சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், CBSE

இந்தியாவில் பரவலாக கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல, பிளஸ் டூ பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர், சிபிஎஸ்இ உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தினார்.

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், CBSE

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பகிர்ந்துள்ளார். அதில், மாணவர்களின் நலன்களுக்கே அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியதாகவும் அதே சமயம் அவர்களின் கல்வி நலன்கள் பாதிக்காத வகையில் சில முடிவுகளை அரசு எடுத்துள்ளாகவும் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

கல்வித்துறை

பட மூலாதாரம், RAMESH POKHRIYAL

இதன்படி, மத்திய கல்வி வாரியத்தால் மே 4 முதல் ஜூன் 14ஆம் தேதிவரை நடத்த உத்தேசிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. அந்த தேர்வு பின்னர் நடத்தப்படும்.

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக மீண்டும் வரும் ஜூன் 1ஆம் தேதி மறுஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளிவரும்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு தேதி குறித்து 15 நாட்களுக்கு முன்பாகவே தெரிவிக்கப்படும் என்று ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கல்வி

பட மூலாதாரம், RAMESH POKHRIYAL

இதேவேளை,மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிளஸ்டூ தேர்வு தள்ளிவைக்கப்படும் அதே சமயம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கிரேட் மதிப்பெண்கள் அவர்களுடைய முந்தைய செயல்திறன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும், அந்த மதிப்பீட்டில் திருப்திகரமான முடிவு வராவிட்டால், தேர்வு எழுதுவதற்கான உகந்த சூழ்நிலை உருவாகும்போது சம்பந்தப்பட்ட மாணவருக்கு தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக, 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் பொதுத்தேர்வு தொடர்பான முடிவு வெளிவந்துள்ளது.

வழக்கமாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக அத்தேர்வுகளை குறித்த அட்டவணைப்படி நடத்த அரசால் இயலவில்லை.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 21 லட்சத்து 50 ஆயிரத்து 761 மாணவர்களும், 14 லட்சத்து 30 ஆயிரத்து 243 மாணவர்களும் எழுதவிருந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, மாநில அளவில் மெட்ரிக் மற்றும் மாநில கல்வி வாரிய பொதுத்தேர்வு தொடர்பான முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: