தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கும் மாநில அரசு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வெளியில் வர வேண்டாமென அரசு வேண்டுகோள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி போட தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 6,711 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். 2,339 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2,105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டில் இதுவரை 2.05 கோடி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 85,000 சோதனைகள் செய்யப்படுகின்றன. மொத்த பரிசோதனைகளில் 78 சதவீத சோதனைகள் அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும் கோவிட் சிறப்பு மையங்களிலும் சேர்த்து 80,284 படுக்கைகள் உள்ளன. இதில் 32,102 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதில் சுமார் 7,000 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளன. 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வெளியில் வர வேண்டாமென அரசு வேண்டுகோள்

பட மூலாதாரம், Getty Images

டோஸிலிசுமாப், ரெம்டெசிவீர், இனாக்ஸ்பிரின் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் 20 சதவீதமான ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 37.8 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நோய்த் தொற்று சதவீதம் 4.55 சதவீதமாகவும் இறப்போர் விகிதம் 1.38 சதவீதமாகவும் இருக்கிறது. அரசு ஊழியர்கள், அலுவலர்கள் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். போதுமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கின்றன. பொதுமக்கள் உடனடியாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதற்குப் பிறகு தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 30 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாகவும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 85,000 ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தினமும் ஆறாயிரம் என்ற அளவில் இருக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 41,900 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வெளியில் வர வேண்டாமென அரசு வேண்டுகோள்

பட மூலாதாரம், Twitter

முக கவசங்கள் இன்றியும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாது குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தியதே தொற்று அதிகரிக்கக் காரணம் என தமிழக அரசு கூறியுள்ளது. வங்கிகள், பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததால், பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சில அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தினமும் குறைந்தது 90,000 ஆர்.டி. - பிசிஆர் சோதனைகளைச் செய்ய வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கூடுதல் சோதனைகளைச் செய்ய வேண்டும். முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறைந்தது 30 பேருக்கு சோதனைகளைச் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொற்றின் வீரியத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளிலோ, கவனிப்பு மையங்களிலோ சேர்த்து கவனிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வெளியில் வர வேண்டாமென அரசு வேண்டுகோள்

பட மூலாதாரம், EPA

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், காவல், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், "மக்களிடம் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 37,80,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து 54,85,720 தடுப்பூசிகள் வந்துள்ளன. களப்பணி ஆற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த இரு வாரங்களுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டுமென்றும் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் கூட்டம் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த அறிக்கையின் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: