அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், SPL
வரவிருக்கும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலகையும் நம் வாழ்க்கையையும் திறம்பட்ட வகையில் மாற்றக்கூடும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இதை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது.
இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய அரசு, குவாண்டம் சிமுலேட்டர் Qsim ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது எளிமையாக்கப்பட்டது.
இந்தியாவோடு கூடவே பிற நாடுகளும் எதிர்காலத்திற்கு புதிய திசையை வழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. அமெரிக்க அரசு 2018 இல் தேசிய குவாண்டம் முன்முயற்சி சட்டத்தை இயற்றியது. அதற்காக 1.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 2016 ஆம் ஆண்டில், 13வது ஐந்தாண்டுத் திட்டத்தில் செயல்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக குவாண்டம் தகவல்தொடர்புகளை இணைத்தது.
இங்கிலாந்து 2013 இல் இதற்கான தேசிய செயல்திட்டத்தை வகுத்தது. 2016 ஆம் ஆண்டில் கனடா, இந்த தொழில்நுட்பத்தில் 50 மில்லியன் கெனடிய டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தது. இவை தவிர, ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூடவே கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன.
குவாண்டம் கணினிகள் என்றால் என்ன, அதை உருவாக்க நாடுகளிடையே ஏன் போட்டி உள்ளது என்பதை பிபிசி ஆய்வு செய்தது.
நிச்சயமற்ற அறிவியல்
குவாண்டம் கம்ப்யூட்டிங்கைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் குவாண்டம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இது குறித்த விவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய காலம் இது.
அப்போது வரை இயற்பியல், செவ்வியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது உண்மையில் நடக்கும் நிகழ்வுகளின் விளக்கத்துடன் தொடர்புடையது. இதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் மாற்றம் போன்ற அனைத்துமே உறுதிசெய்யப்பட்டவை.
டாக்டர். சோஹினி கோஷ் கனடாவில் உள்ள வில்பிரட் லாரியர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
"இந்தத் தகவலை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்தை எடுக்க வேண்டும். அதாவது ஒருவேளை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் நாம் நம்புவது போல் உறுதிசெய்யப்பட்டது இல்லை என்பதே அது. இயற்பியலின் கொள்கைகளில் ஒரு அடிப்படை நிச்சயமற்ற தன்மை இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்."என்று அவர் கூறுகிறார்.
இந்த நிச்சயமற்ற தன்மை பொருளின் மிகச்சிறிய துகளான அணுவின் மூலக்கூறின் நடத்தையில் உள்ளது. குவாண்டம் இயக்கவியல் என்பது இந்த சிறிய மூலக்கூறுகளின் நடத்தை பற்றிய ஆய்வு ஆகும். இதை இயற்பியலின் செவ்வியல் கோட்பாட்டின் வரையறைக்குள் வைத்து புரிந்து கொள்ள இயலாது.
'உண்மை என்று நாம் நம்பும் அனைத்தும் உண்மை என்று கூற முடியாத விஷயங்களால் ஆனது. 'இது உண்மையாக இருக்குமானால், அறிவியலைப்பொருத்தவரை இது இயற்பியலின் முடிவாக இருக்கும்' என்று, ஐன்ஸ்டீன் கூறியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்," என்று இந்த நிச்சயமற்ற தன்மை குறித்து விஞ்ஞானி நீல்ஸ் போர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், GUIDO BERGMANN/BUNDESREGIERUNG VIA GETTY IMAGES
"நான் இதை இவ்வாறு புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன - தலை மற்றும் வால். நாணயத்தை சுண்டினால், தலை அல்லது வால் வரும். இதன் வாய்ப்புகள் சமம் அதாவது 50-50 சதவிகிதம் ஆகும். ஒரு நாணயத்தை சுண்டும்போது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அதில் தலையோ அல்லது வாலோ இருக்கும் என்று இயற்பியல் கூறுகிறது. ஆனால் அதை ஒரு குவாண்டம் நாணயம் என்று நாம் கருதினால், ஒரு கட்டத்தில் அதில் தலை அல்லது வால் மட்டும் இருக்கும் என்பது கிடையாது. அதன் அடையாளம் நிச்சயமற்றது ,"என்று டாக்டர் சோஹினி கோஷ் கூறுகிறார்.
நீங்கள் ஒரு குவாண்டம் நாணயத்தை இரண்டு பக்கங்களுக்கு மட்டுப்படுத்த முடியாது. சாதாரண நாணயங்களை விட இது அதிக நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது. அதாவது அவை பைனரி அல்லாதவை.
"நாங்கள் இதை சூப்பர் பொசிஷன் என்று அழைக்கிறோம். அதாவது நாணயம் சுழலும் போது, இருபுறமும் ஒரே நேரத்தில் ஒன்றாக இருக்கும் அதாவது ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இதுவரையிலான நமது அனுபவத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது. இதைப்புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல," என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிச்சயமற்ற தன்மை அதாவது பைனரி அல்லாதது, ஒரு பொருளின் இயல்பு என்று குவாண்டம் கொள்கையில் பணிபுரியும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். குவாண்டம் கம்ப்யூட்டர்களின் இந்தக்கருத்துதான் அவற்றை புரட்சிகரமானதாக மாற்றுகிறது என்று டாக்டர் சோஹினி கோஷ் கூறுகிறார்.
"இந்த தொழில்நுட்பம், முற்றிலும் மாறுபட்ட இயற்பியல் கொள்கைகளில் செயல்படுகிறது. வாகனம் உங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையை மட்டுமே செய்யும். ஆனால் இது, அறிவியலின் வேறு கொள்கைகளின் அடிப்படையில் இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
குவாண்டம் உலகில் நிச்சயமற்ற தன்மை என்பது எல்லா பொருட்களின் இயல்பு. அத்தகைய இயந்திரங்களை உருவாக்க விரும்புவோர் இதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பட மூலாதாரம், ALEXEI BYLINSKII-QUERA/VIA REUTERS
குவாண்டம் கணினிகள் ஏன் சிறப்பானவை?
பேராசிரியர் ஸ்டெஃபனி வேனர், டெஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையத்தை நடத்தி வருகிறார். சாதாரண கணினியை விட குவாண்டம் கணினி எவ்வாறு சிறந்தது என்பதை அவர் விளக்குகிறார்.
"ஒரு பொதுவான கணினி தகவலை பூஜ்ஜியங்களாகவும் ஒன்றுகளாகவும் செயலாக்குகிறது. நீங்கள் எனக்கு ஒரு வீடியோவை அனுப்பினால், கணினி அதை ஜீரோ மற்றும் ஒன்று தொடரின் மில்லியன் கணக்கான துண்டுகளாகப் பிரித்து எனக்கு அனுப்புகிறது. பின்னர் அதை மறுகட்டமைத்து நீங்கள் அனுப்பிய வீடியோவை என்னால் பார்க்க முடியும். ஆனால் குவாண்டம் கணினியில் நாம் குவாண்டம் பிட்களில் வேலை செய்கிறோம். இதில் பூஜ்யம் மற்றும் ஒன்று தவிர, இவை இரண்டும் ஒருசேரவும் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
இதற்குக் காரணம், சற்று முன் நாம் பேசிய சூப்பர்பொசிஷனிங்தான். இது எப்படி நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் 'சிக்கலான வழிகள் கொண்ட புதிரில்' இருப்பதாகவும், அங்கிருந்து வெளியேற கணினியின் உதவியை நாடுகிறீர்கள் என்றும் கற்பனை செய்யுங்கள்.
"நீங்கள் இடதுபுறம் செல்ல விரும்பினால், இடதுபுறத்தில் உள்ள வழியை கண்டுபிடிக்க எத்தனை வாய்ப்பு உள்ளது என்று கணினியைக் கேட்கிறீர்கள். வழி கிடைக்கவில்லையென்றால், வலது புறத்தில் உள்ள பாதை பற்றி கேட்பீர்கள். ஏனென்றால் குவாண்டம் கம்பூட்டரில் குவாண்டம் பிட் , 'பூஜ்ஜியம் மற்றும் ஒன்று' அல்லது 'இடது மற்றும் வலது' ஒன்றாக சேர்ந்தும் இருக்கலாம். இரண்டு சாத்தியங்களையும் நீங்கள் ஒரே நேரத்தில் ஆராயலாம். இது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சாதாரண கணினியுடன் ஒப்பிடும்போது குவாண்டம் கணினி ஒரே நேரத்தில் பல சாத்தியக்கூறுகளில் வேலை செய்யும் என்பதால் சில கேள்விகளுக்கான பதில்களை வேகமாகக் கண்டறிய முடியும்,"என்று பேராசிரியர் ஸ்டெஃபனி வேனர் கூறுகிறார்.
இத்தகைய அதிவிரைவு கணினி மருத்துவத் துறையில் என்ன பங்களிக்க முடியும் என்ற கேள்வி எழலாம். இவை புதிய மருந்துகளை தயாரிக்க உதவுமா?
"மருந்து தயாரிக்க ஒரு ரசாயனம் பயன்படுமா என்பதை நீங்கள் ஆய்வகத்திற்குச் சென்று சோதிக்கலாம். அதற்கு நேரம் ஆகலாம் என்பதால், மக்கள் அதை ஆராய்ச்சி செய்வதற்குப் பதிலாக உருவகப்படுத்துதல்களைச் செய்வதன் மூலம் அதன் பயன்பாடு சரியாக இருக்குமா இல்லையா என்று புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
சாதாரண கணினியால் இதைச் செய்ய முடியுமா? இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஸ்டெஃப்னி வேனர் , "கோட்பாட்டளவில், ஒரு குவாண்டம் கணினியால் செய்யக்கூடிய அனைத்தையும் ஒரு சாதாரண கணினியால் செய்ய முடியும். கேள்வி என்னவென்றால், அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதுதான். குவாண்டம் கணினியில் இதை சில மணிநேரங்களில் செய்யமுடியும். ஆனால் சாதாரண கணினியில் அதை செய்துமுடிக்க ஒரு ஜென்மத்தை விட அதிகநேரம் ஆகும்," என்று குறிப்பிட்டார்.
இதன் பொருள் என்னவென்றால் குவாண்டம் கணினிகள் மருந்து ஆராய்ச்சியில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்பதுதான். இத்தகைய சூழ்நிலையில் இதன் கிராக்கி அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறு இல்லை.
கடுமையான சவால்
பேராசிரியர் வின்ஃப்ரெட் ஹென்சிங்கர் குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான சசெக்ஸ் மையத்தின் இயக்குநராக உள்ளார். அவர் குவாண்டம் கணினிகளின் தொழில்நுட்பத்தை உண்மையாக்க விரும்புகிறார்.
"குவாண்டம் கம்ப்யூட்டர்கள் அறிவியலின் மிக முக்கியமான மற்றும் ஆழமான மர்மம். அவை அற்புதமான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை பல விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால் அவற்றை உருவாக்குவது மிகவும் கடினமான சவாலாக உள்ளது. ஏனெனில் சூப்பர்பொசிஷன் போன்ற செயல்முறையை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதை செய்யாமல் நீங்கள் கணக்கீடு செய்ய முடியாது,"என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் இதைச் செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதில் வெற்றிபெறவில்லை.
"இரண்டு தளங்களின் முடிவுகள் நேர்மறையாக இருந்தன. அவற்றில் ஒன்று, மைக்ரோசாப்ட், ஐபிஎம் மற்றும் கூகுள் ஆகியவை குவாண்டம் கணினிகளை உருவாக்கப் பயன்படுத்தும் சூப்பர் கண்டக்டிங் சர்க்யூட் ஆகும். இது நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு சிறப்பு வகையான மின்னணு சுற்று. இருநூற்று ஐம்பது டிகிரி செல்சியஸுக்கும் குறைவான தட்பநிலையில் குளிர்விக்க வேண்டும்," என்று பேராசிரியர் ஹென்சிங்கர் விளக்குகிறார்.
குளிர்சாதன பெட்டி எவ்வளவு பெரிய மைக்ரோசிப்பை குளிர்விக்க முடியும் என்பதைப் பொருத்து பிழையின்றி ஒரு க்யூபிட்டை உருவாக்கும் திறன் அமையும். சூப்பர் கண்டக்டிங் சர்க்யூட்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், பெரிய குளிர்சாதனப்பெட்டியை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

பட மூலாதாரம், MISHA FRIEDMAN/GETTY IMAGE
127 க்யூபிட்களை உருவாக்கக்கூடிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஐபிஎம் அறிமுகப்படுத்தியது. இவ்வளவு பெரிய அளவிலான க்யூபிட்டுகளை உருவாக்கக்கூடிய முதல் சாதனம் இது என்று நிறுவனம் கூறுகிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் 1,121 க்யூபிட்களை உருவாக்கும் ஒரு சிப்பை தயாரிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பேராசிரியர் ஹென்சிங்கர் மற்றும் அவரது குழு இந்த சிக்கலை தீர்க்க முயற்சிசெய்துவருகிறது. நுண்ணிய துகளான மின்னூட்டமுடைய அயனிகளை (ions) சிக்க வைக்கும் வழியை அவர்கள் பின்பற்றுகின்றனர்.
"அயனிகளை பிரிக்கமுடிந்தால் அவற்றை சாதாரண வெப்பநிலையில் பயன்படுத்தப்படலாம். இந்த நுட்பத்தில் நீங்கள் மின்சார புலத்தை உருவாக்கும் மைக்ரோசிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். இதன் காரணமாக, சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள் மைக்ரோசிப்பின் மேல் மிதக்கின்றன. ஒவ்வொரு அயனியும் ஒரு குவாண்டம் பிட் போல வேலை செய்யும். இதில் பூஜ்யம் மற்றும் ஒன்றின் தகவல்களைச் சேமிக்க முடியும். இதுபோன்ற பல அயனிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங் செய்ய முடியும்,"என்கிறார் பேராசிரியர் ஹென்சிங்கர்.
இந்த தொழில்நுட்பம் விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஆனால் இந்தப்பணியை செய்யும் இயந்திரங்கள் எப்படி இருக்கும்?
"அவை மிகப்பெரியவை. அவை வெற்றிட குழாய் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கணினிகளை விட சில மீட்டர்கள் மட்டுமே சிறியவை என்று நீங்கள் கூறலாம். அவற்றில் லேசர்கள், மின்னணுவியல் மற்றும் ஆப்டிகல் அமைப்புகள் உள்ளன. இது அறிவியல் புனைகதை திரைப்படங்களில் காட்டப்படும் எதிர்கால இயந்திரங்கள் போல தோற்றமளிக்கின்றன," என்றுபேராசிரியர் ஹென்சிங்கர் கூறுகிறார்.
பேராசிரியர் ஹென்சிங்கரும் அவரது குழுவினரும் இதுவரை குவாண்டம் கணினியின் ஐந்து முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் க்யூபிட்டுகள் தேவைப்படும். இந்த சூழ்நிலையில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் க்யூபிட்களை உருவாக்க முயற்சி செய்துவருகின்றனர்.
"குவாண்டம் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டில் இது மிகப்பெரிய சவாலாகும். தற்போது உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் குறைவான க்யூபிட்களையே உருவாக்குகின்றன. பத்து-இருபது க்யூபிட்களை உருவாக்குவதற்கு பதிலாக லட்சக்கணக்கானவற்றை உருவாக்க முயற்சிக்கிறோம்.," என்று அவர் குறிப்பிட்டார்.
1940 களில் சிறிய வேலைகளைச் செய்வதற்கு பெரிய இயந்திரங்கள் இருந்தன. அவற்றின் விலை அதிகம். கூடவே இயக்குவதும் கடினம். காலப்போக்கில் தொழில்நுட்பம்மேம்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் கிளவுட் மூலம் குவாண்டம் கணினிகளைப் பயன்படுத்த முடியும் என்று பேராசிரியர் ஹென்சிங்கர் நம்புகிறார்.

பட மூலாதாரம், APIC/GETTY IMAGES
குவாண்டம் கணினிகளுக்கான பந்தயம் ஏன்?
அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ஜோனாதன் டெளலிங். குவாண்டம் கம்ப்யூட்டர்களின் திறன்கள் தொடர்பாக அவர் நீண்ட காலம் பணியாற்றினார்.
அவர் காலமாவதற்கு முன்பு 2020 ஜூன் மாதம் பிபிசி உடன் மேற்கொண்ட உரையாடலின்போது, "குவாண்டம் கணினிகளை தயாரிப்பதில் நாடுகளுக்கு இடையே போட்டி உள்ளது, அது விண்வெளி பந்தயம் போன்றது" என்று கூறினார்.
தனிப்பட்ட தரவு, நிறுவனங்கள், ராணுவம் மற்றும் அரசுகளின் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான போட்டி இது. தரவு என்பது சக்தி. இந்த விஷயத்தில் தாங்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதை இப்போது நாடுகள் உணர்ந்துள்ளன.
2013 ஆம் ஆண்டில், அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோடென், அரசு தொடர்பான பல உளவுத்துறை ஆவணங்களை கசியவிட்டார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் எந்த அளவிற்கு மற்றவர்களின் தகவல் தொடர்பு வலையமைப்பில் ஊடுருவ முடியும் என்பதை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தின.
"எட்வர்ட் ஸ்னோடென் அம்பலப்படுத்திய ஆவணங்கள், சீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் தொடர்பு வலையமைப்பை ஊடுருவும் விஷயத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு, தான் நினைத்ததைக்காட்டிலும் மிகவும் முன்னால் இருப்பது அதற்கு ஆச்சரியத்தை அளித்தது. அமெரிக்கர்கள், முதல் குவாண்டம் கணினியை உருவாக்கிவிடுவார்கள் என்றும் சீனா கவலை கொண்டது," என்று ஜொனாதன் கூறினார்.

இது நடந்தால், சீனாவின் உளவுத்துறை தகவல்களைஅமெரிக்கா படிக்க முடியும். ஆனால் தனது ரகசியங்களை சீனா படிக்க விடாமல் தடுக்க முடியும். அது எப்படி?
"பாப் என்பவர் ஆலிஸுக்கு ஒரு ரகசிய செய்தியை அனுப்ப விரும்புகிறார் , ஆனால் ஈவ் அவர்களின் தொடர்பு சேனலில் ஊடுருவ விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது, பாதுகாப்பான செய்திகளை அனுப்ப 'என்க்ரிப்ட்' குறியாக்க நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாப் தகவலை பூட்டி ஆலிஸுக்கு அனுப்புகிறார். இதற்கான திறவுகோல் ஆலிஸிடம் மட்டுமே உள்ளது, அவளால் மட்டுமே அதைத் திறக்க முடியும். அதை ஹேக் செய்ய ஒரு சாதாரண கணினிக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். . ஆனால் ஒரு குவாண்டம் கணினி அதை சில மணிநேரங்களில் ஹேக் செய்துவிடும்."என்று அவர் விளக்குகிறார்.
இதை கேட்க பயமாக இருந்தாலும் ஒரு நேர்மறையான அம்சமும் இதில் உள்ளது. அதாவது, 'குவாண்டம் கீ' பயன்படுத்தினால், குவாண்டம் கம்ப்யூட்டரால் கூட அதை ஹேக் செய்ய முடியாது. சூப்பர்பொசிஷனிங் காரணமாக இது சாத்தியமாகும்.
'குவாண்டம் கீ'யை ஹேக் செய்ய முயற்சித்தால், அதில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் தானாகவே அழிந்து, அனுப்புனருக்கு அது தெரிய வரும்.
குவாண்டம் கணினிகள் மூலம் தகவல்தொடர்பு முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இதுவே அதை உருவாக்குவதற்கான பந்தயத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம். இந்த தொழில்நுட்பத்தில் சீனா அதிக அளவில் முதலீடு செய்து வருவதாக ஜோனாதன் டௌலிங் கூறினார்.
"சீனா ஒரு வலையமைப்பை உருவாக்குகிறது., அதில் செயற்கைக்கோளும் சேர்க்கப்படும். நாடு முழுவதும் ஃபைபர் அல்லது செயற்கைக்கோள் மூலம் குவாண்டம் கிரிப்டோகிராஃபி நெட்வொர்க் பரவி, முழு நெட்வொர்க்கையும் ஹேக்-ப்ரூஃப் செய்யும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் முன்னேற முடியாதவர்கள் மீது தரவு திருட்டு அபாயம் இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்..
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்கின்றன. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை யதார்த்தமாக மாற்றி, பெரிய அளவில் செயல்படுவதுதான் விஞ்ஞானிகளின் முன் உள்ள சவால்.
நமது கேள்விக்கு மீண்டும் வருவோம் - குவாண்டம் கணினிகளை உருவாக்கும் போட்டி ஏன்?
இது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சியின் எதிர்காலம். ஆனால் குவாண்டம் உலகின் மிக முக்கியமான வீரரான அணுவின் நிச்சயமற்ற நடத்தை காரணமாக, மிகவும் சக்திவாய்ந்த இந்த இயந்திரங்களை உருவாக்குவது கடினமான சவாலாக உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை உள்ளங்கைக்குள் கொண்டுவரும் போட்டியில் பல நாடுகள் உள்ளன. இந்த பந்தயம் எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இது மிக அதிக சுவாரசியத்தை உருவாக்கக்கூடியது என்பது மட்டும் உண்மை.
தயாரிப்பாளர் - மான்சி டாஷ்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












