கொரோனா அலை: உத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூடத் தடை, கும்பமேளாவுக்கு விலக்கு

பட மூலாதாரம், Getty Images
(இன்று ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
உத்தராகண்ட் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக 200 பேருக்கு மேல் கூடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடந்து வரும் கும்பமேளா திருவிழாவுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மதம் சார்ந்த கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என உத்தராகண்ட் மாநில அரசு, நேற்று (ஏப்ரல் 15, வியாழக்கிழமை) கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் கும்பமேளாவுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது.
கும்பமேளா நிகழ்வில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரையான 15 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலிலும், அத்திருவிழாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விலக்கு குறித்து கேள்வி எழுப்பிய போது, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் "கட்டுப்பாடுகள் தனியார் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொருந்தும்" எனக் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பமேளா நடக்கும் பகுதியில், கடந்த ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த நெறிமுறைகள் மற்றும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மாநில அரசு கொண்டு வந்த நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
200 பேர் மட்டுமே மதம் சார்ந்த மற்றும் சமூக கூட்டங்களில் கூட வேண்டும் என்கிற கட்டுப்பாடு, கும்பமேளா பகுதியில் பொருந்தாது என்பதை, பேரிடர் மேலாண்மைச் செயலாளர் எஸ் ஏ முருகேசனும் உறுதி செய்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பெரியார் சாலை பெயர் மாற்றம்: பாஜகவுக்கு தொடர்பு இல்லை -பாஜக தலைவர் முருகன்

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் சாலை பெயர் மாற்றத்துக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
"மறைத்த அம்பேத்கரின் வரலாறு, புகழை பா.ஜ.க. வெளிக்கொண்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட தேசிய தலைவரை கொண்டாட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் அம்பேத்கர் தங்களுக்கு தான் சொந்தம் என்பது போல், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது, கலவரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதுரையில் இதுபோன்ற கலவரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்திருக்கிறார்கள். எங்களுடைய நிர்வாகிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நாங்கள் அகிம்சையை விரும்புபவர்கள். அவர்கள் எந்த இடத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) நான் சென்று மாலை அணிவிக்க இருக்கிறேன்.
மேலும் அங்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என கூறினார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
சென்னையில் பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து எல்.முருகனிடம் கேட்டதற்கு, "நெடுஞ்சாலைத் துறையின் பதிவில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க்' சாலை என்றுதான் இருக்கிறது. மாநகராட்சியின் பதிவில் தான் ஈ.வெ.ரா.சாலை என்று மாற்றி இருக்கிறார்கள். இது அரசாங்க ஆவணங்களை திருத்த வேண்டியது. இதற்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலைத்துறை ஆவணங்களில் ஏன் மாற்றவில்லை" என முருகன் கேள்வி எழுப்பியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி: மும்பை நிறுவனத்துக்கு அனுமதி

பட மூலாதாரம், Getty Images
மும்பை: கொரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை உற்பத்தி செய்வதற்கு மும்பையை சோ்ந்த ஹாஃப்கின் என்கிற நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக மகாராஷ்டிர முதல்வா் அலுவலக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தது: கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது உற்பத்தி செய்து வருகிறது.
இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாஃப்கின் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வா் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலா் ரேணு ஸ்வரூப் மகாராஷ்டிர தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளார். ஓராண்டு காலத்துக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
- இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












