புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்

DR V MAITREYAN/Twitter
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.கவில் தான் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் எம்.பி மருத்துவர். மைத்ரேயன் தனது ஆதரவாளர்களிடம் வேதனைப்பட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக மருத்துவர் மைத்ரேயன் பதவி வகித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதால், தொடர்ந்து டெல்லியை வலம் வந்தவர். பாரதிய ஜனதா தலைவர்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர்.

அ.தி.மு.கவில் மருத்துவர் அணி உள்பட பல்வேறு கட்சிப் பதவிகளையும் வகித்தவர். இந்நிலையில், மைத்ரேயன் தெரிவித்ததாகக் கூறி ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் வலம் வந்தது.

நிதி நெருக்கடியா?

அந்தத் தகவலில், `கடந்த ஓராண்டாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தேன். மீள்வதற்கு வழி தெரியவில்லை. கடுமையான மனப் போராட்டத்துக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில் நான் ஆசையாகக் கட்டிய என் சொந்த வீட்டை விற்க முடிவு செய்து இன்று முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி விட்டேன். 22 ஆம் தேதி பத்திரப் பதிவு நடக்க உள்ளது. பிரச்னைகளில் இருந்து ஓரளவு மீள வழி கிடைத்தாலும் சொந்த வீட்டை விற்க வேண்டிய சூழல் வந்துவிட்டதே என்ற வருத்தம் ஏற்படுகிறது' என மைத்ரேயன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

`இந்தத் தகவல் உண்மையா?!' என மைத்ரேயனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``நிதிப் பிரச்னை என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. தேர்தல் முடிவுகள் நன்றாக வரும் என நினைக்கிறேன். அதன்பிறகு பேசலாம்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

தலைமை சரியில்லை

`உண்மையில் என்ன நடக்கிறது?' என மைத்ரேயனின் ஆதரவாளர்களிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவர் சார்பாக சில தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர்.

``அவர் தனது நண்பரிடம் வேதனையோடு பகிர்ந்ததை சிலர் வாட்ஸ்அப்பில் வெளியிட்டு விட்டார்கள். ஜெயலலிதா இருந்தவரையில் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாமல் நல்லபடியாக அவருடைய அரசியல் வாழ்வு சென்று கொண்டிருந்தது. தற்போதுள்ள தலைமை சரியில்லை. அவர்கள் தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதாக எண்ணுகிறார். அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டபோது ஓ.பி.எஸ் பக்கம் இருந்தார். இதன் பிறகு அணிகள் இணைந்ததும் இரட்டை இலை சின்னம் பெறுவதில் மைத்ரேயனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இதற்காக டெல்லியில் கடுமையாக வேலை பார்த்தார். அதையெல்லாம் தற்போதுள்ள தலைமை நினைத்துப் பார்க்கவில்லை" என்கின்றனர்.

பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

தொடர் புறக்கணிப்பு

தொடர்ந்து பேசுகையில், ``இதன்பிறகு 2019 ஜூலை மாதத்தில் அவருடைய மாநிலங்களவை எம்.பி பதவிக்காலமும் நிறைவடைந்து விட்டது. மீண்டும் வாய்ப்பு தருவது குறித்து எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2020, ஏப்ரலில் மாநிலங்களவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டபோது, கே.பி.முனுசாமிக்கும் தம்பிதுரைக்கும் சீட் கொடுத்தார்கள். மைத்ரேயனை ஒதுக்கிவிட்டனர். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் 170 எம்.எல்.ஏ இடங்களில் எதாவது ஓர் இடம் தனக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.

அரசியல் என்பது புதைகுழியாக இருக்கிறது. இங்கு பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அதிகப்படியான நிதிப் பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டன. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரிடம் சென்று அவர் சீட் கேட்டபோது, `பார்க்கலாம்' என்றே பதில் வந்தது. மைத்ரேயனுக்கு சீட் தர மறுப்பதால் எந்த இழப்பும் இல்லை என அ.தி.மு.க தலைமை நினைக்கிறது" என்கின்றனர்.

தேர்தல் முடிவு

`மைத்ரேயனுக்கு மாதந்தோறும் பென்ஷன் வருமே?' என அவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

``பல்வேறு சுப காரியங்களுக்குச் செல்லும்போது செலவு செய்ய வேண்டும். அவர்களிடம், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. கட்சியில் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக அந்தப் பதவிக்கு என்ன வேலை என்றே அவருக்குச் சொல்லப்படவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவெடுக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்" என்றனர் விரிவாக.

`மைத்ரேயனை ஏன் தலைமை புறக்கணிக்கிறது?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``ராஜ்ய சபா உறுப்பினராக தொடர்ந்து இரண்டு முறை மைத்ரேயன் பதவி வகித்தவர். மருத்துவர் அணியிலும் தேர்தல் பொறுப்பாளராகவும் பதவி வகித்தவர். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட்டு நிற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இதுவரையில் சட்டமன்ற உறுப்பினர்களாக வர முடியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கெனவே பதவிகளை அனுபவித்தவர்களே, மீண்டும் அதனை அனுபவிக்க நினைப்பது சரியானதாக இல்லை" என்கிறார்.

கே.பி.முனுசாமிக்கு கொடுத்தது சரியா?

`அப்படிப் பார்த்தால், மாநிலங்களவை எம்.பி ஆக இருக்கும் முனுசாமி, சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறாரே?' என்றோம்.

``அந்த முடிவு வரவேற்கத்தக்கதல்ல. இன்னும் ஐந்தரை ஆண்டுகாலம் எம்.பி பதவி இருக்கும்போது அவர் ஏன் இங்கே போட்டியிடுகிறார் என்பது தலைமைக்கு மட்டுமே தெரியும். இப்படியொரு முடிவை கே.பி.முனுசாமி ஏன் எடுத்தார் எனத் தெரியவில்லை. இதற்கான காரணத்தை அவர்தான் சொல்ல வேண்டும்.

மேலும், மைத்ரேயனை பொறுத்தவரையில் அவர் பதவி வகித்த காலங்களை நினைத்து மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எந்தப் பலனும் இல்லாமல் அ.தி.மு.கவை தாங்கி நிற்கும் 95 சதவிகித தொண்டர்கள் எந்தவிதப் பலன்களையும் அனுபவிக்காதவர்கள்தான். இதை நினைத்து அவர் ஆறுதல் அடையட்டும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :