கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தாம் போல்
    • பதவி, பிபிசி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன மருத்துவர்கள் முதன்முதலில் மர்மமான சளி, காய்ச்சல் பாதிப்புடன் வந்த நோயாளிகளைப் பார்த்தார்கள். அப்போதிருந்து, கோவிட்-19 இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதற்கும் மேலாக, மிகவும் அச்சுறுத்தக்கூடிய புதிய திரிபு என்று விவரிக்கப்படுவதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியுமா?

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது.

ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது.

ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஜெர்மனியும் இதேபோன்ற நடவடிக்கையைத் திட்டமிடுகிறது. இப்போதைய அச்சம் என்ன, ஆபத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, நான் சுகாதாரத் துறை மற்றும் இதர வல்லுநர்களிடம் பேசினேன்.

ஆதரவு: தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுகிறது

கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்கு ஆதரவான வாதம் மிகவும் எளிமையானது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். நோயின் தீவிரம் குறைந்தால், நோய்த் தாக்குதலால் ஏற்படும் மரணங்களும் குறைகின்றன. மேலும், மருத்துவமனைகளிலும் நெருக்கடி குறையும்.

வரலாற்று ரீதியாக, நோய்த்தடுப்பு பிரசாரங்கள் பெரியளவு வெற்றியைக் கண்டுள்ளன. பெரியம்மை போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தியதோடு, மற்ற நோய்களிலும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்துள்ளன.

"தேவைகள், அதிக தடுப்பூசி விகிதங்களைப் பெறுதல் மற்றும் தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி சமூகங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி உறவைக் காட்டக்கூடிய நல்ல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன," என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வரலாறு துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜேசன் ஸ்வார்ட்ஸ்.

"தடுப்பூசிகள் முற்றிலுமாக வேலை செய்கின்றன அதைக்காட்ட எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன." என்கிறார் ஜேசன்.

ஆஸ்திரியா தற்போது முன்மொழிந்துள்ளவற்றை விட மென்மையான கட்டுப்பாடுகள் மூலமாகவே, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கை அடைந்துள்ளது.

தடுப்பூசி

பட மூலாதாரம், PA Media

பிரான்ஸ் நாட்டின் உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் செல்வதற்கு தேவையான தடுப்பூசி பாஸ், கட்டாய தடுப்பூசி விதியைத் தவிர்க்க முடியும் என்று அரசு நம்பும் அளவுக்கு செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தை உயர்த்துவதாக நம்பப்படுகிறது.

எதிர்ப்பு: தடுப்பூசியின் மீது சந்தேகம்

லண்டனில், ஜூலை மாதம் ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கி சில மணிநேரங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் கருத்து. குறிப்பாக, கோவிட் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் எதிர்ப்புகளை ஈர்த்துள்ளன. அதோடு கட்டாய முகக்கவசம் என்பதைவிட ஒரு படி மேலே கட்டாய தடுப்பூசி விதிமுறை இருக்கிறது.

"தடுப்பூசியைப் பொறுத்தவரை, மக்கள் மிகவும் வினோதமாகச் சிந்திக்கிறார்கள்," என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியிலுள்ள குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பொது சுகாதார மருத்துவர் வகீஷ் ஜெயின்.

"தம்முடைய உடலில் செலுத்தப்படும் எதையும், மக்கள் ஒரே மாதிரியாகச் எடுத்து கொள்வது கிடையாது. கல்வியாளர்களும் மற்றவர்களும் கோட்பாட்டளவில் இதை ஒரு கட்டுப்பாடு என்று நினைத்தாலும், மக்கள் இதை உணர்ச்சிகரமாக எதிர்கொள்கிறார்கள்." என்கிறார்.

தடுப்பூசி போட ஒருபோதும் வற்புறுத்தாத சிலர் எப்போதும் இருப்பார்கள். அதேநேரம், தடுப்பூசி எதிர்ப்பாளராக இல்லாமலே கூட, தடுப்பூசியின் மீது சந்தேகம் கொள்ளமுடியும்.

ஆஸ்திரிய ஆய்வு ஒன்றின்படி, நாட்டின் ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 14.5 விழுக்காடு பேர் தடுப்பூசி போடத் தயாராக இல்லாதவர்கள். கூடுதலாக, 9 விழுக்காடு பேர் முழு முற்றான தடுப்பூசி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

'This is a war': A protester holds up a needle sign in Melbourne, Australia

பட மூலாதாரம், Anadolu Agency

படக்குறிப்பு, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த பேரணி

கட்டாய தடுப்பூசிகளுக்கு எழும் எதிர்ப்புகளைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக உள்ளதா என்பதை அரசுகள் எடைபோட வேண்டும். ஆனால், கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான கேத்லீன் பவல் சொல்வது படி, சட்டரீதியாக வழக்கு ஒன்றுள்ளது.

"தான் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்ய ஒரு தனி நபருக்கு உரிமை இருப்பது போல ஒரு மோசமான நோயால் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்பும் உரிமை எதிரில் உள்ளவர்களுக்கும் உண்டு." என்கிறார் கேத்லீன்.

ஆதரவு: மற்ற வழிகளில் முயன்று பார்த்துவிட்டோம்

கோவிட் சில காலமாக நம்மிடையே உள்ளது. தடுப்பூசிகளும்தான்.

ஐரோப்பாவில் குறைந்தபட்சம், பல மாதங்களாக தடுப்பூசி செலுத்த முயன்றும்கூட, பரவலாக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. இப்போதைய கடுமையான கட்டுப்பாடுகளின் வேகம், இவ்வளவு கால முயற்சிகளுக்குப் பின்னணியிலுள்ள ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய கண்டம் முழுக்கவே மேற்கிலிருந்து கிழக்கு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டெர் லேயன், கட்டாய தடுப்பூசிகள் பற்றி சிந்திக்கவேண்டிய நேரம் இது என்று கூறினார். இருப்பினும், தனிப்பட்ட அரசுகள் அதுபற்றி முடிவு செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"எங்களிடம் உயிர் காக்கும் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், அவை எல்லா இடங்களிலும் போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

எதிர்ப்பு: பிற வழிகள் இருக்கின்றன

கட்டாய தடுப்பூசிக்கு ஆதரவாக வலுவான சுகாதார வாதம் இருந்தாலும்கூட, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுமட்டுமே ஒரே வழி இல்லை.

தடுப்பூசி

பட மூலாதாரம், Morsa Images

"அரசியல்வாதிகள் கட்டாய தடுப்பூசி முடிவையே எடுக்க விரும்புகிறார்கள் என்பது கடந்த காலத்தை பார்த்தால் தெரிகிறது. அது பிரச்னைக்கு விரைவான பதிலைக் கொடுப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறார்கள்," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி குழுவின் சமூக அறிவியல் ஆய்வாளரான சமந்தா வாண்டஸ்லாட்.

"மக்கள் உண்மையில் தடுப்பூசிகளை அணுகுவதை உறுதிசெய்யத் தேவைப்படும் பிற விஷயங்களை அரசு புறக்கணிப்பதை நான் விரும்பவில்லை."

பிப்ரவரி வரை ஆஸ்திரியா தடுப்பூசிகளை கட்டாயமாக்காது, இன்னும் வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. "பயப்படுபவர்களுக்கு, நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, ஆபத்து குறைவாக இருப்பவர்களுக்கு - அவர்களுடைய கேள்விகள் மற்றும் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்" என்று பல்கலைக்கழகத்தின் சுகாதார உளவியலாளர் பார்பரா ஜூன். தேசிய ஒளிபரப்பாளர் ஓஆர்எஃபிடம் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில், 24 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஐரோப்பிய சராசரியைவிட பாதிக்கும் குறைவானவர்கள். ஆனால், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 7 விழுக்காடு சராசரியை விட அதிகம். தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அதைப் போட்டுக்கொள்பவர்கள் குறைவாக இருப்பதற்கு தவறான தகவல் பரவுவது காரணமாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அரசு சில சூழ்நிலைகளில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், ஓமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகமாகியுள்ளது. இதை அரசுகள் மட்டுமே செய்வதில்லை.

ஆதரவு: ஊரடங்கு சுழற்சி முடிவுக்கு வரவேண்டும்

கட்டாய தடுப்பூசி என்பது மட்டுமே ஒரே கட்டுப்பாடு அல்ல. பெரும்பாலான அரசுகள் கோவிட் பாஸ் முதல் பயணத் தடை வரை சில வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உயிர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமின்றி, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்கு முடிவு வரும்.

"உங்கள் சுதந்திரம் கிடைப்பது மட்டுமின்றி, பொருளாதார சேதங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றியது," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் உய்ஹிரோ மையத்தின் ஆல்பர்ட்டோ கியூபிலினி. கொரோனா நச்சுயிரியால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளாஇ இவர் ஆதரிக்கிறார்.

தடுப்பூசி

பட மூலாதாரம், Andriy Onufriyenko/Getty Imagaes

"கையில் வேறொரு வழி இருக்கும்போது, மக்கள் மீது ஊரடங்கு உட்பட பெரிய சுமைகளைச் சுமத்த வேண்டியதில்லை."

எதிர்ப்பு: கட்சிகள் அரசியல் வாய்ப்பாகப் பார்க்கின்றன

இந்தத் திட்டத்தின் வெற்றி எதிர்கால பிரசாரங்களில் அவநம்பிக்கையை உருவாக்கமுடியுமா என்பது போன்ற நீண்டகால விளைவுகள் குறித்த கவலைகள் உள்ளன.

"நெருக்கடியின்போது கொண்டுவரப்படும் கட்டாயத் திட்டங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தொற்றுநோய் மீட்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோயியல் நிபுணர் Dr.டிக்கி புடிமேன் அல்-ஜசீராவிடம் கூறினார்.

"மக்களிடையே சதிக் கோட்பாடுகள், தவறான நம்பிக்கைகள், தவறான புரிதல்கள் இருக்கையில், [இத்தகைய திட்டங்கள்] அவர்களுடைய கருத்துகளைத்தான் வலுப்படுத்தும்."

அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டும் வாண்டெஸ்லாட், "குறிப்பாக, ஐரோப்பாவில் கட்சிகள் தடுப்பூசி எதிர்ப்பைத் தட்டிக் கொடுப்பதையும் வாக்குகளைப் பெற இது ஒரு வழியாக இருக்குமென்று கருதுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

"பல கட்சிகள், வலதுசாரி என்று சொல்லிக்கொண்டு, அரசியல் பிரசாரத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு, கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளை நீக்க விரும்புவதாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதுதான் அச்சமாக இருக்கிறது. அது நடந்துவிட்டால், இதை ஒரு கொள்கை நடவடிக்கையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு எங்கள் கையில் இருக்காது." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :