தமிழக மழை: "நாலு நாளாச்சு, யாரும் வரலை" - தீவாக மாறிய குமரி கிராம கள நிலவரம்

கன்னியாகுமரி மழை
படக்குறிப்பு, நாலாபுறமும் நீர் சூழந்து காணப்படும் வீடு
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் அணைகள் நிரம்பியது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் குமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளது.

இதனால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக கிராமத்திற்கு வரவில்லை என்றும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி கன மழை

150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பிய அதில் இருந்த வெளியேற்றப்பட்ட உபரி நீரால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பல கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது.

தமிழக கன மழை

இதன் ஒரு பகுதியாக குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வசித்து வந்த 150க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மூன்று நாட்களுக்கு மேலாக வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ள நீர் வடியாததால் இக்கிராம மக்கள் தங்களது அதியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால் கடந்த நான்கு நாட்களாக பாதிப்புக்குள்ளான மக்களை அரசு ஊழியர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரும் நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்ததையடுத்து திங்கள் கிழமை காலை செய்தி சேகரிக்க பண்டாரம்பறம்பு கிராமத்திற்கு நேரடியாக சென்று கிராம மக்களின் கள நிலவரத்தை பிபிசி பதிவு செய்தது.

மாடியில் தஞ்சம் அடைந்த குடும்பங்கள்

கன மழை பெய்ததால் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் எங்கள் கிராமங்களுக்கு வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் வடியாமல் நிற்கிறது.

கடந்த மூன்று நாட்களாக எங்களது கிராமத்தைச் சுற்றி உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் வீட்டு மாடியில் தஞ்சம் அடைந்துள்ளோம் என்றார் அக்கிராம பெண் ஷீபா.

தமிழக மழை
படக்குறிப்பு, ஷீபா

"மூன்று நாட்களாக உணவின்றி வீடுகளுக்குள் முடங்கிக் உள்ளோம். மின்சாரம் இல்லாததால் செல்போன்களில் சார்ஜ் இல்லாமல் எங்களது பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாமல் போனது.

கழிவறைக்குள் தண்ணீர் புகுந்ததால் எங்கள் கிராம பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றார் ஷீபா.

இரண்டு மாத கை குழந்தையுடன் வீட்டின் மாடியில் தஞ்சம்

கிராமத்தில் வெள்ள நீர் வடியாததால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோபி தாஸ், கடந்த ஆறு மாதத்தில் வெள்ள நீர் எங்கள் வீடுகளுக்குள் புகுவது இது இரண்டாவது முறை என்றார்.

தமிழக மழை
படக்குறிப்பு, கோபிதாஸ்

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மாடியில் தங்கியுள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல படகு வசதி கூட இதுவரை செய்து தரப்படவில்லை.

அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்ததால் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கன மழை

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரும் இதுவரை எங்கள் கிராமத்திற்கு வந்து மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை என குற்றம்சாட்டுகிறார் கோபி தாஸ்.

வீட்டை சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்க தண்ணீர் இல்லை

வெள்ள நீர் வீட்டுக்குள் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு உறவினர் வீட்டில் தங்கியுள்ள மோகன் பிபிசி தமிழிடம் பேசுகையில், வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்து இருந்தாலும் குடிக்க குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். உடனடியாக எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

தமிழக கன மழை
படக்குறிப்பு, மோகன்

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறையும் போது தான் கிராமத்தை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய துவங்கும். ஆனால் அதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என தெரியாமல் செய்வதரியாது உறவினர் வீட்டில் தங்கியுள்ளோம்.

வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளோம். இருப்பினும் கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் நீரில் முழ்கியுள்ளது என்றார் மோகன்.

இக்கிராம மக்களின் கோரிக்கைகளை பிபிசி தமிழ் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :