சரக்கு கப்பல் மோதியதில் மீன்பிடி படகில் இருந்த 9 பேர் மாயம், மூவர் சடலமாக மீட்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் படகில் இருந்து மாயமான 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான 'அரப்பா' என்ற மீன்பிடி விசைப் படகில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் மாணிக்தாசன் ஆகிய இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், வேதமாணிக்கம், பழனி, சக்தி முருகன், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டைச் சேர்ந்த டெனிசன் உட்பட 7 தமிழக மீனவர்களும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம் 14 பேருடன் கடந்த 11-ம் தேதி இரவு கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வேப்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் நோக்கி மீன் பிடிக்க சென்றனர்.
சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதல்

மீனவர்கள் 12-ஆம் தேதி நள்ளிரவு மீன்பிடி விசைப்படகில் மங்களூரிலிருந்து 42 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த 'ஏ.பி.எல். லீ ஹாவ்ரே' என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல், மீன்பிடி விசைப்படகின் மீது மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் ஆகிய இருவரும் கப்பல் மாலுமிகளால் மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்து இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல், படகு, ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் மற்ற மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோரா காவல் படையின் தேடுதலில் முதல்கட்டமாக 3 மீனவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு மங்களாபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அந்த மூன்று உடலில் இரண்டு உடல் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது மாமனார் மாணிக்தாசன் என்பதும், மற்றொரு உடல் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்ததையடுத்து உடல்கள் குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட இருவரது உடல்களும் குளச்சலில் உள்ள தேவாலையத்தின் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டன.
எஞ்சிய மீனவர்களை இந்திய கடலோர காவல்படை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை மதியம் ஒரு உடலும் இரவு மூன்று உடல்களும் மீட்கப்பட்டன.
இதில் ஒரு உடல் ராமநாதபுரம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த பழனி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று உடல் அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மருத்துவ குழுக்கள் மூலம் மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் அந்த மூன்று உடல்கள் யார் என தெரியவரும் என ராமநாதபுரம் மீன் வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைப்பற்றபட்ட பழனி உடல் ஞாயிற்றுகிழமை சொந்த ஊரான கன்னிராஜபுரத்தஇல் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் நடவடிக்கையை தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை சொந்த ஊரான கன்னிராஜபுரத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.
விபத்தை ஏற்படுத்திய சரக்குக் கப்பலை நடுக்கடலில் தடுத்து வைத்துள்ளனர் கடலோர காவல் படையினர்.
மாயமான மீனவர்களை விரைந்து தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன நடந்தது?
நடுக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கன்னிராஜபுரத்தை சேர்ந்த வேல்முருகன் தான் எவ்வாறு மீட்கப்பட்டார், நடுக்கடலில் அன்று இரவு என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்.
"ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தில் இருந்து என்னுடைய உறவினர்கள் நான்கு பேர் 9ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள அலெக்சாண்டர் மற்றும் மாணிக்தாசனுடன் இணைந்து மொத்தமாக தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டோம்.
பின்னர் அங்கிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 பேர் என மொத்தமாக 14 பேர் ஒரு மீன்பிடி விசைப்படகில், கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணியளவில் மீன்பிடி சாதனங்களுடன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றோம்.
அன்று இரவு மீன் பிடிப்பதற்காக வலை வீசினோம் போதுமான அளவு மீன்கள் சிக்கவில்லை எனவே, தொடர்ந்து நாங்கள் மங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
பின் 12ஆம் தேதி நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென பலத்த மழையுடன் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டது. கன மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து பார்த்த போது கடலில் எதிரே வருவது எதுவும் தெரியவில்லை இதனால் தொடர்ந்து படகை இயக்க முடியவில்லை.
அலெக்சாண்டர் மற்றும் மாணிக்தாசனை தவிர்த்து மீனவர்கள் அனைவரும் படகுக்கு அடியில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சென்றோம். அப்போது திடீரென எங்கள் மீன்பிடி படகின் மீது ஏதோ ஒன்று மோதியது. மூன்று நிமிடத்தில் மீன்பிடி படகு கடலில் மூழ்கத் தொடங்கியது.
உடனடியாக படகிற்குள் இருந்த நான் எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பா ஒன்றை பிடித்து நீந்தி தப்பிக்க முயற்சி செய்தேன். பின்னர் படகின் மீது மோதியது என்னவென்று பார்த்தபோது அது மிகப்பெரிய சரக்கு கப்பல் என தெரிய வந்தது.
எங்கள் மீன்பிடி படகின் மீது மோதிச் சென்ற சரக்கு கப்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்தை நோக்கி திரும்பி வரத் தொடங்கியது. பின்னர் அந்தக் கப்பலில் இருந்து வந்த வெளிச்சத்தில் நான் கடலில் தத்தளிப்பது தெரிந்தது. உடனடியாக கப்பலில் இருந்த மாலுமிகள் கடலில் இருந்து என்னையும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரையும் மீட்டு கப்பலுக்குள் அழைத்து சென்றனர்.
மீட்கப்பட்ட எங்களுக்கு கப்பலில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நான் வந்த மீன்பிடி படகு என் கண் முன்னே கடலில் மூழ்கியது. உடனடியாக நான் சரக்கு கப்பலின் கேப்டனிடம் மூழ்கிய படகிற்குள் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். அவர்களை காப்பாற்றுமாறு கேட்டேன். அதற்கு அந்த கப்பல் கேப்டன் விபத்து ஏற்பட்டதில் மூழ்கிய படகில் உள்ள அனைவரையும் மீட்க முழு உதவி செய்வதாக கூறினர்.
பின்னர் அதிகாலை 6 மணியளவில் எங்கள் மீன்பிடி படகுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் விபத்து நடந்த பகுதியில் மாயமான மீனவர்களை தேடினர்.
தகவலறிந்த கடலோர காவல்படை மீனவர்களுடன் இணைந்து தேடிய போது கடலில் மிதந்த 3 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் குளச்சலை சேர்ந்த அலெக்சாண்டர், மாணிக்தாசன் மற்றும் வங்காளத்தை சேர்ந்த ஒருவர் என 3 பேர் அடையாளம் காணப்பட்டது. எஞ்சிய 9 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
எங்களது படகு விபத்துக்குள்ளான பகுதியில் 5 கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களும், 3 ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை யாரும் மீட்கப்படவில்லை.
எங்கள் மீன்பிடி படகின் மீது மோதிய சிங்கபூரை சேர்ந்த சரக்கு கப்பல் மீது வழக்கு பதிவு செய்த இந்திய கடலோர காவல் படையினர் சரக்கு கப்பலை சிறைபிடித்து நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
எஞ்சிய 9 மீனவர்களின் உடல்கள் கிடைக்கும் வரை சரக்கு கப்பல் எங்கேயும் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது." எனக் கூறினார்.
நடுக்கடலில் மாயமான 9 மீனவர்களை மீட்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மீட்டு தரும்படி வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
2 மாத கைகுழந்தையுடன் தவிக்கும் மனைவி

நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் மாயமான வேத மாணிக்கத்தின் மனைவி விஜயா பிபிசி தமிழிடம் பேசுகையில் "எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் எங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் என் கணவர் கடந்த வெள்ளிகிழமை மீன் பிடிப்பதற்காக குளச்சல் சென்றார். இரண்டு மாத குழந்தை உள்ளதால் மீன் பிடிக்க வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். இந்த ஒரு முறை மட்டும் மீன்பிடிக்க வெளியூர் சென்று வருகிறேன் இனிமேல் வெளியூர் செல்ல மாட்டேன் என கூறி சென்றார்.
பின் ஞாயிற்றுக்கிழமை இரவு என் கணவர் என்னுடனும், என் மகனுடனும் வீடியோ காலில் பேசினார். நான் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறேன் தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள் சீக்கிரம் திரும்பி வந்து விடுவேன் என்றார். அது தான் என்னிடம் அவர் பேசிய கடைசி வார்த்தை.
விபத்து நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த பிஞ்சு குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.
அவரை எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள். என்னால் என் கனவர் இல்லாமல் வாழ முடியாது உடனடியாக அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைத்தார் வேத மாணிக்கத்தின் மனைவி விஜயா.
"உயிருடன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்"
கப்பல் விபத்தில் மாயமான மீனவர் சக்தி முருகனின் உறவினர் ராணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் கணவர் தம்பி சக்தி முருகன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாக என் கணவரிடம் சொல்லி விட்டு கேரளா சென்றார்.
செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் மீன்வளத் துறை அதிகாரிகள் இருவர் வந்து சக்தி முருகன் ஆதார் கார்டை கேட்டனர். எதற்காக அவரின் ஆதார் கார்டை கேட்கிறீர்கள் என கேட்டதற்கு அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என கூறிச் சென்றனர்.
பின் புதன்கிழமை காலை சக்தி முருகன் விபத்தில் இறந்துவிட்டதாக போன் வந்தது. அதன் பின் விசாரித்த போது தான் எங்களுக்கு வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதும், எங்கள் கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 4 பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதும், எஞ்சியவர்களை தேடி வருகிறார்கள் என்றும் தெரியவந்தது" என கூறினார்.
மேலும் பேசியவர் "முன்பெல்லாம் சக்தி முருகன் தருவைகுளம், தூத்துக்குடி போன்ற உள்ளூர்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார். ஆனால் தற்போது தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதால் சக்தி முருகன் மீன்பிடிக்க கேரள சென்றார்.
எங்கள் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் இதுவரை காணவில்லை. அரசு தரப்பில் கேட்கும் போது தொடர்ந்து தேடி வருவதாக கூறி வருகின்றனர். உடனடியாக காணாமல் போன அனைவரையும் உயிருடன் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருடன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்" என்கிறார் ராணி.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
- இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு
- இளவரசர் ஃபிலிப்: அரசி மீது கொண்டிருந்த தளராத விசுவாசம் கொண்டாடப்படும்
- விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை - ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: நரேந்திர மோதி, எடப்பாடி, ஸ்டாலின், கலைஞர்கள் இரங்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












