வெள்ளத்தில் கன்னியாகுமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?

கன்னியாகுமரி மழை
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்டத்தை கன மழை புரட்டி போட்டுள்ளது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது.இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பின.

இதனால் பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுகிழமை அதிகாலை வரை மழை தணிந்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது. எனினும் சுசீந்திரத்தை அடுத்த நக்கை நகர், கற்காடு, தோவாளை, பரசேரி, தாழாக்குடி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமால் உள்ளது.

வேரோடு சாய்ந்த மின் கம்பங்கள்

62 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள மின் வழிப்பாதைகள் துண்டிக்கப்பட்டதால் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை நீடித்து வருகிறது.

தோவாளை, ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வந்த 5 ஆயிரம் பேரை மாவட்ட நிர்வாகம் அருகில் உள்ள அரசு பள்ளிகள், சமுதாய கூடங்களிர் முகாம்கள் அமைத்து பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாத இரட்டை கை குழந்தைகள் மீட்பு

கன்னியாகுமரி மழை

இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் திடீரென உடைந்ததால் குளத்தில் உள்ள நீர் அருகில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

இதனால் 30-மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வீட்டிற்குள் சிக்கி இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டனர்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள அர்ஜூனன் என்பவர் வீட்டிற்குள் இடுப்பளவு வெள்ள நீர் புகுந்ததால் வீட்டுக்குள் இருந்த மூன்று மாத இரட்டை கை குழந்தையுடன் சிக்கி தவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த கை குழந்தைகளை இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர். தொடர்ந்து வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழையால் தீவு போல மாறிய மீனவ கிரமம்

கன்னியாகுமரி மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளச்சல் உப்பளத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இதனால் உப்பள கரை உடைந்து அருகில் உள்ள சைமன்காலணி மீனவ கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் அந்த மீனவ கிராமம் தீவு போல காட்சியளிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடந்த சில நாட்களாக உண்ண உணவின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதி மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அந்த பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டாவது நாளாக ரயில் சேவை ரத்து

கன்னியாகுமரி மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கால்வாய்கள் குளங்கள் உடைந்து தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இன்று இரண்டாவது நாளாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும் ரயில்கள் மற்றும் நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.

விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின

கன்னியாகுமரி மழை

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல், வாழை, ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த மழை தொடரும் பட்சத்தில் அதிக சேதங்கள் ஏற்படும் என விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

சாலைகள் துண்டிப்பு

கன்னியாகுமரி மழை

குமரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மாவட்டதின் பல்வேறு பகுதியில் உள்ள சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. குளங்களில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் கிரமாங்களுக்கு இடையோன தார் சாலைகளை சேதப்படுத்தியுள்ளது.

பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு பகுதியில் சாலையை மூழ்கடித்து மழைநீர் செல்கிறது. முழங்கால் அளவுக்கு மழை நீர் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் இச்சானிமங்களம் பகுதியிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேள்ளமடம் முதல் விசுவாசபுரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் செல்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

@KKSSRR_DMK

பட மூலாதாரம், @KKSSRR_DMK

படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

இன்று காலை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் வெள்ளமடம் பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்களை மீட்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'.

'கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் தாழாக்குடி, செண்பகராமன்புதூர், சுசீந்திரம், தோவாளை, பரசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை,' என்றார்.

மழை பாதிப்புகள் குறித்து ஆரல்வாய்மொழியை சேர்ந்த சுதன் பிபிசி தமிழிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மழை

பொது மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வர சுமார் 15 நாட்களுக்கு மேலாகும். குமரி மாவட்டத்தில் சுற்றியுள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, வெள்ளமடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்கள் உடைப்பு ஏற்படடதால் கடுமையான பாதிப்புகளை இந்த பகுதி மக்கள் சந்தித்துள்ளனர்.

வெள்ள நீரால் வீடுகளுக்குள் சிக்கி கொண்ட மக்களை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருவதாக சுதன் தெரிவித்தார்.

சுதா
படக்குறிப்பு, சுதாராணி

தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் முகாமில் தங்கியுள்ள மாதவலாயம் பகுதியை சேர்ந்த சுதா ராணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறிவிட்டோம்," என்றார்.

"வெளியேறிய பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்க வைத்தனர் ஆனால் தற்போது முகாம்களில் இருந்து வெளியே வந்து மாற்று துணி கூட வழியின்றி ரோட்டில் நிற்கிறோம்," என்று கூறுகிறார் சுதாராணி.

செல்வி
படக்குறிப்பு, செல்வி

வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரால் உடமைகளை இழந்த பரப்புவலை பகுதியை சேர்ந்த செல்வி பிபிசி தமிழிடம் பேசுகையில், வீட்டில் உள்ள பாத்திரங்கள், உடமைகள் அனைத்தும் மழை நீரில் அடித்துச் சென்று விட்டது. வீட்டில் குழந்தைகள் சேர்த்து வைத்த தங்க நகைகள் உட்பட அனைத்தும் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

தங்கயுள்ள வீடும் உடையும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பாக அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளோம். மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை இன்று காலை முதல் குறைந்துள்ளதால் வீடுகளை சுற்றி உள்ள நீர் வடிய துவங்கியுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளதால் அச்சத்துடனே வாழ்கிறோம் என்கிறார் செல்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :