கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் கிராமத்தில் நடந்த காவல்துறை தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தத் தருணத்தில் கொடியங்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது?

1995ஆம் ஆண்டு. ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த நேரம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அடுத்த சில மாதங்களுக்கு அந்தப் பிராந்தியத்தையே பற்றி எரியச் செய்தன. அதன் உச்சகட்டமாக கொடியங்குளம் சம்பவம் நடைபெற்றது.

இந்தக் கலவரங்களின் துவக்கப்புள்ளியாக அமைந்த நிகழ்வு நடந்தது 1995ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியிலிருந்து சுரண்டை வரை செல்லும் பேருந்து வீரசிகாமணி என்ற கிராமம் வழியாக சென்றுகொண்டிருந்தது.

பேருந்தை 53 வயதான தங்கவேலு என்ற ஓட்டுநர் ஓட்டிவந்தார். வீரசிகாமணி அருகே வரும்போது சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் பேருந்தை மறைக்கும் வகையில் சென்று கொண்டிருந்தனர். ஹார்ன் அடித்தும் கேட்கவில்லை. இதையடுத்து, பேருந்தைவிட்டு இறங்கிய தங்கவேலு அவர்களை ஒதுங்கிச் செல்லும்படி கூறினார். இதில் வார்த்தைகள் முற்றின.

இந்த மாணவர்கள் அனைவரும் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருமே தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டுநர் தங்கவேலு பக்கத்து ஊரான வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர். தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்.

தங்கள் ஊருக்குச் சென்ற இந்த மாணவர்கள், தங்கவேலுவுடன் ஏற்பட்ட மோதலைப் பற்றிக் கூறினர். அந்தப் பேருந்து சுரண்டை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் அரிவாளுடன் வீரசிகாமணி அருகே காத்திருந்தனர். பேருந்து நிறுத்தப்பட்டு, தங்கவேலு கடுமையாகத் தாக்கப்பட்டார். சமாதானம் செய்ய முயன்ற நடத்துனரும் தாக்கப்பட்டார். இப்படியாகத்தான் கலவரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டது.

தங்கவேலு தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் வடநத்தம்பட்டியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீரசிகாமணியை நோக்கிச் சென்றனர். அவர்கள் அங்கே சென்றபோது மின்சாரம் இல்லை.

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய Judge Gomathinayagam Inquiry Commission: A Study ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வீரசிகாமணிக்குச் சென்ற தேவேந்திர குல வேளாளர்கள் அங்கு பெரிய தாக்குதலை நடத்தினர். ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அங்கிருந்த முத்துராமலிங்கத் தேவர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னைய்யன் தலைமையிலான அணி ஒன்று வடநத்தம்பட்டிக்குள் புகுந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தாக்கியது. வடநத்தம்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 18 பேர் மீதும் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த தேவர்கள் 15 பேர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூலை 29ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.கே. ஜெயக்கொடி சங்கரன்கோவிலில் அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

ஆனால், அ.தி.மு.க. அரசு தேவர் இனத்தினருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறிய தேவேந்திர குல வேளாளர்கள் அந்த அமைதிக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேவர் சமூகப் பிரதிநிதிகள், சேதப்படுத்தப்பட்ட தேவர் சிலையை சீரமைத்துத் தர வேண்டுமெனக் கோரினர். அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒப்புக்கொண்டது.

ஆனால் பிரச்சனை இதோடு முடியவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி, தேவர் பேரவை என்ற அமைப்பு பஸ் மறியலில் இறங்கியது. ஜூலை 30ஆம் தேதி 12 இடங்களில் பேருந்துகள் மறிக்கப்பட்டன. சென்னை, மதுரை, நாகர்கோவிலில் இருந்துவந்த பேருந்துகள் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. தாளையூத்து, பாளையங்கோட்டையில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்த நிலையிலும், கவலரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பெரிதாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. கலவரத்தைத் தூண்டும் நபர்களைக் கண்டறித்து தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கவில்லை.

அடுத்ததாக தேவேந்திர குல வேளாளர்களை இழிவுபடுத்தும் வாசகங்களுடன் பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான கோபாலகிருஷ்ணனின் சகோதரர் மகன் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் ஜூலை 31ஆம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் தேவர்களுக்கு சொந்தமாக இருந்த கடைகள் தேவந்திரர்களால் சூறையாடப்பட்டன. பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டு, அந்த இடமே மயானக் காட்சியளித்தது. 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, தென்காசியிலும் தேவர்கள் பேருந்துகளை மறித்தனர்.

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

தென்காசியில் உள்ள சிவகிரியில் இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அதற்குப் பொறுப்பானவர்கள் எனக் குற்றம்சாட்டி, மூன்று தேவர்களை பிடித்து தேவேந்திர குல வேளாளர்கள் தாக்கினர். இதற்குப் பிறகு வாசுதேவநல்லூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஈஸ்வரனுக்குச் சொந்தமான மண்ணெண்ணெய் டிப்போ தீ வைத்து கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து தேவர்களும் தேவந்திரர்களும் ஆங்காங்கே மோதிக்கொள்ள இரு தரப்புக்கும் காயம் ஏற்பட்டது. சிவகிரியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட, ஏழு பேருக்குக் காயம் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி கலவரம் திருநெல்வேலி மாவட்டம் முழுக்கப் பரவியது.

தென்காசி பாவூர்சத்திரத்தில் இருந்த தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து முழு அடைப்புக்கு தேவர் பேரவை அழைப்பு விடுத்தது. அன்றைய தினம் கயத்தாறு, வெள்ளையங்கோட்டை பகுதிகளில் கலவரம் நடந்தது. பாளையங்கோட்டையில் காவல்துறை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்தக் கலவரங்களால் திருநெல்வேலி மாவட்டமே முடங்கிப்போனது. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன. அமைதிக் கூட்டம் பலனளிக்காத நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்ய முடிவெடுத்தது மாவட்ட நிர்வாகம். ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் இரு தரப்பையும் சேர்ந்த 260 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 110 பேர் பேருந்துகளில் கல் எறிந்த குற்றச்சாட்டிலும் மீதமுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கைதுசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடிக்கு கலவரம் பரவியது எப்படி?

தேவேந்திர குல வேளாளர்களைப் பழித்து பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், திருநெல்வேலியில் மட்டும் இருந்த கலவரம் பக்கத்து மாவட்டமான தூத்துக்குடிக்கும் பரவியது. புளியம்பட்டியில் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று 20க்கும் மேற்பட்ட தேவேந்திரர்கள் தீ வைக்க, புளியம்பட்டியிலும் சீவலப்பேரியிலும் கலவரம் பரவியது. சீவலப்பேரியிலும் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தீ வைக்கப்பட்டது. இரண்டு தேவர்கள் தாக்கப்பட்டனர். அதே நாளில் அரசுப் பேருந்து உட்பட சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்தக் கலவரங்களின் உச்சகட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி ஸ்ரீ வைகுண்டம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலவேசம் என்ற தேவேந்திர இனத்தைச் சேர்ந்தவர் அவரது மனைவி முன்பாகவே தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்றியது. இதையடுத்து ஆளந்தா, கொடியங்குளம், காசிலிங்கபுரம் கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் ஒன்றுதிரண்டு சிங்காத்தாகுறிச்சியில் இருந்த தேவர்களின் வீடுகளைத் தாக்கினர். இந்த கலவரக்காரர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

சித்தரிப்புப்படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆளந்தா பகுதிகளில் காவல்துறை பெருமளவில் காவலர்களை நிறுத்தியது. சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த 7 தேவர்களைக் காவல்துறை கைதுசெய்தது. இதையடுத்து தேவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். இது மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது.

இதன் தொடர்ச்சியாக பக்காபட்டியில் உள்ள தேவேந்திரரர்களுக்குச் சொந்தமான வாழைத் தோட்டங்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதி அழிக்கப்பட்டன. புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. தேவர்கள் அதிகம் வசிக்கும் நாணல்காடு கிராமத்தில் இருந்த தேவந்திரகுல வேளாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டபோது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நாரைக்கிணறுக்கு அருகில் வெள்ளைத்துரை தேவர் என்பவர் தேவேந்திரர்களால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தாளையூத்தில் ரயிலில் வந்திறங்கிய தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தேவர்களால் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் வீனஸும் கொடியங்குளம் கிராமமும்

காவல்துறையின் ஆபரேஷன் வீனஸ் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கொடியங்குளம் கிராமத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கிறது கொடியங்குளம் கிராமம். 1995வாக்கில் அந்த கிராமத்தில் 287 தேவேந்திர குல வேளாளர்கள் வசித்தனர். அந்த ஊரைச் சேர்ந்த 102 பேர் வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 40 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து ஊர் திரும்பியிருந்தனர். அந்த கிராமத்தில் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற பெரிய கண்மாய் ஒன்று இருந்தது. அதிலிருந்து வந்த தண்ணீரை வைத்து விவசாயமும் செய்துவந்தனர். இதனால், அந்த கிராமம் வளமான ஒன்றாகவே இருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இது போன்ற முழுக்க முழுக்க தேவேந்திரர்கள் வசித்த கிராமங்களில், எழுத்தறிவு என்பது மாவட்ட, மாநில சராசரியைவிட அதிகமாகவே இருந்தது. பல பெண்கள், பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பையும் முடித்திருந்தனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், துபாய், மஸ்கட், சவுதி, குவைத் போன்ற வளைகுடா பகுதிகளிலும் வட இந்திய மாநிலங்களிலும் பணியாற்றினர். படிப்பு, வசதி ஆகியவற்றின் காரணமாக இந்த கொடியங்குளம் கிராமம், மற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமங்களுக்கு ஒரு தலைமையான கிராமத்தைப்போல விளங்கியது.

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இந்த நிலையில்தான் மாவட்ட நிர்வாகம் 'ஆபரேஷன் வீனஸ்' என்ற நடவடிக்கையைத் துவங்கியது. கொடியங்குளத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் சிலரைத் தேடுவதும் கொடியங்குளம் கிராமத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதும்தான்.

ஆனால், இந்த கிராமத்தை அரசு வேண்டுமென்றே தேர்வுசெய்ததைப்போலத்தான் தோன்றியது. இந்தத் ஆபரேஷன் வீனஸ் அந்த கிராமத்தில் நான்கு மணி நேரம் நடைபெற்றது. அந்த கிராமத்தில் வசித்த தேவேந்திரர்களின் பொருளாதார வளத்தை நாசம் செய்வதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என்பதைப்போல இருந்தது காவல்துறையின் தாக்குதல்.

அந்தத் தருணத்தில் கணபதி என்பவர் கொடியங்குளம் கிராமத்தின் தலைவராக இருந்தார். சம்பவ தினத்தன்று 24 வாகனங்களில் காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பன்னீர்செல்வம், காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் ஆகியோர் கிராமத்திற்கு வந்தனர். அவர்களை ஊர்த் தலைவர் வரவேற்று, மாவட்ட ஆட்சித் தலைவரும் எஸ்பியும் உட்கார்வதற்கு நாற்காலிகளையும் கொடுத்தனர். ஆனால், அவர்கள் விரோதமான பாவனையிலேயே செயல்பட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டார்.

"வெங்கடேஷ் என்பவர் கொண்டுவந்த நாற்காலியைப் பிடுங்கி அவர் மீதே தூக்கியெறிந்தனர். கீழே விழுந்த வெங்கடேஷ் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதனைத் தடுத்த அவரது தாயாரையும் கடுமையான வார்த்தைகளால் காவல்துறையினர் ஏசினர். ஊர்த் தலைவருக்கு அருகில் இருந்த கோட்டை மாடசாமியும் தாக்கப்பட்டார். அவரது தோளில் இருந்த துண்டை எடுத்து அவரது கழுத்தை நெறித்தனர். லத்தியாலும் அவர் தாக்கப்பட்டார். தடுக்கவந்த கணபதிக்கும் அடிவிழுந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அங்கிருந்து விலகி ஓடி வீடுகளுக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டனர்" என தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டார் கே. கிருஷ்ணசாமி.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது காவல்துறையினர் சுட்டதில் பால்துரை என்பவர் காலிலும் கனி என்பவரது காதிலும் காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு ஒவ்வொரு வீடாக கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த காவல்துறையினர், அங்கிருந்த அனைவரையும் ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசம் பார்க்காமல் தாக்கினர். பலரது தாலிகள் பறிக்கப்பட்டன.

காவல்துறை வரக்கூடுமென அறிந்து பல ஆண்கள் கிராமங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இதனால், பெரும்பாலும் பெண்களே இந்தத் தாக்குதலை எதிர்கொண்டனர். அங்கிருந்த ரேஷன் கடையில் இருந்த விற்பனையாளரும் தாக்கப்பட்டார். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மண்ணெண்ணை ஊற்றப்பட்டது. அங்கிருந்த ஒரே கிணற்றில் பாலிடால் உற்றப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி, விசிஆர், ஃபேன், கிரைண்டர், ஃப்ரிட்ஜ் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன என்கிறது கிருஷ்ணசாமி அளித்த வாக்குமூலம்.

இதற்குப் பிறகு பியுசிஎல் அமைப்பு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குள் சென்று விசாரித்து, குடியரசுத்தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, கொடியங்குளத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக மாவட்ட எஸ்பி சுனில் குமாரால் வழிநடத்தப்பட்ட சிறப்பு ஆயுதப் படையானது ஆளந்தா, காசிலிங்கபுரம் கிராமங்களிலும் தேவேந்திரர் இல்லங்களை குறிவைத்து சூறையாடியதாக குற்றம்சாட்டியது.

ஆகவே அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஏ. பன்னீர்செல்வம், காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் பியுசிஎல் கோரியது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சொல்வது என்ன?

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வேறு கதையைச் சொன்னது. அதாவது தாங்கள் கொடியங்குளத்திற்குச் சென்றபோது தங்களை வழிமறித்த கிராமத்தினர், கைதுசெய்து வைக்கப்பட்டுள்ள தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 24 பேரையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரியதாகவும் இது மோதலில் முடிந்ததாகவும் காவல்துறை கூறியது. இதன் பிறகு கிராமத்தினரின் ஒரு பகுதியினர் நாட்டு வெடிகுண்டுகளை தங்களை நோக்கி வீசியதாகவும் இதில் 12 பேர் காயமடைந்ததாகவும் சொன்னது காவல்துறை. இதற்குப் பிறகு கிராமத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் 25 அரிவாள்கள், 25 கம்புகள், 10 இரும்புத் தடிகள், சில பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் 53 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் ஏ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மாவட்ட வருவாய்த்துறை சொல்வதென்ன?

காவல்துறை அணியுடன் சென்ற தாசில்தாரின் கூற்றுப்படி, அவர் காவல்துறை படையணியுடன் கொடியங்குளம் சென்றபோது ஊரைச் சுற்றி முள் செடிகளாலும் முள் வேலிகளாலும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 500க்கும் மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தனர். அதே நேரம் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் கற்களையும் குண்டுகளையும் காவல்துறையை நோக்கி வீசினர். எச்சரிக்கை செய்தும் கேட்காததால், ஆர்டிஓ துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இந்த மோதலில் 12 காவல் துறையினர் காயமடைந்தனர். 24 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றது வருவாய்த் துறை.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. குடிநீருக்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் கோயம்புத்தூரில் இருந்த கே. கிருஷ்ணசாமி, கொடியங்குளத்திற்கு வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கொடியங்குளம் கிராமத்தினருக்கு வேண்டிய குடிநீர், உணவு வசதிகளைத் தர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவரையும் எஸ்பியையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, கிராமத்தினரைச் சந்திக்க கண்ணப்பன், முத்துசாமி, நாகூர் மீரான் ஆகிய மூன்று அமைச்சர்களை அங்கு அனுப்பினார் ஜெயலலிதா. ஆனால், கிராமத்தினர் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். ஆனால், டிஜிபி வைகுந்த் செப்டம்பர் ஐந்தாம் தேதி அங்கு வந்தபோது அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்ட கிராமத்தினர், நடந்ததைச் சொன்னார்கள். அதிர்ந்துபோன காவல்துறைத் தலைவர், விரிவான அறிக்கையை ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டுமென்றும் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டுமென்றும் கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர், அப்போதைய ஆட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக கொடியங்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருதினர்.

சென்னை உயர் நீதிமன்றம்

அந்தத் தருணத்தில் தி ஹிந்து நாளிதழின் தூத்துக்குடி செய்தியாளராக இருந்த இளங்கோவன் ராஜசேகரன், அப்போது அங்கு நடந்த சம்பவங்களை விரிவாக தமது நாளிதழில் பதிவுசெய்தார்.

இளங்கோவன் பதிவுசெய்த ஒரு செய்தியின் படி, தங்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தாங்கள் மொத்தமாக இஸ்லாத்தைத் தழுவப்போவதாக தேவேந்திரர்கள் முடிவெடுத்திருந்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 191 குடும்பங்களும் வேறு 45 தலித் கிராமங்களும் மொத்தாக இஸ்லாத்தைத் தழுவவிருப்பதாக இளங்கோவனிடம் கிராமத்தினர் கூறினர்.

ஆனால், டாக்டர் கே. கிருஷ்ணசாமி உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இஸ்லாத்திற்கு மாற வேண்டாமென்றும் தொடர்ந்து போராடலாம் என்றும் ஒப்புக்கொள்ளச் செய்தார்.

இதற்குப் பிறகு ஒரு வழியாக அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி கோமதி நாயகம் என்ற ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க 17 லட்ச ரூபாயையும் விடுவித்தது.

இந்த ஆணையத்திற்கு ஐந்து குறிக்கோள்கள் வழங்கப்பட்டன. ஒன்று, இந்த சம்பவங்கள் எந்தப் பின்னணியில் நடந்தன என்று ஆராய்வது. இரண்டாவதாக, இம்மாதிரி நடக்காமலிருப்பதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது.

மூன்றாவதாக, சிதம்பரனார் மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அத்துமீறல்களில் ஈடுபட்டதா என ஆராய்வது, அப்படி அத்துமீறல் இருந்தால் அதற்கு காரணமான காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் யார் என்பதைக் குறிப்பிடுவது, நான்காவதாக ஜூலை 30ஆம் தேதி சிவகிரியிலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி சிங்காத்தகுறிச்சியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியன்குளத்திலும் நடத்தப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகள் சரியா என்று ஆராய்ந்து சொல்வது, ஐந்தாவதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிவாரணம் தருவது என்பதைச் சொல்வது.

தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் சி.பி.ஐ. விசாரணை கோரியதால், கொடியங்குளம் மற்றும் பிற கிராமங்களில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த ஆணையத்தைப் புறக்கணித்தனர்.

அரசுத் தரப்பின் சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உட்பட 26 பேர் சாட்சியம் அளித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினர். பொதுமக்கள் 133 பேர் சாட்சியம் அளித்தனர். ஒடுக்கப்பட்டவர்கள் இந்த ஆணையத்தைப் புறக்கணித்ததால், சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானவர்கள்தேவர்களாகவே இருந்தனர்.

தி ஹிந்து இதழின் செய்தியாளர் இளங்கோவன் அளித்த சாட்சியம் புறக்கணிக்கப்பட்டது.

இந்த ஆணையம் தன்னுடைய விசாரணைகளை முடித்து 1996 மார்ச் மாதம் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அடுத்ததாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. 1999 நவம்பர் 23ஆம் தேதி அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சரியானதுதான் என்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று கொடியன்குளத்தின் மீது காவல்துறை எவ்விதமான அத்துமீறலிலும் ஈடுபடவில்லையென்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த அறிக்கையை தலித் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.எம்., தமிழக ராஜீவ் காங்கிரஸ், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், காவல்துறை அதிகாரிகளும் மற்ற காவலர்களும் சொல்லியபடி, அந்த நடவடிக்கை அமையவில்லை என்பதும் உண்மை என்றது அறிக்கை.

காவல்துறை வாகனங்கள் எங்கு செல்கின்றன, திரும்ப எப்போது வந்தன என்பது குறித்த காவல்துறையின் பதிவேட்டை காவல்துறையால் ஆணையத்தில் அளிக்க முடியவில்லை என்பதையும் ஆணையம் சுட்டிக்காட்டியது. இதன் மூலம் அந்தத் தேடுதல் வேட்டை எவ்வளவு நேரம் நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆணையம் குறிப்பிட்டது.

ஆனால், காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையின் காரணமாக, அந்த கிராமத்தில் வசித்த தலித்துகளின் பொருளாதார அடிப்படை கலைக்கப்பட்டதாகச் சொல்வதை ஆணையம் ஏற்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மணியாச்சி காவல் நிலையத்தில் கொடியங்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு புகார் அளித்தனர். அந்தப் புகாரில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து கூறப்பட்டிருந்ததே தவிர, வீட்டிலிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இல்லை என்றது ஆணையம். தாங்கள் சென்று பார்த்தபோது சில வீடுகள் உடைந்திருந்ததாகவும் ஆனால், அதனைக் காவல்துறை செய்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஆணையம் கூறியது.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இந்த ஆணையம் சென்றது. கொடியங்குளத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு வீட்டையும் கிணற்றையும் மட்டுமே ஆணையம் பார்வையிட்டது. அங்கிருந்தவர்கள், அந்த ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என்றும் அதனைப் புறக்கணிப்பதாகவும் கூறியதையடுத்து ஆணையம் திரும்பிச் சென்றது.

முடிவாக, கொடியங்குளம் கிராமத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை முழுக்க முழுக்க சரியானது என்றது கோமதிநாயகம் ஆணையம்.

பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைப்பதைத் தடைசெய்வது, எழுத்தறிவின்மையை ஒழிப்பது ஆகியவற்றை முக்கிய ஆலோசனையாக முன்வைத்தது ஆணையம்.

இந்த ஆணையம் தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை; அது தனது நோக்கத்தில் தோல்வியடைந்துவிட்டது என்று தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் கே.ஏ. மணிக்குமார்.

1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட கே. கிருஷ்ணசாமி, வெற்றிபெற்றார். 2011ஆம் ஆண்டில் கொடியங்குளம் சம்பவம் நடந்தபோது ஆட்சியிலிருந்த அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து அதே தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார் கிருஷ்ணசாமி.

அந்தப் பகுதி மக்களின் மனநிலையில் இப்போதும் வடுவாக நிலைத்திருக்கும் இந்த சம்பவம் 1995 ஆகஸ்ட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்றது. ஆனால், கர்ணன் திரைப்படத்தில் 1997ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்றிருப்பதாக குறிப்பிட்டிருப்பதை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

தி.மு.கவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜிடம் பேசியிருப்பதாகவும் வருடத்தை மாற்ற இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: