தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு

இந்திய தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், ECI

தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற வேளச்சேரி தொகுதியின் 92ஆம் எண் கொண்ட ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 92ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடி, வேளச்சேரி டி.ஏ.வி பள்ளியில் உள்ளது. 540 வாக்குகள் கொண்ட அந்த வாக்குச்சாவடியில், 220 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இங்கு மறுதேர்தல் வரும் 17ஆம் தேதி காலை 7 முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என்று தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தின் நகல், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர், வேளச்சேரி தொகுதி தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் ஆறாம் தேதியன்று நடைபெற்றது. அன்றைய தினம், வேளச்சேரி - தரமணி சாலையில் மூன்று பேர் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனங்களில் கொண்டு செல்வதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வசமிருந்த இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு வாக்குச்சீட்டு சரிபார்ப்பு சாதனம் ஆகியவை டிஏவி பள்ளி வாக்குச்சாவடிக்கு உரியவை என்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் தேர்தல் பணியில் உள்ள சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது.

இப்படி இரு சக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வது தேர்தல் விதி மீறல் என்பதால், இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில், அந்த இயந்திரங்களில் வாக்குகள் ஏதும் பதிவாகவில்லை என கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ, இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் 92வது வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்டவை என்றும் 50 நிமிடங்கள் அவை பயன்படுத்தப்பட்ட பிறகு பிரச்னை ஏற்பட்டதால், அவை மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார். அந்த வாக்குச் சாவடியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.

இதன்படி இப்போது அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.கே. அசோக்கும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜே.எம்.எச். ஹசனும் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: