கொரானா கால கும்ப மேளா: ஹரித்வார் அனுபவ அச்சத்தில் வெளி மாநிலத்தவர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
மும்பையில் வசிக்கும் 34 வயதான தொழிலதிபரும், புகைப்பட கலைஞருமான உஜ்வல் பூரி மார்ச் 9ஆம் தேதி காலையில் ஹரித்வார் சென்றார். அப்போது அவரிடம் முக கவசம் மட்டுமல்லாமல், ஒரு சானிடைசர், தவிர வைட்டமின் மாத்திரைகளும் தயாராக இருந்தன.
டேராடூனுக்கு விமானத்தில் ஏறும் முன்பு வரை, ஹரித்வாரில் அவருக்கு அனுமதியே கிடைப்பது அரிதாக இருக்கும் அளவுக்குத் விதிமுறைகள் கடினமாக இருக்கும் என்று எண்ணியிருந்தார்.
அவர் தனக்கு கோவிட் தொற்று இல்லை என்று சான்றளிக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றார், ஆனால் "வலைதளம் இயங்கவில்லை".
ஆனால், விமான நிலையத்திலோ, ஹரித்வாரிலோ அவர் சோதனை எதுவும் செய்யப்படவுமில்லை.
"ஹர் கீ போடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெரும்பாலானவர்களின் முகத்தில் முக கவசம் இல்லை. அது கன்னத்தில் தான் இருந்தது.
இரவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், படித்துறையின் படிகளில் முக கவசம் அணியாத பக்தர்கள் குழு காணப்பட்டது.
சில பெண்கள் பக்தியில் கைகளை குவித்து வழிபட்டு வந்தனர். சிலர் உடை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தலை துவட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் செல்பேசியில் மூழ்கிக்கிடந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் இருக்கிறார்கள். சிலர் தங்கள் துணையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்."
"யாரும் எந்த தனி நபர் இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. மாலை ஆரத்தி நேரத்தில் ஒருவருடன் ஒருவர் ஒட்டி தான் அமர்ந்திருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
உஜ்ஜ்வல் கும்பமேளாவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அங்குள்ள துறவிகளுடன் செல்ஃபி எடுப்பதற்காக ஒரே ஒரு முறை தான் முக கவசத்தை அகற்றியதாக அவர் கூறுகிறார்.
நான் எல்லாம் இறைவன் செயல் என்று விட்டுவிட்டேன்.

பட மூலாதாரம், Getty Images
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மும்பையை அடைந்தபோது, அவர் பயந்திருந்தார்.
"நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். நான் வீட்டிற்குள் வந்தவுடன், தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் என் பெற்றோர் இருக்கிறார்கள். எனவே நான் கூடுதல் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்து கொண்டேன்" என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக ஒரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இடுகாடுகளில் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது ஒரு `சூப்பர் ஸ்ப்ரெட்டர்' நிகழ்வு என்றே கருதப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கும்ப மேளா, அக்கட்சியின் இந்துத்துவ அரசியலுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
முஸ்ஸோரியில் வசிக்கும் வரலாற்றாசிரியர் கோபால் பரத்வாஜ், கொரோனா காலத்தில், கும்ப மேளா ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"கும்ப மேளாவில் நீராடச் செல்லாதவர்கள் பாவிகள் என்று சொல்ல முடியுமா? இது மனித ஆன்மாவின் அமைதிக்காகத் தான். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், வீட்டில் என்ன அமைதி இருக்கும்?"
முந்தைய காலத்தில் கும்ப மேளா இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்ததாகவும் இப்போது வர்த்தக நோக்கத்திற்காக, கடந்த 35-40 ஆண்டுகளாக அதன் காலம் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் கோபால் பாரத்வாஜ் கூறுகிறார்.
"முன்பெல்லாம் முக்கியமான நீராடல் என்பது பைசாகி அன்றுதான் என இருந்தது. பின்னர் மகர சங்கராந்தியுடன் தொடர்புபடுத்தப்பட்டது. சிவராத்திரியும் சேர்ந்து கொண்டது. சிவராத்திரி ஒரு முக்கியமான திருவிழா. மக்கள் இதையெல்லாம் இணைத்து மூன்றரை மாதங்களாக இதை நீட்டித்தார்கள்" என்று அவர் விளக்குகிறார்.
மேலும் அவர், "கும்ப மேளா என்பது மத ரீதியிலான நடத்தை விதி தொடர்புடையது. முன்னர், நம் மதத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த சாஸ்திர விவாதங்கள் நடைபெற்றன. பல பெரிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவை, இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இந்து மதத்தில் தீமைகள் இருந்தால், அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றிய விவாதங்கள் இருக்கும். இப்போது அந்த விஷயம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தர்க்க ரீதியிலான விவாதங்களைச் செய்ய இப்போது பண்டிதர்களும் அந்த அளவுக்கு இல்லை. எல்லாமே வர்த்தக ரீதியாகி விட்டது" என்று கூறுகிறார்.
அச்சத்தில் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரொனா காலத்தில் கும்ப மேளாவில் இருந்து ஹரித்வார் செல்லும் பகுதியில் தர்மசத்திரம் நடட்தும் மிதிலேஷ் சின்ஹா, "உள்ளூர் மக்களிடையே அச்சம் நிலவுகிறது" என கூறுகிறார்.
"இங்கு வருபவர்கள், ஓரிரு நாட்களில் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு என்ன பரிசை வழங்கிவிட்டுச் செல்வார்களோ தெரியாது." என அஞ்சுகிறார் அவர்.
"பக்தி என்று வரும்போது, மக்களுக்குப் புரிய வைப்பது கடினம்."
கொரோனா வைரஸ் ஆத்திகவாதியா நாத்திகவாதியா என்கிற பேதமெல்லாம் பார்ப்பதில்லை.
கும்ப மேளா தொடங்கியதிலிருந்து இப்போது வரை எத்தனை கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நாளைக்கு இருநூறுக்குச் சற்று குறைவாக இந்த எண்ணிக்கை இருப்பதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கும்பமேளா கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் அவினாஷ் கன்னா கூறுகையில், கும்பமேளா பகுதியில் ஐம்பது சோதனை மையங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.
உள்ளூர் மக்கள் மற்றும் தர்மசத்திரத்தில் தங்கியுள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மற்றும் திரும்பிச் செல்பவர்களுக்கு ஆன்டிஜென் சோதனை செய்யப்படுகிறது என்று டாக்டர் கன்னா கூறினார்.
ஆனால் கொரொனா தொற்றுடன் வீடு திரும்பியவர்கள் மூலமாக இது மிக வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறுகிறார்.
நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், Getty Images
இந்த அச்சத்தைத் தான் ஹரித்வாரின் உள்ளூர்வாசி சச்சிதானந்தா தப்ரால் நைனிடால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் தொடுக்கப்பட்ட இந்த மனுவில், லட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளாவிற்கு வரும்போது, மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்பாட்டை எப்படி பராமரிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சச்சிதானந்த் ஒரு பார்மா நிறுவனத்தையும் ஒரு மருந்துக் கடையையும் நடத்தி வருகிறார்.
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஹரித்வாரில் நிலைமை சாதாரணமாகிவிட்டது, கோவிட்டின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தது என்று அவர் கூறுகிறார்.
அப்போது, திரிவேந்திர சிங் ராவத் உத்தரகண்ட் முதல்வராக இருந்தார். அவர், கும்ப மேளாவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கு கோவிட் இல்லை என்ற சான்றிதழைக் கட்டாயமாக்கினார். ஆனால் மார்ச் 10 அன்று பதவியேற்ற புதிய முதல்வர் தீரத் சிங் ராவத், யாத்ரீகர்கள் எந்தத் தடையும் இன்றி கும்ப மேளாவிற்கு வரலாம் என்று அறிவித்தார்.
மார்ச் 11 அன்று சிவராத்திரி நீராட, 36 - 37 லட்சம் பேர் ஹரித்வாரை அடைந்தனர். அதன் பிறகு ஹரித்வாரில் நிலைமை மோசமடையத் தொடங்கியது என்று அவர் கூறுகிறார்.
"நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் சோதனைகள் செய்யச் சொன்னது, ஆனால் 9 -10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்." என்கிறார் அவர்.
நீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன என்று கும்பமேளா கோவிட் நோடல் அதிகாரி அவினாஷ் கன்னா கூறுகிறார்.
சச்சிதானந்தின் மனுவைத் தொடர்ந்து, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு மார்ச் மாதத்தில் இந்தப் பகுதிகளில் சென்று ஆய்வு செய்து, தனது அறிக்கையை வழங்கியது.
இந்தக் குழுவில் இருந்த சச்சிதானந்தின் வழக்கறிஞர் சிவ் பட், இந்த ஆய்வின் போது, நிலைமை மோசமாக உள்ளதை அறிந்ததாகக் கூறுகிறார்.
படித்துறைகளை அடுத்து, நாங்கள் ரிஷிகேஷில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றோம், இது இந்தப் பகுதி முழுவதற்குமான கோவிட் பராமரிப்பு மையமாகும். ஆனால் இங்கு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"அல்ட்ராசவுண்ட் வசதிகள் எதுவும் இல்லை. கழிவறை மோசமாக உள்ளது, வார்டுகளும் மோசமான நிலையில் இருந்தது. பெட் பான், குப்பைத் தொட்டு என எதுவும் இல்லை. இயங்கு ஏணி (லிஃப்ட்) வேலை செய்யவில்லை." என்று அடுக்குகிறார்.
ஒவ்வொரு படித்துறையிலும், ரேபிட் ஆன்டிஜென், ஆர் டி பி சி ஆர் சோதனை செய்ய ஒரு மருத்துவக் குழு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஆனால் அப்படி இல்லை என பட் கூறுகிறார்.
இந்த விஷயத்தில், நாங்கள் மாநில சுகாதார செயலாளர் அமித் நேகி மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா ஆகியோரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தங்களுடனான பேச்சுவார்த்தையின் போது, இரண்டு கோடி பேர் வரை கூட்டத்தைக் கையாளத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் கூறினர் என்றும், ஆனால், புனித நீராட்டின் போது 30 லட்சம் பேரைக் கூடக் கையாள இயலவில்லை. என்று இவர் கூறுகிறார்.
நிர்வாகத் திறனால் ஈர்ப்பு
ஆனால், கும்பமேளாவில் கலந்து கொண்ட மும்பையைச் சேர்ந்த இருபத்தைந்து வயது பக்தர் சந்தீப் ஷிண்டே, நிகழ்ச்சி ஏற்பாட்டையும் காவல் துறையினரின் செயல்பாட்டையும் கண்டு வியக்கிறார்..
ஓவியரான சந்தீப், ஒரு ஆசிரமத்தின் ஒரு பெரிய கூடத்தில் தங்கியுள்ளார், அங்கு மேலும் 10 பக்தர்கள் அவரைப் போலவே, தரையில் விரிக்கப்பட்ட மெத்தை மீது உறங்கி இருக்குகிறார்கள்.
இந்த நிகழ்வைக் காணத் தனியாக வந்துள்ள சந்தீப், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வை அனுபவிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
"புனித நீராட்டு நிகழ்வு மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது" என கூறுகிறார் சந்தீப்.
சந்தீப் ஒரு முக கவசத்துடன் ஆசிரமத்திற்குத் திரும்பிய பின், கைகளை சூடான நீரில் கழுவுகிறார்.
அவர், "நான் இங்கே கொரோனாவைப் பற்றி கேட்கவேயில்லை. கொரோனாவைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை" என்று கூறுகிறார்.
ஆனால் பல தரப்பிலிருந்தும் இதை ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வு என்று அழைக்கிறார்கள். ஒரு மூத்த டெஹ்ராடூன் பத்திரிகையாளர், உத்தராகண்ட் இந்த மகாகும்ப மேளாவிற்குப் பிறகு மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்கப் போகிறது என்று கூறுகிறார்.
அரசாங்கத் தரவுகளின்படி, கோவிட் -19 காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 1,800 பேர் இறந்துள்ளனர்.
பஞ்ச ராமநந்திய காக்கி அமைப்பைச் சேர்ந்த ராகவேந்திர தாஸ், மக்கள் மனதில் அச்சம் உள்ளது என்பது உண்மை தான் ஆனால், நம்பிக்கை மற்றும் மதம் என்று வரும்போது, இங்கே மக்கள் மரணத்திற்கு பயப்படுவதில்லை என்கிறார்.
"தேர்தலால் கொரொனா பரவாதா? கொரோனாவுக்கு மதம் தெரியுமா? இந்தியக் கலாசாரத்தை மேற்கோள் காட்டும் அரசாங்கங்கள் மதுபான கடைகளைத் திறக்கின்றன, கொரோனா அங்கு பரவவில்லையா?" என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.
அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஓம்கர் தாஸ், ஹரித்வாரில் மக்கள் நோய்வாய்ப்படக் காரணம் "பகலில் வெப்பமாக இருப்பதும், இரவில் குளிரடிப்பது தான்" எனக் கூறியுள்ளார்.
100 சதவிகிதம் கொரொனா தொற்றுள்ள ஒரு நோயாளி கூட இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் விளக்கம் கூறுகிறார் ஓம்கர் தாஸ்.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
- இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு
- இளவரசர் ஃபிலிப்: அரசி மீது கொண்டிருந்த தளராத விசுவாசம் கொண்டாடப்படும்
- விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை - ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: நரேந்திர மோதி, எடப்பாடி, ஸ்டாலின், கலைஞர்கள் இரங்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












