விஜய் சேதுபதியிடம் ரூ.3 கோடி கேட்டு அவதூறு வழக்கு - விமான நிலைய தாக்குதலில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், GUILLAUME SOUVANT/Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ` பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியுடன் வந்தவர்கள் தாக்கியதால், காதில் நிரந்தர கோளாறு ஏற்பட்டுவிட்டது. எனது நன்மதிப்பையும் கெடுத்துவிட்டார்' எனவும் மனுவில் மகா காந்தி குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது?
விமான நிலைய தாக்குதல்
பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதிக்கும் மற்றொரு நடிகரான மகா காந்தி என்பவருக்கும் இடையே நடந்த மோதல், திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய தினம் பின்னிரவில் விமான நிலையத்தில் விஜய் சேதுபதியிடம் பேசுவதற்காக வந்த மகா காந்தி என்பவர், ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியைத் தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியானது. `அந்த நபர் குடிபோதையில் இருந்தார்' எனவும் விஜய் சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை. அவரது உதவியாளர் ஜான்சனை, மகா காந்தி என்பவர் தாக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இரு தரப்புமே சமாதானமாகச் சென்றுவிட்டதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி, மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ` மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால், அதனை ஏற்க மறுத்து பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தியதுடன் என்னுடைய சாதியைப் பற்றித் தவறாகப் பேசினார்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், நன்மதிப்பை கெடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
விஜய் சேதுபதியால் ஏற்பட்ட சிக்கல்
இதுதொடர்பாக, நடிகர் மகா காந்தியின் சார்பாக வழக்கைத் தாக்கல் செய்துள்ள வழக்குரைஞர் இன்பென்ட் தினேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முதுகெலும்பு தண்டுவடத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை எடுப்பதற்காக நடிகர் மகா காந்தி மைசூருவுக்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் தற்செயலாக விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது விஜய் சேதுபதியின் உடன் இருந்த அவரது நண்பர் ஒருவர், மகா காந்தியின் காதில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் 30 விநாடிகளுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் மகா காந்தி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

பட மூலாதாரம், SCREENSHOT
இதன்பிறகு தன்னைத் தாக்க வரும்போது மகா காந்தி எட்டி உதைக்கப் போனார். இதையே மகா காந்தி தாக்கியதாக ஊடகங்களில் வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் காட்சிகளைத் தருமாறு தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விமான நிலைய அதிகாரிகளிடம் மகா காந்தி கோரியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அவரது காது கிழிந்துவிட்டது. `அது நிரந்தரமாக கோளாறாக (Permanent Disability) மாறிவிட்டது' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு சென்னையில் ஊடகங்களுக்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், `அந்த நபர் குடிபோதையில் இருந்தார்' எனத் தெரிவித்திருந்தார். உண்மையில், குடியில் இருந்து மகா காந்தி விலகி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு மனு
அந்தப் பேட்டியால் மகா காந்தியின் பெயரும் கெட்டுவிட்டது. அதனால்தான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நன்மதிப்பைக் கெடுத்தது, நிரந்தரமாக காதில் கோளாறு ஏற்பட்டது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளோம்" என்கிறார்.
``சாதி அவமதிப்பு செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதே?" என்றோம். `` அதனை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் மகா காந்தியின் விருப்பம். குடிபோதையில் அவர் இவ்வாறு செய்தார் எனக் கூறியதால், `நான் குடிபோதையில் இல்லை, தான் செய்த தவறை மறைப்பதற்காக விஜய் சேதுபதி இவ்வாறு செய்துவிட்டார்' என்பதுதான் மகா காந்தியின் ஆதங்கம். சம்பவம் நடந்த அன்று, `தேவர் குருபூஜைக்கு வந்தீர்களா?' என விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் மகா காந்திக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Maha Gandhi
விஜய் சேதுபதியும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என நினைத்துக் கேட்டுவிட்டார். உண்மை இதுதான். இதன்பிறகும் உடன் இருந்தவர்களை வைத்து மகா காந்தியை அடிக்க வைத்ததுதான் பிரச்னை. இனி காது பிரச்னையை சரிசெய்யவே முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். விஜய் சேதுபதி அளித்த விளக்கத்தால் ஆறு படங்களின் வாய்ப்பும் மகா காந்திக்குப் பறிபோய்விட்டது. எனவே, 3 கோடி இழப்பீட்டையும் கோரியுள்ளோம்" என்கிறார்.
விஜய் சேதுபதி தரப்பினர் சொல்வது என்ன?
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் நர்மதா சம்பத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது மேலாளர் ஜான்சனுடன் வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும் தவறான புரிதல் காரணமாக சம்பவம் நடந்துவிட்டதாகவும் மேற்கொண்டு எந்தப் புகாரும் வேண்டாம் என விமான நிலைய காவல் நிலையத்தில் நடிகர் மகா காந்தி எழுதிக் கொடுத்துள்ளார். இந்தநிலையில் தற்போது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது என்பது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மகா காந்தியின் மீது உரிய மானநஷ்ட வழக்கு தொடர்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- அணைப் பாதுகாப்பு சட்டம் - அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?
- ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- 'கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்' என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர்
- இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்: நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












