உத்தரபிரதேச கும்பல் கொலைகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்? - பிபிசி கள ஆய்வு

கும்பல் கொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
படக்குறிப்பு, கும்பல் கொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி இந்தி

(நாட்டில் வெறுப்பால் தூண்டப்படும் குற்றச்செயல்களுக்கான அரசு தரவுகள் கிடைக்கப்பெறாத காரணத்தால், 2016 மற்றும் 2021ஆம் ஆண்டில் உத்திரபிரதேசத்தில் மதம் தொடர்பான கும்பல் தாக்குதல்கள் பற்றி பிபிசி ஆய்வு செய்தது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், முஸ்லிம்கள் மீதான 11 தீவிர குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளன என்று கண்டறியப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் முஸ்லிம்கள் மீதான கடும் தாக்குதல் சம்பவங்கள் 24 ஆக உயர்ந்துள்ளன. 2016 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான இந்த புள்ளிவிவரம் அகிலேஷ் யாதவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவை. 2021 ஆம் ஆண்டின் சம்பவங்கள், தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவை. )

"அவர் தனது தோளில் ஒரு மெல்லிய முரட்டுப் பருத்தி துண்டு போட்டுக்கொண்டுசெல்வார். அதே துண்டை அவர் வாயில் திணித்தார்கள்," என்று தனது கணவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அந்த இரவில் நடந்தது பற்றி, 48 வயது கம்ரூன் பிபிசியிடம் விவரித்தார்.

அலி தனது வீட்டின் முன் மண்வெட்டி மற்றும் கூர்மையான ஆயுதத்தால் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது மகன் நீதியைப் பெற, நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையப் படிகளை ஏறி இறங்கி வருகிறார்., அரசு இழப்பீட்டை அறிவித்தது என்றாலும்கூட தங்களுக்கு இதுவரை ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ஆனால் இன்னும் வாதங்கள் தொடங்கவில்லை. தற்போது நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

கம்ரூனும் அவள் மகனும் மட்டுமே இப்படிப்பட்ட விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் அவர்களது மத அடையாளம் அவர்களின் கொலைக்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

இத்தகைய கொலைகள் பல நாடுகளில் 'வெறுப்பு காரணமான குற்றங்கள்' என வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், குற்றப் புள்ளிவிவரங்கள் 'ஹேட் க்ரைம்' பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை.

2019 ஆம் ஆண்டில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி, இந்தியாவில் 'வெறுப்புக்குற்றச் சம்பவங்களில்' உத்தரப்பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது.

மாநில அரசும் காவல்துறையும் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருப்பதாகவும், குற்றவாளிகளை பிடிக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

"டிஜிபி அலுவலகம் பல சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஆணவக்கொலைகள் எந்த சூழ்நிலையிலும் நடக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக அவ்வப்போது இந்த சுற்றறிக்கைகளை பகிர்கிறது அந்த அலுவலகம்.

தவறு செய்துவிட்டால், அந்த நபரை தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. யாராவது வன்முறையில் ஈடுபட்டால், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை."என்று உத்திரபிரதேச மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார், பிபிசியிடம் தெரிவித்தார்.

இருப்பினும், வகுப்புவாத வன்முறை மற்றும் கொலைகள் பற்றிய செய்திகள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. ஸ்டுடியோக்களில் உள்ள தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்கள், கருத்து கூறுபவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்களை நடத்துகிறார்கள். செய்திகளை வெளியிடும் அவசரத்தில் இருக்கும் செய்தியாளர்கள், கேள்வி மழை பொழிகின்றனர். சராசரி பார்வையாளர் எந்தப்பக்கத்தில் இருக்கிறார் என்பதைப்பொருத்து கேலிக்குரியதாகவோ அல்லது பொருத்தமாகவோ இந்தக்கேள்விகள் இருக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெரும்பாலும் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். லட்சக்கணக்க்கான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் இவர்களை மக்கள் விரைவாக மறந்துவிடுகிறார்கள்.

கும்பல் கொலை, வன்முறை வழக்குகளின் கதி என்ன? குறிப்பாக, அத்தகைய வழக்குகளை உத்திரபிரதேச காவல்துறை எப்படி விசாரிக்கிறது? குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா அல்லது அவர்கள் தண்டனை இல்லாமல் தப்புகிறார்களா?பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

விசாரணைகள் மற்றும் நீதித்துறை செயல்பாட்டில் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா என்பதைச் சரிபார்க்க உ.பி.யில் சில வழக்குகளை நாங்கள் விரிவாகப் பார்த்தோம்.

வழக்கு எண். 1 சோன்பத்ரா: அன்வர் அலி கொலை

அன்வர்
படக்குறிப்பு, அன்வர்

மார்ச் 20, 2019 அன்று நாடு முழுவதும் மக்கள் ஹோலி பண்டிகைக்கு முன்தினம் புனித நெருப்பை மூட்டி கொண்டாடிக்கொண்டிருந்தபோது, இரவு சுமார் 9:30 மணியளவில், உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பர்சோய் கிராமத்தில் 50 வயது அன்வர் அலியை ஒரு கூட்டம் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

"இரவு 9.30 மணி. திடீரென்று எங்கள் வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. மீண்டும் 'இமாம் செளக்கை 'உடைக்கிறார்களோ என்று சந்தேகப்பட்ட அவர் வெளியே எட்டிப்பார்த்தார். அவர் வெளியே வந்து பார்த்தபோது சிலர் இமாம் செளக்கை உடைப்பதைப் பார்த்தார். 'ஏய்! என்ன செய்கிறீகள்?' என்று மட்டுமே அவர் கேட்டார். மண்வெட்டி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் ஏந்திய கும்பல் அவர் மீது பாய்ந்தது. அவரது அலறல் கேட்காத அளவுக்கு பண்டிகை மேளம், வாத்தியங்களின் இசை சத்தமாக இருப்பதை கும்பல் உறுதி செய்தது. ஆனால் நான் அவரை முற்றத்திற்கு அழைத்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது," என்கிறார் அவரது மனைவி கம்ரூன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ஆனால் இன்னும் வாதாடும் கட்டம் வரவில்லை. தற்போது நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. அன்வர் அலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு ஏழு காயங்களுக்கு ஏற்பட்டதாகவும், கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இமாம் சௌக் என்பது 'தாஜியா' எனப்படும் புனித இஸ்லாமிய அமைப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு தளமாகும். தாஜியா என்பது ஹசன் மற்றும் ஹுசைன் (முஹம்மது நபியின் பேரன்கள்) ஆகியோரின் கல்லறைகளின் மாதிரி ஆகும். இது ஆஷுராவின் போது ஊர்வலங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குறிப்பிட்ட இமாம் சௌக், கிராமத் தலைவரின் முறையான அனுமதியுடன் அரசு நிலத்தில் கட்டப்பட்டது.

கொலைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்த மேடை இடிக்கப்பட்டு போலீஸ் படை முன்னிலையில் மீண்டும் கட்டப்பட்டதாக அன்வர் அலியின் குடும்பத்தினர், குற்றம் சாட்டுகின்றனர். அன்வர் படுகொலை செய்யப்படுவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, சிலர் மீண்டும் இமாம் செளக்கை உடைத்தனர். இந்த முறையும், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

அன்வர் அலி மனைவி கம்ரூன்.
படக்குறிப்பு, அன்வர் அலி மனைவி கம்ரூன்.

"இமாம் செளக் முதல் முறையாக உடைக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, இன்ஸ்பெக்டர் மேடையை உடைத்தவர்களுடன் காணப்பட்டார். இதுபோன்ற செயல்கள் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தாதா?" என்று அன்வரின் மூத்த மகன் கேள்வி எழுப்புகிறார்.

ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தும் ஆசிரியர்

கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ரவீந்திர கர்வாரை தனது தந்தையின் கொலைக்கு திட்டம்தீட்டியவர் என்று அன்வரின் மூத்த மகன் ஐன் உல் ஹக் குறிப்பிடுகிறார். காவல்துறை இதை ஏற்கவில்லை. கர்வார் எல்லா குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறார்.

கர்வார் கிராமத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, கிராமத்தில் இந்து, முஸ்லிம் அடையாளம் என்ற பேச்சுகள் சாதாரணமாகிவிட்டன என்று அன்வரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

"ரவீந்திர கர்வார் பர்சோய் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். முகாமை (ஷாகா) நடத்தி வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, இது எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த இமாம் சௌக் மைதானத்தில் கூடத்தொடங்கியது. 'பார்சோயின் துணிச்சலானவர்கள் வந்து இமாம் சௌக்கை இடித்துத் தள்ளுவார்கள்' என்பது போன்ற தூண்டுதல் முழக்கங்களை எழுப்புவார்கள்,"என்று அன்வரின் இளைய மகன் சிக்கந்தர் கூறினார்.

2019, மார்ச் 20 ஆம் தேதி இரவு, கிராமத்தைச் சேர்ந்த இந்து இளைஞர்கள் மீண்டும் இமாம் செளக்கை சேதப்படுத்தியபோது, அன்வர் அவர்களைத் தடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தார். அவர் மீண்டும் உயிருடன் வீட்டிற்கு திரும்பமாட்டார் என்பதை அவர் அறியவில்லை.

"இன்று வரை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் உள்ளனர். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மக்களைத் தூண்டிவிட்டு, குற்றத்தைச் செய்ய வழிநடத்திய நபர், காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. நான் கூட ஒரு முறை காவல் நிலையம் சென்று அந்த ஆசிரியரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன் . விசாரணை அதிகாரி என்னை திட்டி விரட்டி விட்டார்,"என்று ஐன் உல் ஹக் கூறுகிறார்.

பசுப் பாதுகாவலர்கள் - கோப்புப் படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசுப் பாதுகாவலர்கள் - கோப்புப் படம்.

கர்வார், ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர். அவருக்கு பெரிய புள்ளிகளுடன் தொடர்பு உள்ளது. எனவே அவர் எளிதாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார், இப்போதும் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

பர்சோய் கிராமத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் பிரஜாபதி, ராஜேஷ் கர்வார் மற்றும் அக்ஷய் ஆகிய சிலரை நாங்கள் சந்தித்தோம்.

"ஆசிரியர் முகாம் கூட்டுவார். விஷயங்களை எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நாங்கள் பெரிய பிரச்சனையில் இருக்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம். ஆனால் அவர் காப்பாற்றப்பட்டார். அவர்தான் எல்லாவற்றையும் ஆரம்பித்துவைத்தார்," என்று ராஜேஷ் கர்வார் கூறுகிறார்.

ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பிபிசி ஆய்வு செய்தது. 2019 ஜூன் 17 அன்று, போலீஸ் கேஸ் டைரி எண் 18, "பல்லியாவில் உள்ள ரவீந்திர கர்வாரின் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரைக் காணவில்லை. காவல்துறையிடம் நீதித்துறை வாரண்ட் உள்ளது. ஆனால் ரவீந்திர கர்வார் தலைமறைவாக உள்ளார்" என்று கூறுகிறது.

ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது, ரவீந்திர கர்வாரின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.

ரவீந்திர கர்வார் பற்றிய தகவல்களை பிபிசி தேட முயன்றபோது, அவர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் என்பதும், இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருப்பவர் என்பதும் தெரிய வந்தது.

கொலைக்குப் பிறகு, அவர் பர்சோய் கிராமத்திலிருந்து மாற்றப்பட்டார், இப்போது சோபன் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அவர் வேலை செய்கிறார்.

பிபிசி, ரவீந்திர கர்வாரைச் சந்தித்தது. தான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர் என்றும் தற்போது தான் சோன்பத்ராவின் இணை மாவட்டக் காப்பாளர் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

அன்வர் கொலை குறித்து ரவீந்திர கர்வாரிடம் கேட்டபோது, அவரது அணுகுமுறை மாறியது. "ஆர்எஸ்எஸ் அமைப்பை இழிவுபடுத்துவதற்காக மக்கள் என் பெயரை இந்த வழக்கில் இழுத்துள்ளனர். சம்பவ நேரத்தில் நான் என் வீட்டில் இருந்தேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது," என்றார்.

சோன்பத்ராவின் காவல் கண்காணிப்பாளர் அமரேந்திர சிங்கிடம் பிபிசி பேசியபோது, "ஒரு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைச் சொன்னால் மட்டும் போதாது. எங்கள் விசாரணையில் ரவீந்திர கர்வாருக்கு எதிராக எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார்.

கர்வாரை குற்றவாளி என்று கூற முடியாது என்ற முடிவுக்கு போலீசார் எப்படி வந்தனர் என்ற கேள்விக்கு எஸ்பி அமரேந்திர சிங் பதிலளிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தேசிய விளம்பர தலைவரான டாக்டர் சுனில் அம்பேத்கரை, எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்வார் மற்றும் இந்த வழக்கு பற்றி பிபிசி கேட்டது, ஆனால் இந்தக் கட்டுரையை வெளியிடும் வரை அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

வழக்கு எண். 2- குலாம் அகமது, 'லவ் ஜிஹாத்' பழிக்குப்பழி

2020 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச அரசு ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது- உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோத மதமாற்ற தடுப்புச் சட்டம், 2020. இருவேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணங்களை தடுப்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்துத்துவா அமைப்புகள் இத்தகைய உறவுகளை 'லவ்-ஜிஹாத்' என்று குறிப்பிடுகின்றன.

பல கும்பல் கொலை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, பல கும்பல் கொலை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

2017 மே 2 ஆம் தேதி புலந்த்ஷெஹரின் சோஹி கிராமத்தில் 60 வயதான குலாம் அகமது கொல்லப்பட்டார். அவரது பக்கத்து வீட்டுக்காரரான யூசுப் என்ற முஸ்லிம் இளைஞன் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண்ணைக் காதலித்து இருவரும் சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதால், இந்தக் கொலைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாக்கூர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் மிகக் குறைவான முஸ்லிம் குடும்பங்களே உள்ளன, பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளிகள்.

சம்பவ தினத்தன்று குலாமின் வீட்டுக் கதவை ஒரு கூட்டம் தட்டியது. அதில் கிராமத்தைச் சேர்ந்த சிலர் இருந்தனர். மற்றவர்கள் வெளியாட்கள். அவர்கள் குடும்பத்தாரை திட்டி, மிரட்டினர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அழைத்தபோது 2017 மே 2 அன்று, குலாம் அகமதுவின் மகன் வக்கீல் அகமது, காவல் நிலையத்திற்குச் சென்றார்.

"காலை 9.30 மணியளவில், குலாம் அகமது, மாந்தோப்பில் காவல் இருந்தபோது, காவி நிற துணியால் முகத்தை மூடிய ஆறேழு பேர், தங்கள் கைகளில் கம்புகளுடன் வந்தனர். அவர்கள் குலாமை தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவரை கடுமையாக தாக்கினர். காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்," என்று வக்கீல் அகமது தெரிவித்தார்.

அவருக்கு ஆழமான உள் காயங்கள் ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக குலாமின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.

விசாரணையில், குலாம் அகமதுவை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கவிந்தர் உட்பட ஒன்பது பேர், 'இந்து யுவ வாஹினி'யுடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் கண்டறிந்தனர். "இந்துத்துவா மற்றும் தேசியவாதத்திற்கான கலாசார, சமூக அமைப்பு" என்று தன்னை விவரிக்கும் இந்த அமைப்பு, 2002 இல் தற்போதைய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் நிறுவப்பட்டது.

குறிவைக்கப்படும் காதலர்கள்.
படக்குறிப்பு, குறிவைக்கப்படும் காதலர்கள்.

இந்து யுவா வாஹினியின் புலந்த்ஷெஹர் தலைவர் சுனில் சிங் ராகவ் பிபிசியிடம், "இவர்கள் பொய்யாக சிக்கவைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

கொலைக்குப் பிறகு, வக்கீல் முகமதின் குடும்பம் சோஹி கிராமத்தை விட்டு அலிகருக்கு இடம் பெயர்ந்தது. இருப்பினும், அவர்கள் வாழ்க்கை நடத்த பணம் சம்பாதிப்பதற்காக புலந்த்ஷெஹர் செல்ல வேண்டும்.

இந்தக் கொலைக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, புலந்த்ஷெஹரில் வக்கீல் அகமதை சந்திக்க பிபிசி சென்றபோது, இந்த வழக்கில் சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது அதை நீதிமன்றத்தில் 'சாட்சியமற்ற வழக்காக' மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் எங்களிடம் கூறினார்.

வக்கீல் அகமது. தொழில்முறை தச்சர். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த ஏற்பாட்டின் நிபந்தனைகளை அவர் ஏற்க மிகப் பெரிய காரணம், வழக்கில் நேரில் கண்ட சாட்சி கூட நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கத் தயாராக இல்லை என்பதுதான்.

"எங்கள் தந்தை இங்கு வந்தபோது அவருக்கு நான்கு வயதுதான். அவர் எப்போதும் இந்த கிராமத்தை தனது சொந்த கிராமமாகக் கருதினார். ஆனால் அவருக்கு இந்தக்கொடுமை நிகழ்ந்தது. போர்க்களம் சமமாக இருந்திருந்தால், நாங்கள் கடுமையாக போராடியிருப்போம். கிராமத்தில் உள்ள ஆதிக்கக் கும்பலுக்கு எதிராக நாங்கள் கொஞ்சம் பேசத் துணிந்தால்கூட, சில நாட்களுக்கு எங்களுக்கு சாப்பாடு இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட அவர்களை சார்ந்து உள்ளது. எனது குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான பண்ணைகளில் கூலி வேலை செய்யும் போது, குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்," என்று அவர் வினவுகிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 மாதங்களில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கவிந்தர் ஜாமீனில் வெளிவந்ததும், அவருக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் கொண்டாட சில சிறுவர்கள் டி.ஜே. கூட ஏற்பாடு செய்தனர்.

"எங்கள் தந்தையைக் கொன்றவர் சிறையில் இருந்து விடுதலையானவுடன் அவருக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாட்டம் நடத்தினால், இந்த கிராமத்தில் நாங்கள் எப்படி வாழ முடியும்," என்கிறார் வக்கீல் அகமது.

கவிந்தர்
படக்குறிப்பு, கவிந்தர்

குலாமின் 46 வயதான சகோதரர் பப்பு, காவி நிற மேல்துண்டு அணிந்ததாகக்கூறப்படுபவர்கள் தனது சகோதரனை அழைத்துச் செல்வதைக் கண்டார். ஆனால் அவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியமளிக்க மறுக்கிறார்.

நாங்கள் அவரைச் சந்திப்பதற்காக சோஹி கிராமத்தை அடைந்தபோது அவர், "ஆமாம், நான் பார்த்தேன். ஆனால் நான் ஒரு சாட்சி அல்ல" என்றார்.

முக்கிய குற்றவாளியான கவிந்தரைச் சந்திக்கச் சென்றபோது, துறவி உடை அணிந்திருந்த அவரது சகோதரரை சந்தித்தோம். அவர் தன்னை ஜூனா சமயமடத்தின் துறவி என்று விவரிக்கிறார். மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத்துடன் தான் நல்லுறவைக் கொண்டிருப்பதாக அவர் எங்களிடம் கூறினார்.

கும்பல் தாக்கி நிகழும் கொலைகளைப் பற்றிப் பேச விரும்புகிறோம் என்று கவிந்தரிடம் சொன்னபோது, அவர் என் பெயர் மற்றும் அடையாள அட்டையைக் கேட்டார். நான் ஒரு இந்து என்று உறுதிசெய்துகொண்ட பிறகுதான் என்னிடம் பேச ஒப்புக்கொண்டார்.

"நான் இந்து யுவ வாஹினியில் இருந்தேன், ஆனால் நான் அதிகாரபூர்வ உறுப்பினர் ஆகவில்லை. நான் அவர்களுடன் பழகினேன், அதனால்தான் என்னை சிக்கவைத்துள்ளனர்," என்று கவிந்தர் குற்றம் சாட்டுகிறார்.

வக்கீல் அகமது குடும்பத்திற்கு பணம் கொடுக்கப்பட்டதை கவிந்தர் மறுத்தார்.

பேசிய நேரம் முழுவதும் கவிந்தர் தன் சகோதரரை அடிக்கடி பார்த்துக்கோண்டே , இருந்தார். தான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் சம்மதம் கேட்பதுபோல அது இருந்தது.

