சென்னை வெள்ளம்: பாதிப்புகளை காட்டும் படங்கள்

சனிக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக சென்னை நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் சென்னையின் வெள்ள நீர் அளவு ஓரளவு வடிந்துள்ளது. எனினும் இன்னும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

நகரின் சில பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்து வந்தாலும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் இன்னும் வடியாமல்தான் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளும் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. 2015ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பின்னர் உண்டான வெள்ளத்துக்கு சென்னை மற்றும் நகரைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் திறந்துவிடப்பட்டது ஒரு முக்கிய காரணமாகும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் இந்த மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் கனமழை அடுத்த ஓரிரு நாட்களுக்கு தொடரும் என்றாலும் நவம்பர் 10 அல்லது 11 ஆம் தேதிதான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து தெளிவாகத் தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணை, வைகை அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட பெரிய அணைகள்கூட மிகவும் விரைவாக நிரம்பி வருகின்றன.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












