இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை: ஓரிரு தினங்களில் விடுதலையான மீனவர்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமா?

ஓரிரு தினங்களில் விடுதலையான இந்திய மீனவர்கள் - தமிழக தேர்தலா காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 54 இந்திய மீனவர்கள் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இரண்டே தினங்களில் விடுதலை செய்யப்பட்டமை, பல்வேறு தரப்பினர் இடையே பேசுப் பொருளாக மாறியுள்ளது.

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த 54 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காததை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் வகையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும், தமிழ்நாட்டு மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.

எனினும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டே தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை, தற்போது பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, இந்த தேர்தலில் தமக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் விடுதலை செய்துக்கொண்டுள்ளதாக தற்போது பேசப்பட்டு வருகின்றது.

Sri lanka navy

பட மூலாதாரம், Sri lanka navy

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை இந்திய அரசாங்கத்தினால் கொடுக்க முடியாது என கூறிய அவர், தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இராஜீய ரீதியாக, எச்சரிக்கை விடுத்து மீனவர்களை விடுதலை செய்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இலங்கை அரசாங்கம் இந்த மீனவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது விடுதலை செய்துள்ளதா என பிபிசி தமிழ், கடற்றொழில் அமைச்சிடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அவர், அவ்வாறு கிடையாது என கூறினார்.

இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை

பட மூலாதாரம், Sri lanka navy

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தந்த நாடுகளுக்கு இடையில் அரசியல் தேவை இருக்கலாம் எனவும், அதனடிப்படையிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகின்ற பின்னணியிலேயே, இந்த விடுதலையும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதற்கு பின்னரான காலத்தில் இலங்கை கடல் எல்லைக்குள் வருகை தரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இந்த 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: