அம்பேத்கர் 'தோல்வியடைந்த' ஒரு பாலியல் கல்வி குறித்த வழக்கின் கதை

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், KUMAR GOKHALE

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
    • எழுதியவர், மயூரேஷ் கோண்ணூர்
    • பதவி, பிபிசி நிருபர்

"கருத்துச் சுதந்திரம்" இன்று விவாதப் பொருளாகியுள்ளது. 1934இல் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது டாக்டர் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் வழக்கறிஞராக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கை வாதாடினார்.

நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள், இன்றைக்கும் பொருந்தும். இது "சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)" என்ற பத்திரிகைக்காக வாதாடப்பட்ட ஒரு வழக்கு.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரகுநாத் தோண்டோ கர்வே தனது "சமாஜ் ஸ்வாஸ்த்ய" பத்திரிகையில் வெளியான கருத்துகளுக்காகப் பழமைவாதிகளின் இலக்கானார்.

இந்திய சமூகத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்படாத பாலியல் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, நிர்வாணம், அறநெறி போன்ற தலைப்புகளில் கர்வே தனது பத்திரிகையில் எழுதி வந்தார்.

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனையை மையமாகக் கொண்ட தனது பத்திரிகையில், கர்வே இந்த முக்கியமான விஷயத்தை துணிச்சலுடன் விவாதித்தார். அவர் பகுத்தறிவு சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த கருத்துகளை எழுதி வந்தார்.

மக்களின் பொதுவான வாழ்க்கையில் பெரும் மத செல்வாக்கு கொண்ட சமூகத்தின் பழமைவாதிகள் அவரது கட்டுரையால் மிகவும் எரிச்சலடைந்தனர். இதனால் பலருக்கு இவர் எதிரியானார். ஆனால் கர்வே தளரவில்லை.

அவர் எழுத்தின் மூலமே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். கர்வேயின் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ அவரின் எழுத்துக்களுக்கு ஆதரவாகவோ துணிந்து குரல் கொடுக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்போதைய அரசியல் மற்றும் சமூகத் தலைமை வலுவாக இல்லை.

அந்த நேரத்தில் தான், பாபாசாகேப் அம்பேத்கர் கர்வேக்கு ஒரு பெரும் துணையாக உருவெடுத்து அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் வரலாற்றில் கருத்து சுதந்தரத்துக்காக நடந்த மிக முக்கியமான சட்டப் போர்களில் இதுவும் ஒன்றாகும்.

பாலியல் தொழில் குறித்த கேள்வி

பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

பட மூலாதாரம், ARUN JAKHADE PADMAGANDHA PRAKASHAN

1931 ஆம் ஆண்டில், முதன்முதலில் புனேவில் உள்ள ஒரு பழமைவாதக் குழு, இவரின் "விபச்சாரம் பற்றிய கேள்வி" என்ற கட்டுரையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது.

அவர் கைது செய்யப்பட்டுக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கர்வே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நீதிபதி இந்திரபிரஸ்தா மேத்தா முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1934 இல் மீண்டும் கர்வே கைது செய்யப்பட்டார். "சமாஜ் ஸ்வாஸ்த்ய" ஏட்டின் குஜராத்தி பதிப்பில் வாசகர்களின் தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை குறித்த கேள்வி- பதில் பகுதியை இந்தப் பழமைவாதிகள் விரும்பவில்லை.

கேள்விகள் சுயஇன்பம் மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றி இருந்தன, அதற்குக் கர்வே வெளிப்படையாக பதிலளித்தார். அந்தக் கால கட்டத்தில், சமூகத்தில் இதுபோன்ற விஷயங்கள், மோசமானதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்பட்டன.

ஆனால் இந்த முறை கர்வே தனியாக இல்லை. மும்பையின் சிறந்த வழக்கறிஞரான பி.ஆர்.அம்பேத்கர் உயர் நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடத் தயாராக இருந்தார்.

அந்த சமயத்தில், மஹாட் மற்றும் நாசிக் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு வஞ்சிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கும் ஒரு தேசியத் தலைவராக அம்பேத்கர் அறியப்பட்டிருந்தார்.

லண்டனில் வட்ட மேசை மாநாட்டில் இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையையும் மகாத்மா காந்தியுடன் பிரபலமான புனே ஒப்பந்தத்தையும் அவர் ஏற்கெனவே செய்திருந்தார்.

கர்வே வழக்கை ஏன் எடுத்தார் அம்பேத்கர்

ஆர்.டி. கர்வே

பட மூலாதாரம், ARUN JAKHADE PADMAGANDHA PRAKASHAN

படக்குறிப்பு, ஆர்.டி. கர்வே

அம்பேத்கர் தனது அரசியல் மற்றும் சமூகப் பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். இருந்தும், அவர் ஏன் கர்வேயின் விஷயத்தைக் கையில் எடுத்தார்? அதுவும் சமுதாயத்தில் வரவேற்பில்லாத ஒரு விஷயம், இது குறித்த எதிர்வினை நிச்சயம் பெருமளவில் கிளம்பும் என்று தெரிந்தும் இதை அவர் எடுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்வேவின் பிரச்சினையை தன் கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டதாக அவர் உணர்ந்தார்?

மராத்தி நாடக ஆசிரியர் பேராசிரியர் அஜித் தல்வி, அம்பேத்கரின் இந்த நீதிமன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்ட 'சமாஜ் ஸ்வாஸ்த்ய' என்ற நாடகத்தை நாடு முழுவதும் அரங்கேற்றினார்.

பேராசிரியர் தல்வி, "அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அனைத்து வகுப்புகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன சமூகம் தான் அவருடைய கனவாக இருந்தது. அவர் அந்த திசையில் பயணித்துக் கொண்டிருந்தார். " என்று கூறுகிறார்.

பீம்ராவ் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், "1927 ஆம் ஆண்டில் அவர் ஏன் மனுஸ்மிருதியை எரித்தார், ஏனெனில் இதுபோன்ற இலக்கியங்கள் தனி நபர் சுதந்தரத்தைப் பறிப்பதாக அவர் நம்பினார். எனவே தனி நபர் சுதந்தரத்திற்கான போராட்டம் எங்கு முன்னெடுக்கப்பட்டாலும் அதற்குப் பின்னால் துணை நின்றார் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர்." என்று தெரிவித்தார்.

"சமாஜ் ஸ்வாஸ்த்ய பத்திரிக்கை விஷயத்தில், அடிப்படைவாத பிராமணியம் தனிமனித சுதந்தரத்திற்கும் கருத்து சுதந்தரத்திற்கும் எதிராக நின்றதை இங்கே காணலாம். அதனால்தான் அவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார்" என்று அவர் கூறுகிறார்.

அம்பேத்கர் தனது கல்வி, ஆய்வு முழுவதையும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் செய்தார். எனவே, இந்தியாவின் தாராளவாத மரபுகள் மட்டுமல்லாமல் நவீன மேற்கத்திய தாராளவாதக் கருத்துக்களாலும் அவர் ஈர்க்கப்பட்டார்.

கர்வேவின் எழுத்துக்களில் இருந்த தர்க்க ரீதியான கருத்துகள், அம்பேத்கரின் எழுத்துக்களிலும் அவரது படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன. எனவே பெரும் தலைவர்கள் கூட பேசத் தயங்கிய கருத்துகளை அம்பேத்கர் எளிதாகக் கையாண்டார்.

"பாலியல் குறித்து எழுதுவது ஒழுக்ககேடன்று"

பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

கர்வே வெறுமனே வாசகர்களின் உண்மையான சந்தேகங்களுக்கு பதிலளித்தார். பழமைவாதிகளைத் திருப்திப்படுத்த, அரசாங்கம் அவரைக் கைது செய்தது.

இதைக் கண்டு அம்பேத்கர் அதிர்ச்சியடைந்தார். "சமாஜ் ஸ்வாஸ்த்ய" பத்திரிக்கையின் மையக்கருத்தே பாலியல் கல்வி மற்றும் பாலியல் உறவுகள் பற்றித் தான். வாசகர்கள் அதைப் பற்றி கேள்விகளைக் கேட்டால், அதற்குப் பதிலளிப்பதில் என்ன தவறு என்பது தான் அம்பேத்கரின் கேள்வி.

கர்வே இதற்குப் பதிலளிக்கக்கூடாதென்றால், அதன் பொருள், அந்தப் பத்திரிக்கையையே மூடவேண்டும் என்பது தான்.

"அம்பேத்கரைப் பொறுத்தவரை, சமூகத்தின் நிலவி வந்த தார்மீக நம்பிக்கைகளுக்கு ஏற்பவே கர்வே பதிலளிக்க வேண்டும் என்று கூறுவதும் அநீதி தான்" என்று தல்வி கூறுகிறார்.

இந்த வழக்கில், பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 24, 1934 வரை, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி மேத்தா முன் விசாரணை நடைபெற்றது. கர்வேக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டு பாலியல் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஒழுக்கக்கேட்டைப் பரப்புகிறார் என்பதாகும்.

"பாலியல் விஷயங்கள் குறித்து ஒருவர் எழுதுகிறார் என்றால் அது ஒழுக்கக் கேடானது என்று கூற முடியாது. பாலியல் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் இப்படியே புறந்தள்ளும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்பதே அம்பேத்கரின் முதல் வாதம். இந்த விஷயத்தில், கார்வேயின் பதில்கள் குறித்து மட்டுமே நாம் பேசாமல், சமுதாய ரீதியாக இதைச் சிந்திக்க வேண்டியது அவசியம். நமது அரசியல் தலைவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் இன்றும் கூட கருத்து சொல்ல அஞ்சும் நிலையில், 80 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்." என்று தல்வி தெளிவுபடுத்துகிறார்.

மேலும் அவர், " இத்தகைய வக்கிரமான கேள்விகளை அச்சிட என்ன தேவை இருக்கிறது என்றும் இப்படிப் பட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் கூற வேண்டும் என்று நீதிபதி அவரிடம் கேட்டார். இது குறித்துக் கூறிய அம்பேத்கர், வக்கிரம் தோற்கடிக்கப்படவேண்டுமானால் அது அறிவினால் மட்டுமே முடியும். வேறு என்ன வழி இருக்கிறது? அதனால், கர்வே பதிலளிப்பது அவசியமாகிறது என்று வாதிட்டார்." என்று அவர் தெரிவிக்கிறார்.

பாலியல் கல்விக்கான உரிமை

பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

இது விஷயமாக, நவீன சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் விஷயங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் அம்பேத்கர் மேற்கோள் காட்டினார்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த ஹேவ்லாக் எல்லிஸின் ஆராய்ச்சியையும் அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். மக்களுக்கு இது போன்ற இச்சை இருந்தால், இதில் தவறில்லை என்று அவர் நம்பினார். தங்களுக்கு ஏற்ற வழியில் மகிழ்ச்சியை அடைய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

இது குறித்துக் கூறும் பேராசிரியர் தல்வி, "பாலியல் குறித்தே பேசத் துணியாத ஒரு சமூகத்தில், ஓரினச்சேர்க்கை பற்றிய அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை என்றே நான் நினைக்கிறேன்." என்று வியக்கிறார்.

அம்பேத்கர் இரண்டு உரிமைகள் குறித்து மிகவும் உறுதியாக இருந்தார். ஒன்று, பாலியல் கல்விக்கான உரிமை. எந்தவொரு மத மரபுவழிச் சிந்தனையும் இதற்கு எதிராக இருப்பதை அவர் விரும்பவில்லை. இவை பாரம்பரிய தடைகள். பிரகாஷ் அம்பேத்கர், "என்னைப் பொருத்தவரை, இந்திய சமுதாயத்தில் பாலியல் பற்றிய கருத்துகள், வேத மரபுகளுடன் தொடர்புடையது. சமூகத்தின் சில பிரிவுகள் தாராளவாதக் கருத்துக்களின் பாதையில் நடக்க தயாராக இருந்தன. ஆனால் வேத மரபுகளைப் பின்பற்றும் உயர் வர்க்கம், மரபுவழி கருத்துக்களைக் கைவிடத் தயாராக இல்லை. பாபா சாஹேப் இந்த பாரம்பரிய நம்பிக்கைக்கு எதிரானவர். " என்று சுட்டிக்காட்டுகிறார்.

இன்றும் வரவேற்பைப் பெறும் அம்பேத்கரின் வாதங்கள்

பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

பட மூலாதாரம், EPA

தல்வி கூறுகிறார், "பாபா அம்பேத்கரின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் வாதங்களுடன் மட்டுப்படவில்லை. அது அவரது அரசியலிலும் பிரதிபலித்தது. கர்வே தனது எழுத்துக்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். அம்பேத்கர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அதைச் செயல்படுத்தினார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த மசோதாவை அம்பேத்கர் கொண்டு வந்தார் 1937 இல் அப்போதைய பம்பாய் பிராந்திய சட்டமன்றத்தில். இந்த விஷயத்தில் அவரது விரிவான உரை கிடைக்கிறது."

கருத்துச் சுதந்தரம் அவர் போராடிய இரண்டாவது உரிமை. சமூகத்தின் ஒரு பகுதியினர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எந்தக் கருத்தையும் கேட்க விரும்பவில்லை என்பதற்காக, வேறு யாரும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு தாராளவாத அணுகுமுறையை ஏற்றுக்கொண்ட அவர், அனைத்து பிரச்சினைகளையும் நாம் வெளிப்படையாக விவாதிக்கும்போதுதான் சமூகத்திலிருந்து வக்கிரங்கள் அகற்றப்படும். அறிவுத்தெளிவு ஒன்றே இதற்கான ஒரே வழி என்று உறுதியாக நம்பினார்.

இறுதியாகப் பேராசிரியர் தல்வி, "இன்று நம் சமூகத்தில் "சமாஜ் ஸ்வாஸ்த்ய" போன்ற ஒரு பத்திரிக்கை இருக்கிறதா? கடந்த காலங்களில், பெரிய தலைவர்கள் பாலியல் தவிர மற்ற பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினர். மிகச் சிலரே இதைப் பற்றி பேசும் துணிவு கொண்டுள்ளனர்." என்று கூறுகிறார்.

ஆர்.டி. கர்வே மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் 1934 ஆம் ஆண்டு நடந்த வழக்கில், நீதிமன்றத்தில் தோல்வி கண்டனர். ஒழுக்ககேடான விஷயம் குறித்துப் பேசியதற்காக, மீண்டும் ஒரு முறை கர்வே-க்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற போராட்டங்கள், விளைவுகளுக்கு அப்பாற்பட்டு, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: