விவேக் மனைவி அருட்செல்வி: "அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்"

விவேக்

பட மூலாதாரம், Twitter

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அரசு மரியாதை அளித்ததை `நான் என்றும் மறக்கமாட்டேன்` என விவேக்கின் மனைவி அருட்செல்வி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு பிரியமான மரக்கன்றுகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக் மகள் தேஜஸ்வினி அவருக்கு இறுதி மரியாதை செய்த பின்னர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பலரும் அவரது இல்லம் அமைந்துள்ள சாலிகிராமம் தொடங்கி மேட்டுக்குப்பம் வரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ''என் கணவரை இழந்துள்ள நேரத்தில் எங்களுக்கு தக்க தருணத்தில் உதவிய மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை செலுத்தியதற்கு நன்றி. அதை எப்போதும் நாங்கள் மறக்கமாட்டோம். காவல்துறை சகோதர்களுக்கு மிக்க நன்றி. ஊடகத்துறையினருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி,'' என அவர் தெரிவித்தார்.

நகைச்சுவை மூலமாக சமூக கருத்துக்களை கூறியவர்

விவேக்

பட மூலாதாரம், Twitter

தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக், 1980களுக்குப் பிந்தைய நகைச்சுவைக் காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனக் கருதியவர்.

வடிவேலுவுக்கு சில ஆண்டுகள் முன்பாகவே சினிமாவில் அறிமுகமானவர் விவேக். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பை முடித்து சென்னையில் அரசுப் பணியில் இருந்த விவேக்கிற்கு நடிப்பின் மீதும் நகைச்சுவையின் மீதும் பெரும் ஆர்வம் இருந்துவந்தது. மெட்ராஸ் ஹ்யூமர் க்ளப்பில் இணைந்து செயல்பட்ட விவேக்கிற்கு ஒரு கட்டத்தில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்க, அவரது வாழ்வில் வேறு ஒரு கதவு திறந்தது.

1987ல் பாலச்சந்தர் இயக்கி வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுஹாசினி நடித்த நந்தினி என்ற பாத்திரத்தின் தம்பியாக அறிமுகமான விவேக், முதல் படத்திலேயே கவனத்தைக் கவர்ந்தார். அந்தப் படத்தில் விவேக் தவிர, மேலும் பலர் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இன்னிங்ஸை விளையாடியவர் அவர் மட்டும்தான்.

பெரும்பாலும் கதாநாயகர்களின் நண்பராகவே வந்துபோய்க்கொண்டிருந்த விவேக் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது வசனங்களில் சில இடங்களில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேச ஆரம்பித்தார். இது இவருக்கு சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும், வடிவேலுவின் நகைச்சுவையிலிருந்து ஒரு மாறுபட்ட பாணியையும் கொடுத்தது. குறிப்பாக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து தனது படங்களில் பேசிவந்தார்.

திரைக்கலைஞர் என்பதைத்தாண்டி, சமூக ஆர்வலர் என்ற முகமும் விவேக்கிற்கு உண்டு. மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரை மரம் நடுதலில் ஆர்வம்கொள்ளச் செய்தது. தமிழ்நாடு சந்திக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: