டாஸ்மாக் வருமானம்: வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத் தலைவர், இடை நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
மதுபான விற்பனை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்ட விவகாரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூரில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவுவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன், `மதுபானத்தைத் தயாரிக்கும் கம்பெனிகளில் வெறும் 20 ரூபாய்க்கு ஒரு பாட்டிலை வாங்கி அதனை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு பாட்டிலுக்கு 80 ரூபாய் வரையில் அரசுக்குச் செல்கிறது. ஆனால், 5, 10 வாங்குகின்ற எங்களைத் திருடர்கள் என்கிறார்கள்.
இன்றும் டாஸ்மாக் வருமானம்தான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் காய்கறி, பால், மளிகை என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டாலும் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைத்தனர். நாங்கள் போனஸ் கேட்டால் நஷ்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். நஷ்டம் என்றால் மூடிவிட வேண்டியதுதானே. மதுபான விலை, உற்பத்தி உள்பட அனைத்துக்கும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
அதே கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறித்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் குறித்தும் சரவணன் கூறிய சொற்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கடலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் கு.சரவணனை, கடந்த 18 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆர்.ரவிக்குமார் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் "கே.சரவணன், தான் சார்ந்துள்ள ஊழியர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், நிர்வாகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், உள்நோக்கத்துடனும், ஒழுங்கீனமாகப் பேசியது" காணொளி மூலமாக கவனத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி நடவடிக்கையை கண்டுபிடித்தல், மற்றும் தடுத்தல் விதித் தொகுப்பின் கீழ் இது தண்டனைக்குரியது என்றும் அத்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியால் இறந்த 10 ஆயிரம் பணியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
இதுதொடர்பாக, சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "தமிழ்நாட்டில் 5,300 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். தொடக்கத்தில், 34,000 பணியாளர்களாக உள்ளே வந்தோம். அதில், 10,000 பேர் குடித்தே அழிந்துவிட்டனர்.
ஒரு ஐந்து சதவீதம் பேர் வேண்டுமானால் டாஸ்மாக் மூலம் வசதி வாய்ப்புகளைப் பெருக்கியிருக்கலாம். அதனை மறுக்கவில்லை. பெரும்பாலான கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் இயங்குகின்றன. உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்தாலும் எங்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், "சங்கத்தின் கூட்டத்தில் எந்த ஆட்சியையும் நான் குறைகூறவில்லை. தவறுகளை தொடக்கநிலையிலேயே திருத்த வேண்டும் என்றேன். தவறுகள் தொடர்வதற்கு அதனைக் கண்காணிப்பவர்களும்தான் காரணமாக உள்ளனர்'' என்கிறார்.
அதிகாரிகள்தான் காரணம்
"18 வருடங்களாக டாஸ்மாக் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. நாளுக்குநாள் குற்றம் பெருகுவதால்தான் பறக்கும் படையை அமைத்துள்ளனர். எங்கள் பணியாளர்கள் மீதும் தவறுகள் உள்ளன. அதனை இல்லையென்று சொல்லவில்லை. அந்தக் கூட்டத்தில் சமூக நோக்கத்துடன்தான் கருத்துகளைக் கூறினேன். அதன்மூலம் டாஸ்மாக் பணியாளர்களின் வாழ்வில் விடிவுகாலம் வரும் என நினைத்தேன்.
சொல்லப் போனால், மதுபானம் குடிப்பவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாட்டிலுக்கு 5 ரூபாயை கூடுதலாகக் கொடுத்து எங்கள் குடும்பங்களையும் அவர்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களை அழித்துக் கொண்டு சமுதாயத்தை அவர்கள் வாழ வைக்கின்றனர். பணியாளர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளதா எனப் பார்க்காமல் என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். என்றாவது ஒருநாள் பிரச்னை தீரும் என நம்புகிறோம்'' என்கிறார் கு.சரவணன்.
``பாட்டில்களுக்குக் கூடுதலாக வசூலிக்கும் தொகை உயர் அதிகாரிகள் வரையில் செல்வதாக அந்தக் கூட்டத்தில் பேசினீர்களே?'' என்றோம். "ஆமாம். ஒரு ரூபாய் வசூல் செய்தது 10 ரூபாயாக மாறக் காரணம் அதிகாரிகள்தான். தவறுகள் பெருகியதற்கும் அவர்கள்தான் காரணம். நான் எந்த ஆட்சியையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவில்லை.
வெள்ளை அறிக்கை கேட்டது ஏன்?
"அண்மையில் ஒரு பிச்சைக்காரரிடம் கூடுதலாக டாஸ்மாக்கில் வசூல் செய்ததைக் குறிப்பிட்டு வசைபாடி வீடியோ வைரலானது. அதனை நான் தவறு என்று சொல்லவில்லை. பிச்சைக்காரர்களிடம் பிச்சை வாங்கித்தான் எங்கள் பணியாளர்களால் வாழ முடிகிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும்'' என்கிறார்.
மேலும், "சமூகத்துக்கு மது தேவை என அரசு முடிவெடுத்தால் முக்கிய கடைகள் வரிசையில் இதனையும் சேர்க்கலாமே? மது வேண்டுமா.. இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், கடைகள் இருக்கும் வரையிலாவது நல்லபடியாக நடத்த வேண்டும் என்கிறோம். மாறாக, எங்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. மதுபானக் கடைகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியதால்தான் வெள்ளை அறிக்கையை கேட்டேன். எங்கள் கோரிக்கைகளுக்கு முதல்வர் செவிசாய்ப்பார் என நம்புகிறோம்'' என்றார்.
கேரள மாடலை பின்பற்றுவார்களா?

அடுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் பழனிபாரதி, ``மாநாட்டில் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், கேரள மாநிலத்தில் மதுபானக் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுள்ளோம். பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம்.
480 நாள் வேலை பார்த்தாலே தினக்கூலி, தொகுப்பூதியம் என எதுவாக இருந்தாலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் எங்களைக் கண்டுகொள்வதில்லை. தேர்தலின்போது, `தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதனை முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் இந்த மாநாட்டை நடத்தினோம்'' என்கிறார்.
312 கோடி நஷ்டமா?
"மதுபானத்தைப் பொறுத்தவரையில் ஒரு பாட்டிலின் உற்பத்தி விலை என்பது 20 ரூபாய்க்கும் கீழேதான் உள்ளது. அதனை 120 ரூபாய்க்கு விற்கிறோம். இதன்மூலம் வரும் வருமானத்தில்தான் அரசு இயங்கி வருகிறது. அண்மையில், டாஸ்மாக் நிர்வாகம் 312 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். வரிகளின் மூலம் வருகின்ற வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் நடைமுறை செலவு, சம்பளம் போன்றவற்றை வைத்து இவர்கள் நஷ்டம் என்கின்றனர். இது மிகவும் தவறான விஷயம்'' என்கிறார்.
அரசின் நலத்திட்டங்களுக்குத்தான் மதுபான வருவாய் செலவிடப்படுகிறது. ஆனால், பாட்டில்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகை என்பது தனி நபர்களின் கைகளுக்குத்தானே செல்கிறது?' என்று கேட்டதற்கு,
"ஆமாம். ஆனால், கேரளாவில் மதுபான சரக்குகளை இறக்குவது முதல் உடைந்த பாட்டில்களுக்குக் கழிவுகள் கொடுப்பது வரையில் அரசின் பொறுப்பாக உள்ளது. இங்கு ஒவ்வொரு பெட்டியை இறக்குவதற்கும் 5 ரூபாய் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. தினமும் 500 பெட்டி வந்தால் 2,500 ரூபாயை நாங்கள்தான் கொடுக்க வேண்டும். கண்ணாடி பாட்டில் என்பதால் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கும் நாங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் பணம்

தற்போது வரையில் சூப்பர்வைசர்களின் சம்பளம் என்பது 13,200 ரூபாய்தான். விற்பனையாளர்களுக்கு 11,000 ரூபாய். வெளியூரில் இருந்து வேலை பார்ப்பவர்களால் எப்படி குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியும்? குறைந்தபட்ச ஊதியம் வழங்கினால்கூட பாட்டில்களுக்கு கூடுதல் விலையை வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை.
காட்டில் கொள்ளையடித்தாலும் அதனை வீரப்பன் முழுமையாக அனுபவிக்காமல் பூச்சிகளோடு வாழ்ந்து மறைந்தார். அதைப் போலத்தான் எங்களின் கதையும். பணியாளர்கள் மீது புகார் வந்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும். 18 வருடங்களாகிவிட்டன. பணி நிரந்தரம் செய்துவிட்டால் எங்கள் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். குறைகளைச் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கப் போவதில்லை'' என்கிறார் அவர்.
பணியாளர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியத்திடம் கேட்டது பிபிசி தமிழ். "சங்கத்தின் கோரிக்கைகள் எதுவும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. அது எங்களின் கைகளுக்கு வந்த பிறகு பேசுகிறேன்'' என்று மட்டும் பதில் அளித்தார்.
பணியாளர் சங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பிற செய்திகள்:
- 85 நிமிடம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்: இந்த அதிகாரம் பெற்ற முதல் பெண்
- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?
- இன்னும் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?
- கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
- தூத்துக்குடியில் இரவு நேரங்களில் காரில் சென்று ஆடு திருடி வந்த கும்பல் சிக்கியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








