உணவும் உடல்நலமும்: குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?

குடல் நாளம்
படக்குறிப்பு, குடல் நாளம் மனித மூளையில் தாக்கம் செலுத்த வல்லது என்பதால் 'இரண்டாம் மூளை' எனப்படுகிறது.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த நுண்ணுயிரிகள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நினைக்கிறீர்களா? ஆனால் அது உண்மை இல்லை.

பல நுண்ணுயிரிகள் நோய்கள் ஏற்பட காரணமாக இருந்தாலும் உங்கள் உடல் நலமுடன் இருக்கவும் பல வகையான நுண்ணுயிரிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

உடல்நலத்துக்கு நன்மை செய்யக்கூடிய பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகள் உடலுக்குள் இருக்கின்றன.

உங்களுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உணவு செரிமானம், நோய் எதிர்ப்புத்திறன், சீராக எடையைத் தக்க வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றுக்கு உதவி செய்கின்றன.

ஒவ்வொரு நபரும் எதை உணவாக உட்கொள்கிறார் என்பதைப் பொறுத்து அவரது உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை ஆகியவை மாறுபடும்.

நுண்ணுயிரிகள் எந்த அளவுக்கு மனித உடலில் இருக்கின்றன?

உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையை விடவும் ஒரு தனிமனிதரின் உள்ளங்கையில் இருக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகம்.

பூமியில் பேருயிரிகள் தோன்றுவதற்கு முன்பே நுண்ணுயிரிகள் தோன்றிவிட்டன. சுமார் 3,500 கோடி ஆண்டுகளாக நுண்ணுயிரிகள் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன.

பாக்டீரியா - கோப்புப் படம்
படக்குறிப்பு, பாக்டீரியா - கோப்புப் படம்

ஒவ்வொரு மனித உடலிலும் சராசரியாக 100 டிரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. 100 ட்ரில்லியன் என்றால் நூறு லட்சம் கோடி. (ஆம்! ஒன்றுக்குப் பின்னால் 14 பூஜ்ஜியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

மனித உடலின் வயிற்றுக்குள் இருக்கும் ஒரு கிராம் பொருளில் (உணவாக உட்கொள்ளப்பட்டது) சுமார் 10,000 கோடி பாக்டீரியாக்கள் இருக்கும்.

மனிதர்களின் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை ஆராய்ச்சி செய்தால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை 90 சதவீத துல்லிய தன்மையுடன் கண்டறிய முடியும்.

குடல் நாளத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள், அதே குடல் நாளத்தில் இருக்கும் ஒரு கோடி நியூரான்கள் மீது தாக்கம் செலுத்த வல்லவை. இதன் காரணமாகத்தான் குடல் நாளம் 'இரண்டாவது மூளை' என்று கூறப்படுகிறது.

குடல் நாளத்தை நலமுடன் வைத்துக்கொள்ள நீங்கள் எதை உட்கொள்ள வேண்டும்?

சைவ உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சைவ உணவு
  • தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுங்கள். உடலுக்குள் இருக்கும் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்ள விரும்பும்.
  • நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களுக்குத் தேவையான அளவைவிட குறைவான அளவே நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைக, தானியங்கள் ஆகியவை நலம்தரும் பாக்டீரியாக்களுக்கு செழிப்புடன் இருக்க உதவும்.
  • அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் இருக்கும் உட்பொருட்கள் நன்மைதரும் பாக்டீரியாக்களை அழித்து தீங்கு தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
  • நுண்ணுயிரிகளை கொண்டுள்ள 'ப்ரோபயாடிக்' உணவுகளை உட்கொள்ளுங்கள். கேஸ்ட்ரிக் அமிலம், பித்த நீர், கணையம் சுரக்கும் நீர் உள்ளிட்டவற்றைக் கடந்து போதிய எண்ணிக்கையில் குடலைச் சென்றடையக்கூடிய உணவுகளே ப்ரோபயாடிக் உணவுகள் என்று வகைப்படுத்தப்படும் என 2001ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை வரையறை செய்துள்ளன.
  • பிற கொழுப்பு சத்துகளை விடவும் அதிகம் பதப்படுத்தப்படாத எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்கள் நுண்ணுயிர்களுக்கு நன்மை பயக்கும் பாலிஃபீனால்களைக் (polyphenols) கொண்டிருக்கும்.
  • ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா என அனைத்தையும் கொல்லும். எனவே நீங்கள் ஆன்டிபயாடிக் உட்கொள்ள வேண்டிய தேவை இருந்தால், உங்கள் உடலில் நுண்ணுயிரிகள் மீண்டும் செழித்து வளரத் தேவையான உணவுகளை நிறைய உட்கொள்ளுங்கள்.

உங்கள் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் காற்று வெளியேறுதல், வயிறு பெருத்தல் உள்ளிட்டவை நடக்கலாம். அதிகமாக நீர் அருந்துதல், உணவு முறையில் செய்யும் மாற்றத்தைப் படிப்படியாகச் செய்தல் உள்ளிட்டவை அவற்றைத் தடுக்க உதவி செய்யும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :