'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

மோகன் பகவத், ஆர் எஸ் எஸ் தலைவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோகன் பகவத், ஆர் எஸ் எஸ் தலைவர்

(இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

இந்துக்களின் எண்ணிக்கை மற்றும் வலிமை குறைந்து வருகிறது என ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாக தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்று நவம்பர் 27, சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.

அதில் பேசிய மோகன் பாகவத், "இந்துக்களின் எண்ணிக்கை மற்றும் பலம் குறைந்துள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள்... அல்லது இந்துத்துவ உணர்ச்சி குறைந்துள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்துக்கள் இந்துக்களாக இருக்க வேண்டுமானால் பாரதம் அகண்ட பாரதமாக மாறவேண்டும்" என பேசியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை இயற்றுவோர் அதன் தாக்கங்களை ஆராய வேண்டும்: இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

என் வி ரமணா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என் வி ரமணா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

சட்டத்தை இயற்றுவோர் அதன் தாக்கத்தைப் பற்றி ஆராய்வதில்லை; நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேக்கமடைய இதுவே காரணமாகி விடுகிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச்சட்ட தினத்தை ஒட்டி இரண்டு நாள் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. சனிக்கிழமை நடந்த நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜ்ஜு, நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது "எத்தகைய விமா்சனங்கள், தடைகள் இருந்தாலும் நீதிமன்றங்கள் நீதி வழங்குவதை நிறுத்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, நீதிமன்றங்களை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகள், முன்னதாக அந்தச் சட்டங்களின் தாக்கங்களையும் பின்விளைவுகளையும் பற்றி ஆராய்வதில்லை. இது பெரிய பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுறது. உதாரணமாக, மாற்று ஆவணச் சட்டத்தில் பிரிவு-138 (வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் காசோலை வழங்குபவரைத் தண்டிக்கும் சட்டப் பிரிவு) அறிமுகம் செய்யப்பட்டதைக் கூறலாம். ஏற்கெனவே நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்திருக்கையில், இத்தகைய வழக்குகள் மேலும் கூடுதல் சுமையை நீதித்துறை நடுவா்களுக்கு அளிக்கின்றன.

நீதிமன்றங்களில் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாமல் வணிக நீதிமன்றங்களாக மாற்றுவதால் நிலுவையில் இருக்கும் வழக்குகளைக் குறைக்க முடியாது" என அவர் பேசியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் ஒத்திவைப்பு: விவசாயிகள் அறிவிப்பு

விவசாயிகள் போராட்டம் கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவசாயிகள் போராட்டம் கோப்புப் படம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தும் திட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு நிறுத்தி வைத்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் பிரதமர் மோதி அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோதி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளிலேயே விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தும் திட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா நிறுத்தி வைத்துள்ளது.

அதேசமயம் எதிர்கால நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் கூட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாய சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டத்திற்கான கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா செய்தித்தொடர்பாளர் தர்ஷன் பால் "திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அணிதிரளும் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

லக்கிம்பூர் கெரி வன்முறை மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக மத்திய அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட விவகாரங்களையும் அரசின் முன் வைத்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். டிசம்பர் 4 ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்" என கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :