வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், AICC

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியபோதும், எவ்வித விவாதமுமின்றி அதன் நடைமுறை நான்கு நிமிடங்களில் முடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் கொந்தளிப்பான உணர்வை எதிர்கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோதி நவம்பர் 19ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்ற மக்களவை கூடியதும், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரிரு நிமிடங்களில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்தார்.

அமைச்சர்

பட மூலாதாரம், SANSADTV

மாநிலங்களவையில் இந்த மசோதா பிற்பகல் இரண்டு மணிக்கு பிறகு சிறுது கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற நிகழ்வு தொடர்பாக நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற நடவடிக்கை விவசாயிகளின் வெற்றி," என்று கூறினார்.

ஆனால், எந்த விவாதமும் இல்லாமல் வெறும் நான்கு நிமிடங்களில் மக்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான அவசியம் ஏன் எழுந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்,

இது அரசாங்கம் 'அச்சத்தில்' இருப்பதைக் குறிக்கிறது என்று கூறிய ராகுல், நண்பகல் 12:06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு 12:10 மணிக்கு எல்லாம் அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

"நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலை பிரச்னை, லக்கிம்பூர் கேரி சம்பவம் பற்றி விவாதிக்க விரும்பினோம், இந்த போராட்டத்தில் இறந்த 700 விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதி பற்றி விவாதிக்க விரும்பினோம், துரதிருஷ்டவசமாக எது பற்றியும் பேச அனுமதிக்கப்படவில்லை" என்று ராகுல் காந்தி கூறினார்.நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தியின் இந்த கருத்து வெளிவந்தது.

"இந்த அரசாங்கம் முக்கியமான விஷயங்கள் பற்றிய விவாதங்களை நடத்துவதற்கு 'அச்சமாக' உள்ளது மற்றும் 'எதையோ மறைக்க விரும்புகிறது'' என்பதன் பிரதிபலிப்பே இது," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் என்ன நடந்தது?

மாநிலங்களவையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, அங்கு இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகமாக பேசவில்லை. மாநிலங்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதால் அதை யாரும் எதிர்க்கவில்லை என்று கூறினார்.

இதேவேளை மக்களவையில் நடந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பிரதமர் மோதி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள 700 விவசாயிகள் உயிரிழக்க நேர்ந்துள்ளது" என்று கூறினார்.

"விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. எதிர்வரும் மாநில தேர்தல்களை மனதில் வைத்தே இவ்வாறு மத்திய அரசு செய்திருக்க வேண்டும்," என்று ராகுல் குறிப்பிட்டார். முன்னதாக, விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்கும் வரும் காங்கிரஸ் உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பு வாயில் முன்புள்ள காந்தி சிலை முன்பு 'கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தர்னா நடத்தினர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஆனால், இந்த போராட்டமே ஒரு போலியான செய்கை என்றும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராடுவது தேவையற்றது என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

எம்எஸ்பி கோரிக்கையில் உறுதிகாட்டும் விவசாயிகள்

இதற்கிடையே, மக்களவையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் வழங்கப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான சட்டபூர்வ உறுதிமொழியை வழங்கிய பிறகே போராட்டம் முடிவடையும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது, அந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த 750 விவசாயிகளுக்கு சமர்ப்பணமாகும் என்று திகெய்த் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு அஞ்சுவதாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.

விவாதம் ஏதுமின்றி சட்டங்களைத் திரும்பப் பெற இந்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். "16 மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய ஜனநாயகமற்ற நடைமுறையைப் போலவே அவற்றைத் திரும்பப் பெறவும் முயற்சி நடக்கிறது," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வேளாண்துறை சீர்திருத்தங்களுக்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயிகளும் எதிர்கட்சிகளும் போராட்டங்களைத் தொடங்கின.

ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நீடித்த நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு திட்டமிட்டிருப்பதாகவும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோதி அறிவித்தார்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா என்ன சொல்கிறது?

குறைந்தபட்ச ஆதார விலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 19ஆம் தேதி மூன்று சட்டங்களை ரத்து செய்யும் அரசாங்கத்தின் விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 2021, மூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டது.

இதன்படி வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா-2020; விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020; அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா-2020 ஆகிய இந்த மசோதாக்கள்தான் ரத்து செய்யப்படும் நடைமுறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதும் இந்த ரத்து நடவடிக்கை சட்டபூர்வமாக அமலுக்கு வரும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இதே விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இந்த சட்டங்களை செல்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, நவம்பர் 19ஆம் தேதி மூன்று சட்டங்களை ரத்து செய்யும் அரசாங்கத்தின் விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். பிரதமரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மசோதாவின் வரைவுக்கு ஒப்புதல் அளித்து. தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்எஸ்பி பிரச்னை என்ன?

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, ஒரு குறிப்பிட்ட பயிரின் குறைந்தபட்ச விலையாகும், அதை அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது. எம்எஸ்பி பொதுவாக பயிர் உற்பத்தி செய்யும் போது விவசாயிக்கு ஆகும் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். இந்த பயிர்களை வாங்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான தொகையை அரசு வழங்காது.

எம்எஸ்பி-ஐ எது தீர்மானிக்கிறது?

ண் மசோதாக்களுக்கு எதிரான போராட்ட காட்சிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்எஸ்பி சட்டபூர்வ உத்தரவாதத்தை வலியுறுத்தி போராடும் விவசாயிகள்

தற்போதைய நடைமுறையின்படி வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையமான சிஏசிபிதான் காரீஃப் மற்றும் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிக்கிறது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கரும்பு ஆணையம் தீர்மானிக்கிறது.

எம்எஸ்பி ஏன் முக்கியம்?

விவசாயிகள் தங்களின் பயிருக்குரிய அடிப்படையான குறைந்தபட்ச செலவுகளை தொடர்ந்து பெறுவதற்கு ஏதுவாக எம்எஸ்பி தீர்மானிக்கப்படுகிறது.

சாந்தகுமார் கமிட்டி ஆய்வின்படி, ஆறு சதவிகித விவசாயிகள் மட்டுமே எம்எஸ்பி பலனைப் பெற முடியும், அதாவது 94 சதவிகித விவசாயிகள் எம்எஸ்பி வரம்பிற்கு அப்பால் இருக்கிறார்கள்.இந்த எம்எஸ்பி விவகாரம் தொடர்பாக ஆராய பிரதமர் மோதி ஒரு குழு அமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாய முறைகளை மேம்படுத்தவும், தேசத்தின் மாறிவரும் இயக்கவியலுக்கு ஏற்ப விவசாயம் செய்யவும் வலியுறுத்தினார். மேலும் எம்எஸ்பி-ஐ மிகவும் வெளிப்படையானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாற்றவும் ஒரு குழுவை உருவாக்குவதாக அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பின்படி மத்திய அரசு, மாநில அரசுகள், வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகளைக் கொண்டதாக இந்த குழு இருக்கும்.

எம்எஸ்பிக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் ஏன் சர்ச்சைக்குரியது?

அரசாங்கம் மற்றும் விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, எம்எஸ்பி என்பது இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இருந்த காலத்திலிருந்து நீடித்து வரும் சிந்தனை.

1960களின் நடுப்பகுதியில் போர் மற்றும் உணவு நெருக்கடி நிலவியது. அந்த காலகட்டத்தில் அரசாங்கம் உணவு தானியங்களை பொது விநியோக முறை மூலம் நாடு முழுவதும் அனுப்ப விவசாயிகளிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்து பாதுகாத்தது. அத்தகைய சூழலில் இந்தியாவில் உணவு தானியங்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன. குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் அதிகப்படியான உணவு தானியங்களை சேகரிப்பதிலும் அதை விநியோகிக்கும் நடைமுறையை கையாளுவதிலும் அரசுக்கு அதிக பிரச்னைகள் எழலாம் என்று வேளாண் நிபுணர்கள் கருதினர்.

சட்டபூர்வ எம்எஸ்பி திட்டத்தை அரசாங்கம் ஏன் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை?நியாய விலையின் அளவுகோலாக எம்எஸ்பி முறையை அமல்படுத்த அரசாங்கம் தயங்குகிறது. அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களின் மூலம் தனியார் பங்களிப்பு மற்றும் முதலீடு பெருமளவில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக விவசாயிகள் கூறினர். விவசாயிகள் தங்களுடைய பகுதியில் உள்ள சந்தையிலேயே தங்களுடைய உற்பத்தி பொருளை விற்க முடியும் என்று அரசு கூறியது. ஆனால், தனியார் ஆதாயத்தையே இது ஊக்குவிக்கும் என கருதிய விவசாயிகள், இந்த விஷயத்தில் தங்களுக்கு எழுத்துபூர்வமாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அதற்கு சட்டபூர்வ அந்தஸ்து இருக்க வேண்டும் என்று கருதினர். ஆனால், அரசு இதை ஏற்க தயக்கம் காட்டி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :