சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், KOLKATTA HIGH COURT

படக்குறிப்பு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) பரிந்துரை செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்றல் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன. சில வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஆகியோரின் இடமாற்றல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு வழக்கமாக மேற்கொள்ளும் ஆனால், சஞ்சீப் பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பத்து மாதங்களில் அவரை வேறு நீதிமன்றத்துக்கு இடமாற்றல் செய்ய பரிந்துரைத்தது ஏன், அதில் வெளிப்படைத்தன்மை நிலவவில்லை என்று வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் கூறுகின்றன. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

மேற்கு வங்க மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜி, 1986-87ஆம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்து அம்மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பல்வேறு தீர்பபாயங்கள், சிவில் மற்றும் நிறுவன வழக்குகளிலும் ஆஜராகி வந்தார். அரசியலமைப்பு சட்ட அமர்வுகள், அறிவுசார் சொத்துரிமை வழக்குகள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற அவர், 2006ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இடம்பெற்ற அமர்வில் வழங்கியதீர்ப்புகள் பலவும் பொது நல வழக்குகளாக இருந்தன. கடைசியாக அவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு அதன் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 72. இத்தனை பெரிய எண்ணிக்கையில் உள்ள நீதிபதிகள் இடம்பெற்ற உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீப் பானர்ஜியை தலைமை நீதிபதி, ஒரு நீதிபதி மட்டுமே இடம்பெற்ற மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற நீதிபதிகள் தேர்வுக்குழு பரிந்துரைசெய்ததுதான் வழக்கறிஞர்கள் சமூகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

வழக்கமாக இளநிலை நீதிபதியாக இருப்பவர் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். அந்த நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே நீதிபதியாக இருந்த ஹமர்சன் சிங் தாங்கியூவை பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த 3ஆம் தேதி குடியரசு தலைவர் நியமித்திருந்தார்.

இவர் 1990ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து குவாஹட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். 2018ஆம் ஆண்டு இவர் மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அந்த உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இருந்த மொஹம்மத் ரஃபீக் ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரலில் இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் சோமாதரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதிகள் தேர்வுக்குழு பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் நியமித்தார்.

ஆனால், பதவியேற்ற நான்கே மாதங்களில் மேகாலயாவில் இருந்து சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஸ்வநாத் சோமாதர் நியமிக்கப்பட்டு அவரும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதனால் காலியான மேகாலயா தலைமை நீதிபதி இடத்துக்கு தற்காலி நீதிபதியாக ஹமர்சன் சிங் நியமிக்கப்பட்டிருந்த வேளையில், அந்த பதவிக்கு சஞ்சீப் பானர்ஜி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வழக்கறிஞர்கள் எழுப்பும் கேள்விகள்

ஆர்.என். ரவி

பட மூலாதாரம், RAJ BHAVAN

படக்குறிப்பு, தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டபோது அவரது பதவிப்பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பணியாற்றியபோது மாதத்தில் குறைந்தபட்சம் 70 வழக்குகளிலாவது தீர்ப்பு வழங்கியிருப்பார். அவரது செயல்பாடு, வேகமாக வழக்குகளை பைசல் செய்யும் பாணி, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் செலுத்தும் ஈடுபாடு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில்தான் சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்த நிலையில், அவரது இடமாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் 75 நீதிபதிகளை கொண்ட மிகப்பெரிய உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மாற்றுவது ஏன் என்றும் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிபதி இடமாற்றம்

பட மூலாதாரம், DEPT OF LAW AND JUSTICE

எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

சில வழக்கறிஞர்கள் இது ஒருவேளை தண்டனை நடவடிக்கையா என்றும் கேள்வி எழுப்பினர்.

சஞ்சீப் பானர்ஜியைப் போலவே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த டி.எஸ். சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

முக்கிய வழக்குகளில் கடுமை காட்டிய நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

பட மூலாதாரம், MADRAS HC

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அவரது நியமன ஆணையை வழங்கும் அப்போதைய மாநில ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்.

தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகிய இருவரும் முக்கியமான மனித உரிமைகள் வழக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்குகளை விசாரித்தனர்.

அவற்றின் மீதான விசாரணையில் அரசாங்கத்திற்கும், அதன் அமைப்புகளுக்கும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

உதாரணமாக, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தேர்தல் ஆணையம் உட்பட பல அரசுத்துறைகளின் செயல்பாடுகளை விமர்சித்தார். கொரோனா வழிகாட்டுதல்களை சரிவர மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்றும் அதை உறுதி செய்யத் தவறியதற்காக ஏன் கொலை வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் கடுமையான வார்த்தைகளை அவர் வழக்கு விசாரணையின்போது பிரயோகித்தபோது அவரது கடுமையான தொனி பலரது கவனத்தையும் பெற்றது.

மேலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானபோதும் சமீபத்திய மழை பாதிப்பின்போது சென்னை நகரில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

நீதிபதி சிவஞானம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் போன்ற மிக முக்கிய வழக்குகளை விசாரித்த அரசின் நிலைப்பாடுக்கு எதிரான சில உத்தரவுகளை கடுமையாகப் பிறப்பித்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு முடிவு குறித்து ஆழ்ந்த கவலை மற்றும் ஏமாற்றத்தை, நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்த பிரசாரம் (CJAR) என்ற வழக்கறிஞர்கள் அமைப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.

CJAR தனது அதிகாரபூர்வ அறிக்கையில், இடமாற்றத்திற்கு எந்தவிதமான நியாயமும் இல்லாத நிலையில், நீதிபதி பானர்ஜி சில காரணங்களால் "தண்டிக்கப்படுகிறார்" என்று ஒரு பாதகமான அனுமானம் ஏற்படுவதாக கூறியுள்ளது.

இத்தகைய சூழலில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றல் பரிந்துரையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் என்பவர் இந்த போராட்டத்தை வழிநடத்தினார். "2023ஆம் ஆண்டுவரை பதவிக்காலம் உள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எதற்காக 75 நீதிபதிகள் இடம்பெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இரண்டே நீதிபதிகளைக் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறார்," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படாத நிலையில், இந்த இடமாற்றல் பரிந்துரை தண்டனையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என்று வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் தெரிவித்தார்.

ஒரு மாநில தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யும்போது அதற்கான பரிந்துரை குறிப்பில் அவர் எதற்காக இடமாற்றல் செய்யப்படுகிறார் என்பது எழுத்துபூர்வமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அத்தகைய பதிவு சஞ்சீப் பானர்ஜி இடமாற்றல் பரிந்துரையின்போது மேற்கொள்ளப்பட்டதா என்பது தெளிவற்று உள்ளது என்றும் வழக்கறிஞற் என்ஜிஆர். பிரசாத் கூறியிருக்கிறார்.

"காரணமில்லாமல் நீதிபதிகள் தேர்வுக்குழு இப்படி அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறது என்றால், அது நீதித்துறையின் நம்பிக்கையைக் குலைத்து விடும். அச்சமற்ற நீதித்துறை நமக்கு அவசியம். இதுபோன்ற மர்மமான இடமாற்றல் தொடர்ந்தால் அடுத்து நீதிபதிகள் எங்கே இருப்பார்கள் என்பது தெரியாது. நீதித்துறை என்பது அச்சமற்றதாக இருக்க வேண்டும்," என்று என்ஜிஆர். பிரசாத் வலியுறுத்தினார்.

இரண்டாவது நிகழ்வு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவர் மேகாலயா உயர் நீதிமன்ற போன்ற குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்துக்கு இடமாற்றல் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. 2019ஆம் ஆண்டில் விஜயா கே.தாஹில்ரமானி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றல் செய்யப்பட்டபோது, அந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தேர்வுக்குழு செயல்பாடு பற்றி கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு ஆதரவாகவும் வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து அவரது இடமாற்றல் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், அப்போதும் தமது முடிவை திரும்பப் பெற நீதிபதிகள் தேர்வுக்குழு மறுத்தது. அந்தக் குழுவின் சார்பில் அசாதாரண முறையில் நீதிமன்ற செகரட்டரி ஜெனரல் மூலம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "இடமாற்றத்திற்கான பரிந்துரைகள் ஒவ்வொன்றும் சிறந்த நீதி நிர்வாகத்தின் நலனுக்காவும் தேவையான நடைமுறைக்கு இணங்கிய பின்னரும் நியாயமான காரணங்களுக்காக செய்யப்பட்டன," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த விவகாரம் ஆறிப்போன நிலையில், தற்போது மீண்டும் அதே மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்த விவகாரம் வழக்கறிஞர்கள் சமூகங்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :