சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி

Saurabh Kirpal could become India's first openly gay judge.

பட மூலாதாரம், Twitter/ Saurabh Kirpal

படக்குறிப்பு, செளரப் கிர்பால், இந்தியாவின் முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பு தன்மை வாய்ந்த நீதிபதி ஆக முடியும்

வெளிப்படையாக தன்பாலின ஈர்ப்பு கொண்ட வழக்கறிஞர் பெயரை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ள நடவடிக்கை, LGBTQ உரிமைகளுக்கான "மைல்கல்" என்று அழைக்கப்படுகிறது.

இது குறித்து சட்டத்துறை செய்தியாளர் சுசித்ரா மொகந்தி வழங்கும் விரிவான தகவல் இது.

மூத்த வழக்கறிஞர் செளரவ் கிர்பாலின் பெயரை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமிக்க இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் நீதிபதியை நியமிப்பதற்கான செயல்முறை என்பது, கொலீஜியத்தின் பரிந்துரைகளையும் உளவு அறிக்கை அடிப்படையில் பிரதமர் அலுவலகம் தரும் முறையான ஒப்புதலையும் அங்கமாகக் கொண்டது.

அந்த வகையில் வரும் வாரங்களில் கிர்பாலின் பெயரை பிரதமர் அலுவலகம் ஏற்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

2018ஆம் ஆண்டில், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இது நாட்டின் LGBTQ மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அந்த வழக்கில் கிர்பால் இரண்டு முக்கிய மனுதாரர்களின் வழக்குரைஞராக இருந்தார்.

இருப்பினும், எல்ஜிபிடி மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். களத்தில் அவர்கள் மீதான அணுகுமுறைகள் மெதுவான வேகத்தில் மாறி வருகின்றன.

வேலை வாய்ப்புகள், சுகாதார நலன் என வரும்போது அந்த சமூகக்தினர் தங்கள் மீதான தவறான பார்வையை எதிர்த்துப் போராட உதவியாக குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உண்மையில், இதற்கு முன்பே தமது பெயர் உயர் நீதிமன்ற பதவிக்கு பரிசீலிக்கப்படவிருந்தபோது தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்ற உணர்வு பற்றி பிறரது பார்வை அதற்கு தடையாக இருந்ததாக கிர்பால் நம்புகிறார்.

2018 ஆம் ஆண்டில் கொலீஜியம் நீதிபதி பதவிக்கு அவரது பெயரை முதல் முறையாக பரிசீலித்தது, ஆனால் இவரது பெயரை இறுதி செய்வது பற்றி முடிவு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால், அதற்குக் காரணம், கிர்பால் பற்றிய பின்புலத்தை விசாரித்த உளவு விசாரணையில் அவருடன் வாழும் அவரது கூட்டாளி ஒரு வெளிநாட்டுப் பிரஜை என தெரிய வந்தது. இதனால், பாதுகாப்பு அபாயம் ஏற்படலாம் என உளவு அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால், அந்த நிலைப்பாட்டை தொடர்ந்து கிர்பால் நிராகரித்து வந்தார்.

"என்னுடன் 20 ஆண்டுகளாக வாழும் நபர் ஒரு வெளிநாட்டவர் என்பதால் அவரால் ஆபத்து வரலாம் என கூறினால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் எனது பாலின ஈர்ப்பு உணர்வை மையப்படுத்தியே இப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று நான் நம்புவதற்கு இதுவே காரணம். நீதிபதியாக என்னை தேர்வு செய்யக் கோரும் எனது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் போனதற்கும் அதுவே காரணம் என்று நான் நம்புகிறேன்," என்று 49 வயதான கிர்பால் கடந்த ஆண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

Indian members and supporters of the lesbian, gay, bisexual, transgender (LGBT) community celebrate the Supreme Court decision to strike down a colonial-era ban on gay sex, in Kolkata on September 16, 2018.

பட மூலாதாரம், NurPhoto

படக்குறிப்பு, 2018இல் தன்பாலின ஈர்ப்பு குற்றமாகாது என்ற வரலாற்றுபூர்வ தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

2020ஆம் ஆண்டில், தனது பெயர் நீதிபதி பதவி பரிசீலனைக்கு அனுப்பப்படவிருந்தபோது இரண்டு மனநிலையை கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் கடைசியில் அப்படியொன்று நடந்தால் தான் எல்ஜிபிடி சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும் என்று நினைத்ததால் அதற்கு ஒப்புக்கொண்டதாக கிர்பால் தெரிவித்தார்.

இந்த நிலையில், கிர்பாலை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரையை அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.

கிர்பாலை பல ஆண்டுகளாக அறிந்த முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விகாஸ் சிங், கொலீஜியத்தின் முடிவை வரவேற்றுள்ளார்.

"நாடு காலப்போக்கில் வளர்ச்சியடைந்துள்ளது," என்று விகாஸ் சிங் பிபிசியிடம் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் கீதா லூத்ராவும் பிபிசியிடம் கிர்பால் "பிரகாசமானவர்", "விதிவிலக்கானவர்" மற்றும் "நீதிபதி பதவிக்கு தகுதியானவர்" என்று கூறினார்.

"டெல்லி உயர் நீதிமன்ற பதவிக்கு சௌரவ் கிர்பால் தேர்வு செய்யப்படுவதற்கும் தனி வாழ்வில் அவர் தேடிக்கொண்ட துணைக்கும் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது. தகுதி மற்றும் திறமைக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

டெல்லியின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் இயற்பியல் இளநிலை படிப்பை முடித்த கிர்பால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்று சட்டம் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1990களில் இந்தியா திரும்புவதற்கு முன்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் சில காலம் பணியாற்றினார். தாயகம் திரும்பியது முதல் அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலமைப்பு, வணிகம், சிவில் மற்றும் குற்றவியல் சட்டத் துறைகளில் பல முக்கியமான வழக்குகளில் அவர் வாதிட்டார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்தகிக்கும் அவர் உதவியிருக்கிறார். கிர்பாலின் சட்டப்புலமை கூர்மையானது ரோத்தகியுடன் பணியாற்றியபோதுதான் என்று விகாஸ் சிங் நம்புகிறார்.

சட்டத் துறையில் தன்னை மிகப்பெரிய அளவில் ஈர்த்தவர்களாக தமது மூத்த வழக்கறிஞர் ரோத்தகியையும் தமது தந்தை பி.என். கிர்பாலையும் குறிப்பிடுகிறார் கிர்பால். இந்தியாவின் முதலாவது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் பி.என்.கிர்பால்.

தன் பாலின ஈர்பாபளர்களின் வாழ்க்கை பற்றிய Straight to Normal: My Life as a Gay Man என்ற புத்தகத்தை எழுதிய முன்னாள் பத்திரிகையாளர் டி.ரங்னேகர், கொலீஜியத்தின் தேர்வு வரலாற்றுபூர்வ தருணம் என்று கூறியுள்ளார்.

"இந்த முடிவுக்குப் பிறகு இன்னும் எத்தனை வழக்கறிஞர்கள் வினோதமாக வெளிவருவார்கள், பாகுபாடற்றவர்களாக உணருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது," என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :