கன்னியாகுமரியில் கன மழை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு

கன்னியாகுமரி மழை

பட மூலாதாரம், JACKSON HERBY

தமிழகதத்தின் கடலோர மாவட்டங்கள் சமீபத்திய கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பில் இருந்து மீளத் தொடங்கிய வேளையில், தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மழையின் தாக்கத்தை அனுபவித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தோவாளை தாலுகா பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக நெல்லை - நாகர்கோவில் இடையே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மலையோரம் உள்ள இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும நல்லூர், திடல், மண்ணடி போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் பழைய ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒழுகினசேரி பகுதியில் இடுப்பளவு வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு இடுகாடு செல்லும் பாதை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் நெசவாளர் காலனி பகுதிகளில் படகு மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கன்னியாகுமரி மழை

பட மூலாதாரம், JACKSON HERBY

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஊட்டுவாள் மடம், மீனாட்சி கார்டன் ஒழுகினசேரி வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

கனமழை அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆறுகளில் கடும் வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கன்னியாகுமரி மழை

பட மூலாதாரம், JACKSON HERBY

இதனால் அணைகளில் இருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 4032 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4144 கன அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 804 கன அடி தண்ணீரும், சிற்றாறு இரண்டு அணையில் இருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக தாமிரபரணி ஆறு,பழையாறு,பரளியாற்று பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மழை

பட மூலாதாரம், JACKSON HERBY

திற்பரப்பு அருவியில் மழைநீர் மற்றும் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்ததின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கல் மண்டபத்தைத் பாதி அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பரளியாற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கரை பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

ரயில்கள் ரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரணியல் பகுதியில் இரட்டைக்கரை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால்மங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், உள்ளிட்ட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று காலை நாகர்கோவிலில் நிறுத்தபட்டது.

மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் குளங்கள் உடைந்து தண்டவாளங்கள் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் என்ன நிலை?

கன்னியாகுமரி மழை

பட மூலாதாரம், JACKSON HERBY

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரை ஓரத்தில் உள்ள மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்று வழியாக திருவைகுண்டம் அணையை கடந்து ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் கொள்ளளவு 15ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் இருக்கும் என்பதால் தாமிரபரணி கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் மீன் பிடிக்கவோ, குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி, புகைப்படம் எடுத்துக் கொள்ள என எந்த காரணத்திற்காகவும் ஆற்று பகுதிக்கு வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இன்று திறந்துவிடப்படும் தண்ணீரானது நாளை காலை புன்னக்காயல் வந்தடையும் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை ஏன்?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கணிப்பின்படி, தாய்லாந்து மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சியின் தாக்கம் காரணமாக, நவம்பர் 13, சனிக்கிழமை காலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 15-ம் தேதிக்குள் மாற வாய்ப்புள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரா கடற்கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நவம்பர் 13,14 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்தது.

புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையை (SDRF) நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது.இங்குள்ள நிலைமை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து இரண்டு SDRF குழுக்கள் சனிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தன.

தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் இருந்து மேலும் 80 SDRF வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, தமிழக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒலிக்கும் குரல்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :