உணவு, உடல்நலம், சமையல்: புரதம் நிறைந்த ஆனால் புறக்கணிக்கப்படும் அற்புத உணவு

புரதம்
    • எழுதியவர், இசபெல்லா கெர்ஸ்டென்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது?

க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்றுகூட சொல்கிறார்கள்.

மேலைநாடுகள் பூச்சிகளை உண்பதை நினைத்து அருவருப்பு கொள்ளலாம். ஆனால் உலகின் பல பகுதிகளில் பூச்சி உணவுகள் வழக்கமானவையாக இருக்கின்றன. ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகளில் 2000 வகை பூச்சிகள் உண்ணப்படுகின்றன. தாய்லாந்தின் சந்தைகளில் வறுத்த வெட்டுக்கிளிகள் விற்கப்படுகின்றன. ஜப்பானில் குளவிகளின் லார்வாப் புழுக்களை உயிருடன் சாப்பிடும் வழக்கம் உண்டு.

ஆனாலும் ஐரோப்பாவின் நுகர்வோர் அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், 10% ஐரோப்பியர்கள் மட்டுமே இறைச்சிக்கு பதிலாக பூச்சிகளை சாப்பிடத் தயாராக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"நமது உணவு அமைப்பில் இருந்திருக்கவேண்டிய, முக்கியமான உணவுப்பொருள் என்பது பூச்சிதான். அவை சூப்பர் உணவுகள். சத்துகள் நிரம்பியவை. சிறு அளவாக இருந்தாலும் அவற்றிலிருந்து அதிகமான ஊட்டச்சத்து கிடைக்கிறது" என்கிறார் பேட்டா ஹாட்சின் இயக்குநர் விர்ஜினியா எமரி. ஸ்டார்ட் அப் நிறுவனமான பேட்டா ஹாட்ச், மீல் புழுக்களிலிருந்து கால்நடைத் தீவனங்களை உருவாக்கி வருகிறது.

விர்ஜினியா எமரி
படக்குறிப்பு, விர்ஜினியா எமரி

ஆகவே, வளர்க்கப்படும் பூச்சிகள் இரு பிரச்னைகளுக்கான ஒரே தீர்வாக இருக்கின்றன : உணவுப் பாதுகாப்புப் பிரச்னை, காலநிலைப் பிரச்னை.

உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க இழப்புக்கு வேளாண்மை ஒரு மிகப்பெரிய காரணம். பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுவதிலும் வேளாண்மைக்கு பங்கு உண்டு. கால்நடைகளை வளர்ப்பது உலகளாவிய பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வில் 14.5.% பங்கு வகிக்கிறது என்கிறது ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.

"பல்லுயிர் பெருக்கத்தின் பேரழிவுக்கு மத்தியில் இருக்கிறோம், காலநிலை பிரச்னையின் மத்தியில் இருக்கிறோம். ஆனாலும் வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கும் உணவு தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்கிறார் பூச்சியியலாளர் சாரா பெய்னோன். இவர் வேல்ஸின் பெம்ப்ரோக்‌ஷயரில் உள்ள பூச்சிப் பண்ணையில் பூச்சிகளாலான உணவுப்பொருட்களை உருவாக்கிவருகிறார். "நாம் பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும்" என்கிறார் இவர்.

பூச்சிப்பண்ணைகளுக்கு அதிக அளவில் நிலம் தேவையில்லை. இவற்றுக்குத் தேவைப்படும் ஆற்றலும் நீரும் சாதாரண வேளாண் அமைப்புகளோடு ஒப்பிடும்போது பல மடங்கு குறைவு. இவற்றின் கரிம வெளியீட்டு அளவும் குறைவு. பசுக்களோடு ஒப்பிடும்போது க்ரிக்கெட் பூச்சிகள் 80% குறைவான மீத்தேனை உமிழ்கின்றன. பன்றிகளோடு ஒப்பிடும்போது இவை 8 முதல் 12 மடங்கு குறைவான அம்மோனியாவை வெளியிடுகின்றன. வளிமண்டலத்தில் மீத்தேனின் ஆயுட்காலம் குறைவு என்றாலும் 20 ஆண்டுகாலத்திற்குள் கார்பன் டை ஆக்சைடை விட மீத்தே 84 மடங்கு அதிகமான பசுமைக்குடில் விளைவை ஏற்படுத்தக் கூடியது. அம்மோனியா ஒரு நெடி கொண்ட வாயு. இது ஒரு மாசுப்பொருள் என்பதால் மண் அமிலமயமாதல், நிலத்தடி நீர் மாசுபாடு, வாழிட பாதிப்பு என்று பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் பூச்சிகளுக்கான பண்ணைகளை அமைத்தால் கால்நடைகள் வளர்க்கவும் அவற்றுக்கான தீவனங்களைப் பயிர்செய்யவும் பயன்படுத்தப்படுகிற நிலப்பகுதி பெருமளவில் குறைக்கலாம். உலக அளவில் உண்ணப்படும் இறைச்சியில் பாதி, க்ரிக்கெட், மீல்புழு போன்ற பூச்சிகளாக மாற்றப்படுமானால், விளைநிலப் பயன்பாடு மூன்றில் ஒரு பங்கு குறையும். இதனால் 1680 மில்லியன் ஹெக்டேர்கள் நிலம் மிச்சப்படும். இது க்ரேட் பிரட்டனின் பரப்பளவைப் போல 70 மடங்கு அதிகம். இதனால் உலகளாவிய உமிழ்வுகள் குறையும் என்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

eating insects

பட மூலாதாரம், Getty Images

"பரப்பளவோடு புரத உற்பத்தியை ஒப்பிட்டால், மாட்டிறைச்சிக்குத் தேவைப்படும் நிலத்தில் பூச்சிகளுக்கு எட்டில் ஒரு பங்கு போதுமானது" என்கிறார் இந்த ஆய்வை நடத்திய பீட்டர் அலெக்சாண்டர். இவர் உணவுப் பாதுகாப்பு பற்றி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வுகள் ஒருபுறம் இருந்தாலும் பூச்சிகளை உண்பதை விட தாவரங்களை உண்பது சூழலுக்கு நல்லது என்பதையும் அவர் தெரிவிக்கிறார். பூச்சிகளை விட தாவரங்களை உருவாக்க குறைவான ஆற்றல் தேவைப்படும் என்கிறார்.

ஆனால் லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் திட்ட வரைவியல் மையத்தின் மூத்த ஆசிரியர் டில்லி காலின்ஸ், பூச்சிகளில் இருந்து கிடைக்கும் சில பயன்கள் தாவர உணவில் இல்லை என்கிறார். "தாவர உணவுகளில் கார்பன் மைலேஜ் அதிகம். மக்கள் சாப்பிட விரும்புகிற பல தாவரங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடியவை. செயல்திறனோடு பூச்சிகளை வளர்ப்பதே நல்ல மாற்று" என்கிறார்.

வளர்ந்துவரும் நாடுகளில் பூச்சிகள் நல்ல ஊட்டச்சத்து ஆதாரங்களாக இருக்கும் என்று காலின்ஸ் குறிப்பிடுகிறார். "க்ரேட் பிரிட்டனில் நமக்கு நல்ல உணவு கிடைக்கிறது, ஊட்டச்சத்துப் பிரச்னை இல்லை. ஆனால் ஆப்பிரிக்காவில் இந்த நிலை இல்லை. பல ஆப்பிரிக்க நாடுகளில் மனிதர்கள் உண்ணவும் தீவனத்துக்காகவும் பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன" என்கிறார்.

செயல்திறனை ஒரு கலையாக எப்படி மாற்ற முடியும் என்பதற்குப் பூச்சி வளர்ப்பு ஓர் உதாரணம் என்று சொல்லலாம். பூச்சிகள் வேகமாக வளர்கின்றன. கால்நடைகளைப் போலல்லாமல் சில நாட்களில் இவை இனப்பெருக்க நிலையை எட்டிவிடுகின்றன. பூச்சிகளால் ஆயிரக்கணக்கான முட்டைகளைப் போட முடியும்.

பூச்சிகள், வேறு எந்த விலங்கையும் விட 12 முதல் 25 மடங்கு கூடுதல் செயல்திறனுடன் உணவைப் புரதமாக மாறுகின்றன. கால்நடைகளோடு ஒப்பிடும்போது ஆறு மடங்கு குறைவாகவும், செம்மறி ஆடுகளோடு ஒப்பிடும்போது நான்கு மடங்கு குறைவாகவும் பன்றிகளோடு ஒப்பிடும்போது இருமடங்கு குறைவாகவும் தீவனம் இருந்தாலே க்ரிக்கெட் பூச்சிகள் வளர்ந்துவிடும் என்கிறது ஐ.நாவின் உணவு அமைப்பு.

"பூச்சிகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்பதால் அவை உடல் வெப்பத்தை சீராக்குவதற்காக உணவை வீணடிப்பதில்லை. இந்த செயல்திறனுக்கு அதுதான் காரணம். ஆனால் சில பூச்சிகளை நாம் வெப்பமான சூழலில் வளர்க்கவேண்டியிருக்கும்" என்கிறார் அலெக்சாண்டர்.

பூச்சிப் பண்ணைகளில் கழிவுகளும் இறைச்சி வீணாவதும் குறைவு. "விலங்குப் பண்ணைகளில் அதிகமான இறைச்சி வீணாகிறது. ஆனால் பூச்சிகளை முழுவதுமாக உண்ண முடியும்" என்கிறார் அலெக்சாண்டர்.

"பொதுவாக தூக்கி எறியப்படும் பொருட்களையே பூச்சிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். இது ஒரு சுழற்சி பொருளாதாரத்தைப் போல, இங்கு வளங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் உண்ணாத பயிர்களின் தண்டுகள் போன்ற வேளாண் கழிவுகள், உணவுக்கழிவுகளை பூச்சிகளுக்குத் தீனியாகக் கொடுக்கலாம். பூச்சிகளின் கழிவுகளை விவசாயத்துக்கு உரமாகவும் பயன்படுத்திக்கொள்வதால் சுழற்சி நிறைவடைகிறது" என்கிறார் காலின்ஸ்.

Insects

பட மூலாதாரம், Getty Images

சுற்றுச்சூழலை பாதிக்காத தன்மை, ஊட்டச்சத்து என்ற பல நன்மைகள் இருந்தாலும் மேலை நாடுகளின் உணவில் அவை முக்கிய இடத்தைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்.

"நாம் பூச்சிகளை உணவாகப் பார்ப்பதில்லை. அழுக்கு, ஆபத்து, அருவருப்பு, நமக்கு நோய் தரக்கூடியவை என்றெல்லாம்தான் பூச்சிகளை நாம் அணுகுகிறொம்" என்கிறார் உணவு நுகர்வு ஆராய்ச்சியாளர் ஜியோவானி சகாரி.

ஆனால் மனப்பான்மைகள் கொஞ்சம் மாறிக்கொண்டிருக்கின்றன. 2027க்குள் உணவுப் பூச்சிகளின் சந்தை 4.63 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பு கொண்டதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூச்சி உணவுக்கு ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் ஐரோப்பிய நிறுவனங்களில் இதில் முதலீடு செய்து வருகின்றன.

"மக்களின் உணவு பற்றிய பார்வை மாறும், ஆனால் மெதுவாக மாறும். உதாரணத்துக்கு சிங்கிறாலை எடுத்துக்கொள்வோம். அது வேண்டாத உணவாகப் பார்க்கப்பட்டது. சிறைக்கைதிகளுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது. பிறகு அது சொகுசு உணவாகிவிட்டது. ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமான சிங்கிறால்கள் இருந்தன. சிறைக்கைதிகளுக்கு வாரத்துக்கு இருமுறைக்கு மேல் இதைப் பரிமாறக்கூடாது என்ற சட்டம்கூட இருந்தது" என்கிறார் அலெக்சாண்டர்.

"நேரடி உணவாக பூச்சிகளை சாப்பிட சொல்வதை விட,பூச்சிகளை மாவுபோல் அரைத்து பதப்படுத்தப்படும் உணவுகளில் சேர்ப்பதே வணிகரீதியாக வெற்றிபெறும்" என்கிறார் சகாரி.

பூச்சிப் பண்ணையில் க்ரேட் பிரிட்டனின் முதல் பூச்சி உணவகத்தை நடத்திவரும் ஆண்டி ஹோல்க்ராஃப்ட் இதை ஏற்கிறார். "பூச்சிகளை ஒரு சாலட்டில் தூவுவதை விட, ஒரு உணவுப்பொருளின் அங்கமாக, சிறு சதவிகிதமாக பூச்சிகளை சேர்த்தால்தான் உணவு நுகர்வின் மையநீரோட்டத்தில் பூச்சிகள் சென்று சேரும். சத்து நிறைந்த சுற்றுச்சூழலை பாதிக்காத உண்வாக இருந்தாலும் அதன் சுவை நன்றாக இல்லையென்றாலோ மக்கள் ஏற்கவில்லை என்றாலோ அதைப் பிரபலமானதாக ஆக்க முடியாது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :