ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது.
இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது.
இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்க நிலவழித் தொடர்புகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், அலைக்கற்றைகளின் வழியே பல்வேறு தொடர்புச் சாதனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே இல்லாமலும் விரைவில் இணையம் சாத்தியமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதற்கான தொடக்கமே, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் இணையத் தொடர்பு சேவை நிறுவனம். உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் செயற்கைக் கோள் மூலமாக நேரடி இணைய சேவையை வழங்குவதே இதன் நோக்கம்.
அப்படி என்ன புதுமை?
இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் வழியே நமக்கு இணைய வசதி கிடைக்க வேண்டுமெனில், அதற்குப் பல நிலவழி இணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் கம்பிகள் என்று பல கட்டுமானங்கள் அதற்குத் தேவையாக இருக்கிறது.
ஆனால், "இவை எதுவுமே இல்லாமல், இணைய வசதியை செயற்கைக்கோள் மூலம் நேரடியாகப் பெறமுடியும். பொதிகை மலையின் உச்சியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தாலும்கூட இந்த வசதியைப் பெறமுடியும்," என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம்.
"இப்போது ஃபைபர் கேபிள்கள், குறைந்தளவு தொலைவுக்குள் உணர்கொம்பு மூலம் கிடைக்கக்கூடிய வயர்லெஸ் இணைப்பு, போன்றவற்றின் மூலம் இணைய சேவைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து செயற்கைக்கோள் இணைய சேவை வேறுபடுகிறது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிறு செயற்கைக்கோள்களைப் பொருத்தி, அவற்றிலிருந்து, அந்தக் குறிப்பிட்ட அலைவரிசையை ஏற்பதற்கென பயனாளர்களுக்கு வழங்கப்படும் உணர்கொம்புகளின் மூலம் இந்த இணைய சேவை சாத்தியப்படுகிறது. இது இணைய சேவையை நிலவழித் தொடர்பு மூலம் கொண்டு செல்லவே இயலாத பகுதிகளிலும் அதற்கான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் பல புரட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் பல கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்கள் நினைத்த நொடியில் வெளியுலகோடு தொடர்புகொள்வது சவாலான காரியம். ஆனால், இதன் வழியே அது சாத்தியப்படும்," என்று பிபிசி தமிழிடம் ஸ்ரீராம் கூறினார்.
முன்பதிவு முயற்சியைத் தடைசெய்த இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இந்தச் சேவையை வழங்குவதற்காக ஒன்வெப், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு படி முன்னேறி, செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கான முன்பதிவுகளையே தொடங்கினார்கள்.
கடந்த நவம்பர் 1-ஆம் தேதியன்று இந்தியாவில் தொழில் செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. டிசம்பர் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 12 பகுதிகளில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான 200,000 டிஷ்களைக் கொண்டு சேர்க்கும் தன் திட்டத்தையும் அறிவித்தது. அதோடு, உரிய உரிமம் பெறுவதற்கும் முன்னதாகவே, இந்திய மதிப்பில் 7,400 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களை அதற்கான முன்பதிவுகளைச் செய்யவும் விளம்பரப்படுத்தியது.
ஆனால், அதற்குரிய முறையான உரிமங்களை இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் இன்னும் பெறாத காரணத்தால் முன்பதிவு செய்யக்கூடாது என்று இந்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது. அத்துடன், ஸ்பேஸ் எக்ஸின் ஒரு பிரிவான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு முன்பதிவு செய்யவேண்டாம் என்று மக்களுக்கும் அரசு அறிவுறுத்தியது.
இதனால் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது முன்பதிவு சேவையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 5,000 பேர் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்களுடைய முன்பதிவுகள் ரத்து செய்யப்படுமா அல்லது அவர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஸ்டார் லிங்க் இணையதள அறிவிப்பில், "உங்கள் பகுதியில் ஸ்டார்லிங்க் வசதி இப்போது கிடைப்பதில்லை. ஆனால், மேலதிக செயற்கைக்கோள்களை நாங்கள் ஏவுவதால், இன்னும் விரிவுபடுத்துவோம். உங்கள் பகுதிக்கு எப்போது ஸ்டார்லிங்க் இணைய வசதி கிடைக்கும் என்பதை வரும் நாட்களில் தெரிந்துகொள்ள் மீண்டும் இங்கு வாருங்கள்," என்று தெரிவித்துள்ளது.
மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஈலோன் மஸ்க் முயற்சி ஏன் தடுக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இணைய வசதியே கிடைக்காத கிராமப்புறங்களுக்கு இதைக் கொண்டு செல்வதே தன் நோக்கம் என்று ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்கான முன்பதிவுகளைச் செய்ய வரவேற்ற ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்தியது குறித்து, ஸ்ரீராமிடம் கேட்டபோது, "ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் வரும்போது அதை அரசு நெறிப்படுத்தும். உதாரணத்துக்கு, சில செயல்கள் அமெரிக்காவில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அதுவே வேறொரு நாட்டில் குற்றமாகக் கருதப்படும்.
இப்படியிருக்க இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்தவரை, செயற்கைக்கோள் பயன்பாடு உள்ளது, தொலைநிலையில் இணைக்கப்படுகிறது. ஆகவே, தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதன் செயல்பாடுகளை முழுமையாக அலசி இந்தியாவிற்கு ஏற்ப அரசு நெறிப்படுத்தும்.
அதோடு, இப்போது அவர்கள் சோதனை முயற்சிக்கான உரிமம் மட்டுமே வாங்கியுள்ளார்கள். வணிகரீதியிலான உரிமம் இன்னும் பெறவில்லை. அதுவும் ஒரு காரணம்," என்று கூறினார்.
செயற்கைக்கோள் இணையம் தான் எதிர்காலமா?
செயற்கைக்கோள் இணைய சேவை என்பது எளிய மக்களுக்கு எப்படிப் பயனளிக்கும் என்பது குறித்து, தொலைத்தொடர்பு ஆய்வாளர் முனைவர் மகேஷ் உப்பல் பிபிசி தமிழுக்குப் பேசியபோது, "வாடிக்கையாளர்கள் செயற்கைக்கோள் இணைய சேவையை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு இன்னும் காலமாகும். இந்தச் சேவை இனிதான் தொடங்கப்படவிருக்கிறது.
அதுமட்டுமின்றி, இதற்கான செயற்கைக்கோள் ரிசீவர் தொழில்நுட்பம், இன்றைய சூழலில் எளிதில் கிடைக்கும் வகையில் இல்லை. இதன் விலையையும் குறைப்பதற்கான பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டும்" என்றார்.
அவரிடம், இதை இன்றைய தொலைத்தொடர்புச் சாதனங்களிலேயே பயன்படுத்த முடியுமா, இது எளிமையாக அனைவருக்கும் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பன குறித்துக் கேட்டபோது, "அனைத்து தட்டு மக்களும் பயன்படுத்தும் வகையில் இதன் விலை குறைய குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது ஆகும். இதன் விலை கண்டிப்பாகக் குறையும், ஆனால் உடனே நடக்காது."
நாட்டின் எல்லா மூலையிலும் இது சாத்தியப்படும்
"மேலும், இதன்மூலம் தொலைத்தொடர்பு வசதிக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கும் நிலப்பகுதிகளில் கூட இணைய சேவையைக் கொண்டுசெல்ல முடியும். உதாரணத்திற்கு, நிலவழித் தொலைத்தொடர்பு சேவையில் செல்போன் கோபுரம் அமைப்பது போன்ற பல செலவுகளும் அதற்கான நேரமும் தேவைப்படும்.
செயற்கைக்கோள் சேவை இவற்றைக் குறைக்கிறது. ஆகவே, அத்தகைய பகுதிகளில் நிலவழிச் சேவையைவிட செயற்கைக்கோள் சேவை மலிவானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். இதன்மூலம் நிலவியல் பேதமின்றி அனைவருக்குமே தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்," என்று கூறினார்.
இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) 2020-ம் ஆண்டு அறிக்கைப்படி, நாட்டின் நகர்ப்புற மக்களில் 100-க்கு 98.35 பேர் இணைய சேவை பயன்படுத்துகிறார்கள்.
கிராமப்புற மக்களில் 100-க்கு 33 பேர் மட்டுமே இணைய சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இந்திய கிராமப்புறங்களில் வாழும் 524.93 மில்லியன் மக்களுக்கு இணைய வசதி இல்லை.
அதில் பல கிராமங்களுக்கு நிலவழி இணையத் தொடர்பைக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அத்தகைய இடங்களில் எல்லாம் செயற்கைக்கோள் இணைய சேவ் நல்வாய்ப்பாக அமையும் என்கிறார் மகேஷ் உப்பல்.
இணைய வசதி கிடைப்பதால் நன்மை என்ன?

பட மூலாதாரம், LSST
இணையத் தொடர்பு இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒரு கிராமத்திற்கு, அந்த வசதி கிடைப்பதால் என்ன பலன்?
"இன்று நாம் தினசரி பயன்படுத்தும் ஜி.பி.எஸ் செயல்படுவதே விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் மூலமாகத்தான். வேகமான தகவல் பரிமாற்றம், நாட்டில் நடப்பனவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்வது, பல்வேறு விஷயங்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வு, மாணவர்களின் கல்வி என்று பலவற்றுக்கும் இணையம் இன்று மூலதனமாக விளங்குகிறது.
வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு கிராமத்திற்கு, செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி கிடைத்தால் அந்த ஊரே வளரும். அதன்மூலம் இணைய வழியாக, பணப் பரிவர்த்தனை வேகமாகவும் அதிகமாகவும் நடக்கும்.
அந்த மக்கள் நாட்டில் நடப்பனவற்றை வேகமாகத் தெரிந்து விழிப்போடு இருப்பார்கள். மலைப்பகுதிகளிலுள்ள பல குக்கிராமங்களில் இந்த வசதி கிடைத்தால், அவர்களைப் பற்றியும் பலருக்கும் தெரியவரும். அது சுற்றுலா, போக்குவரத்து போன்றவற்றைப் பெருக்கும். இப்படி இன்னும் பல முன்னேற்றங்களை இன்று இணைய வசதியால் ஒரு கிராமத்திற்குக் கொடுக்க முடியும்."
அதுமட்டுமின்றி, "இந்த வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைத்தால் இணையவழிக் கல்வி பயில்வது எளிதாகும். இணையத் தொடர்புக்காக பல மைல்கள் நடந்து செல்வதும் மர உச்சியில் ஏறி அமர்வதுமாக இல்லாமல், மாணவர்கள் சிரமமின்றிப் பாடம் கற்கலாம்," என்கிறார் ஸ்ரீராம்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












