்கள் பேசும் விதம், நடந்து கொள்ளும் விதம் உங்களை மகிழ்விக்கும். அவர்கள் உள்ளார்ந்த நகைச்சுவை திறனை கொண்டுள்ளார்கள்."
சின்னக் கலைவாணர் என்று முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் போற்றப்பட்ட விவேக், ஒரு முறை தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறிய வரிகள் இவை.
இன்று அவர் வளர்ந்த மதுரை மண்ணும், அவர் படித்த அமெரிக்கன் கல்லூரியும், அவரது எதிர்பாராத மரணத்தை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றன. விவேகானந்தன் என்ற விவேக் பியூசி மற்றும் இளங்கலை வணிகவியல் என நான்கு ஆண்டுகள் (1978-1982) அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்.
மதுரைக்கு வரும் போதெல்லாம் அவர் தான் படித்த கல்லூரிக்கு செல்ல தவறியதில்லை. அவர் படித்த கல்லூரியின் மீதும், அவரின் ஆசிரியர்கள் மீதும் அலாதி பிரியம் வைத்திருந்தார். அவர் படித்த கல்லூரி தான் அவரது கலை ஆர்வத்துக்கு வித்திட்டது என்று அவரே பலமுறை கூறியுள்ளார். அவரது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை, அவரது குறும்புத்தனத்தை, கலை தாகத்தை, உதவும் மனப்பான்மையை, சமூக அக்கறையை, அவருடனான நாடக அனுபவங்களை பிபிசி தமிழிடம் நினைவு கூறுகின்றனர் அவரது ஆசிரியர்களும், நண்பர்களும்.
பெண்கள் கல்லூரிக்கு தாவணியில் சென்ற விவேக்

நாங்கள் பியூசி படிக்கும் போது 'நமோ நாராயணா' என்ற ஒரு நாடகத்தை அவரே எழுதி அதில் நாரதராக நடித்தார். அதற்கு மாணவர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது, என்று கூறுகிறார் அவரது நெருங்கிய வகுப்புத் தோழரும், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலை பள்ளியின் முன்னாள் துணை முதல்வருமான ஆர். பாஸ்கரன்.
மதுரையில் உள்ள புகழ்பெற்ற பெண்கள் கல்லூரிக்கு ஒரு முறை சிறு நாடகப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது விவேக் வீட்டில் இருந்து பாவாடை தாவணியில் வந்தார். அங்கிருந்த காவலர்கள் அவரை பெண் என்று நினைத்து உள்ளே அனுமதித்தனர். அவர் மேடை ஏறி நாடகத்தில் நடித்த போது தான் அனைவருக்கும் அவர் பெண் வேடம் அணிந்து வந்திருந்த உண்மை தெரிய வந்தது. அந்த நாடகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது, என்று அந்த சுவையான சம்பவத்தை நினைவு கூர்கிறார் பாஸ்கரன்.
"விவேக் நன்றாக படிப்பவர். நானும் மற்றும் சில நண்பர்களும் சுமாராக படிப்போம். வீட்டிலிருந்து சரியாக இரவு 11 மணிக்கு தமுக்கம் மைதானத்தின் எதிரே இருக்கும் போலீஸ் பீட்டிற்கு வந்துவிடுவார்.
அந்த தெருவிளக்கிற்கு கீழ் அமர்ந்து இரவு முழுக்க எங்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பார். நன்றாக படித்தாலும் வகுப்புகளில் அவரது சேட்டைக்கு பஞ்சமிருக்காது. வகுப்பு சலிப்பு தட்டினால் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர் திடீரென முன் வரிசைக்கு சென்று பிளேட் ஒன்றை வைத்து ஓசை எழுப்பி தாளம் போடுவார்.

ஆசிரியரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். இப்படி தன்னையும், தன் நண்பர்களையும் எப்பவுமே உயிர்ப்புடன் வைத்திருப்பது அவருக்கு கை வந்த கலை. இளமை காலங்களில் அவருக்கு பொருளாதார கஷ்டம் இருந்த போதும் சரி, அவர் மற்ற நண்பர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்த போதிலும் சரி, இத்தனை ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட அவர் நொந்து பேசி நான் கேட்டதில்லை, என்று கூறும் பாஸ்கரன் கடைசியாக பத்து நாட்களுக்கு முன் தான் அவருடன் பேசியிருக்கிறார்.
வகுப்பு தோழர்கள் அனைவரும் கடைசியாக 2019-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானலில் ஒரு பள்ளியில் கூடுகை நடத்தினர். அப்போது தான் கொண்ட ஒரு கோடி மரம் நடும் லட்சியத்தை அடைய, அந்த வளாகத்தில் சில மரக்கன்றுகளை நட்டார் விவேக்.
முதல்வரிடம் நடித்து ஏமாற்றிய குறும்பு
அவர் படித்த வணிகவியல் துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி. கிரக ராஜேந்திரன் பேசும் போது சுவையான சம்பவம் ஒன்றை மலரும் நினைவாக பகிர்கிறார்: ஒரு முறை கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாணவராக விவேக்கும் அதில் பங்கெடுத்தார். என் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அவரை அழைத்து அது சம்பந்தமாக பேசிய போது மிகவும் பணிவுடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு பிறகு அறையை விட்டு வெளியே வந்தவுடன், 'சார், என் நடிப்பு எப்படி?' என்று கேட்ட குறும்புத்தனம் இன்னும் நினைவிருக்கிறது.

நடிப்பின் மீது பெரும் ஈர்ப்பு இருந்த போதிலும், கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்ட போதிலும், படிப்பை அவர் நிராகரித்தது இல்லை. என்னுடைய சிறந்த மாணவர்களில் விவேக் ஒருவர். அவர் மரணம் பெரும் துயரை தருகிறது, என்று உணர்ச்சி வசப்படுகிறார் பேராசிரியர் ராஜேந்திரன்.
'கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவரின்' பங்கு
எனக்கு கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்களில் முதலாமவர் அவர் என்று விவேக் தன்னை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் கூறி மரியாதை செய்த அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ் பேராசிரியருமான சாமுவேல் சுதானந்தா, "ஒரு ஆசிரியனாக நான் மாணவன் எழுதி கொண்டு வந்த நாடகக் கதையை திருத்தி அந்த சிறு நாடகத்தை கல்லூரி ஆண்டு விழாவில் அரங்கேற்ற உதவி செய்தேன். பல பக்கங்கள் இருந்ததை ஒரு சில பக்கங்களில் அடக்கி திருத்தம் செய்ததில் விவேக்கிற்கு வருத்தம் இருந்தது.

பட மூலாதாரம், Chiller
ஆனால் அந்த 'ஸ்கிட்' பெரும் வரவேற்பை பெற்றதும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கலைத் திறனை மேம்படுத்தி கொண்டார். கல்லூரியில் படித்த அந்த மூன்று ஆண்டுகளும் நடிப்பு, நாடகம் என அவரது பங்களிப்பு இருந்தது. வசனம் இல்லாத, திறந்த மேடையில், டீக்கடை நாடகம் ஒன்று. அதில், அமெரிக்க நடிகர் ப்ரூஸ்லீ படம் பார்த்துவிட்டு வரும் ரசிகன் அந்த தாக்கத்தை எப்படி வெளிப்படுத்துவான் என்று விவேக் நடித்து பிரமாதப்படுத்தியது, மதுரை பழைய டவுன் ஹால் சாலையை மேடையில் கொண்டு வந்த போது மருந்து விற்பனையாளராக உயிர்ப்புடன் நடித்தது போன்றவை இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன.

அவரது நகைச் சுவைகளை நாடகங்களில் பயன்படுத்தி அவரை வைத்து பல உத்திகளை பரிசோதனை செய்து பார்ப்போம். அதை அவர் நேர்த்தியாக செய்வார். என்னுடைய தாக்கம் அவர் வளர்ச்சிக்கு உதவியது என்று நினைத்தார். அதற்காக அவரது வளர்ச்சிக்கான பெருமையை நான் எடுத்துக்கொள்ள முடியாது. கொடுத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனக்கு பிடித்த திரைப்படத் துறையை தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தார்," என்கிறார் சாமுவேல் சுதானந்தா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகை சுஹாசினி விவேக்குடன் நடத்திய 'Weekend with Stars' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி வாழ்த்தியபோதுதான் தன் மாணவ நண்பனை கடைசியாகப் பார்த்ததாகச் சொல்கிறார் சுதானந்தா.
படித்த கல்லூரி மீது தீராக் காதல்
நடிகர் விவேக் மதுரைக்கு வரும் போதெல்லாம் தான் படித்த கல்லூரிக்கு வருகை தராமல் இருந்ததில்லை. எங்கள் கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக 2017-ம் ஆண்டு கலந்து கொண்டு அவரின் ஆசிரியர்கள் கிரக ராஜேந்திரன் உட்பட மூவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

பட மூலாதாரம், Chiller
அவர்களால்தான் நான் நல்ல நிலைமையில் இருப்பதாகப் பேசியது நெகிழ்ச்சி அடையச் செய்தது. மீண்டும் 2019-ம் ஆண்டு வருகை புரிந்து காட்சி தொடர்பியல் துறையின் ஒலி-ஒளி ஆய்வகத்தை திறந்து வைத்து பாட்டு பாடி, மாணவர்களிடையே உரையாடினார். அவர் படித்த வணிகவியல் துறைக்கு முன்புள்ள வெற்றிடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகளை நட்டார். இன்று அது வளர்ந்து எங்கள் கல்லூரிக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது, என்கிறார் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்.
நடிகர் விவேக் இறந்த செய்தி அறிந்து முதல்வர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் அவருக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல மாணவர்களை திரைப்படத் துறைக்கு அனுப்பி அவர்கள் மிளிர்வதற்கு துணை நின்ற அமெரிக்கன் கல்லூரி இன்று அவர்களில் ஒருவரை இழந்து வாடுகிறது. ஆசிரியர்களும், அவரின் கல்லூரி மற்றும் வகுப்பு தோழர்களும் அவரது இழப்பை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்வது அதற்கு சாட்சி.
அம்பேத்கரை மோதியோடு ஒப்பிட்டு இளையராஜா பேசியது என்ன?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