"இந்த ஒப்பந்தம், தொண்ணூறு சதவிகிதம் பயம் காரணமாகவும் 10 சதவிகிதம் வறுமை காரணமாகவும் செய்யப்பட்டுள்ளது. வக்கீல் அகமதுவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இவர்கள் தங்கள் ஒவ்வொரு சிறிய அம்சத்திற்கும் கிராமத்தை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் அலிகரில் குடியேறினர். ஆனாலும் கிராமத்துடனான அவர்களின் தொடர்பை விட்டுவிட முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள், ஆனால் ஒவ்வொரு விசாரணைக்கும் நீங்கள் பணம் செலவழிக்க வேண்டும் என்று இவர்களிடம் கூறப்பட்டது.

கவிந்தரின் சகோதரர்
படக்குறிப்பு, கவிந்தரின் சகோதரர்

எனவே புத்திசாலித்தனமாக எங்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். கிராமத்தை அவர்கள் அணுகமுடிவது, சமரசத்திற்கு இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா என்பதைப் பொருத்து இருந்தது. அதுதான் சமரசத்திற்கான ஒரே காரணம். பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் இத்தகைய சமரசங்களின் முடிவைத்தான்சந்திக்கின்றன,"என்று வக்கீல் அகமதின் வழக்கறிஞர் நயீம் ஷஹாப் எங்களிடம் கூறுகிறார்.

ஷேராவை கொன்றவர் யார்?

2021 ஜூன் 4 ஆம் தேதி , உத்தரபிரதேசத்தில் புலந்த்ஷெஹரில் வசித்து வந்த ஐம்பது வயதான ஷேரா என்ற ஷேர் கான், மதுராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறைச்சிக்காக மாடுகளை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது.

பெரும்பாலான இந்திய மாநிலங்களில் பசுவைக் கொல்வதும், வியாபாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பல இந்துக்கள் பசுவை புனிதமாகக்கருதுகின்றனர்.

இந்துக்களின் புனித நகரமான மதுராவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிக்அப் டிரக்கில் ஏழு பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஷேராவும் ஒருவர். மாடுகளும் காளைகளும் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மதுராவில் உள்ள கோசிகலான் காவல் நிலையத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டன: 410/2021 மற்றும் 411/2021. எஃப்ஐஆர் 410, மாடு கடத்தல் தொடர்பானது மற்றும் ஷேராவுடன் பயணம் செய்த ஆறு பேர் மீதும் இது பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரை மதுராவில் பசுக்கள் காப்பகம் நடத்தி வரும் சந்திரசேகர் பாபா என்பவர் அளித்துள்ளார்.

இரண்டாவது எஃப்ஐஆர் எண் 411, ஷேரா கொலை தொடர்பானது. இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை மற்றும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பெயரும் இல்லை.

2021 ஜூன் 4 அன்று அதிகாலை 3.30 மணியளவில் துமுல்லா கிராமத்திற்கு அருகே பசு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடமிருந்து 6 கால்நடைகள் மீட்கப்பட்டன. கடத்தல்காரர்கள் கிராம மக்களுடன் மோதலில் ஈடுபட்டு காயம் அடைந்தனர் என்று சந்திரசேகர் செய்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.

ஷேரா சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் அவரது மகன் ஷாருக் உட்பட அவரது ஆறு தோழர்கள் மாநிலத்தின் பசு வதைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2021 ஆகஸ்டில் பசு வதை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போதுதான், ஷாருக்கானுக்கு தந்தை இறந்த தகவல் தெரிய வந்தது.

"சந்திரசேகர் பாபா என் தந்தையை சுட்டுக் கொன்றார். அதை நான் பார்த்தேன், நாங்கள் மேவார்ட் சென்றுகொண்டிருந்தோம். அப்போது பாபாவும் அவரைச்சேர்ந்தவர்களும் எங்களை நோக்கி சுடத் தொடங்கினார்கள்," என்று அன்றைக்கு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த ஷாருக் குற்றம் சாட்டினார்.

தனது தந்தையின் கொலை வழக்கிற்கு அடிப்படையாக அமைந்த புகாரை எழுதும் போது, சந்திரசேகரை தான் குற்றவாளியாகக் குறிப்பிட்டதாகவும், ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி கையால் எழுதப்பட்ட அந்தப்புகாரைக் கிழித்து எறிந்ததாகவும் ஷாருக் கூறுகிறார்.

"எங்கள் பிள்ளைகளும், கணவரும் கடத்தல்காரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) கடத்தல்காரர்கள் என்பது உண்மையானால் அவர்களை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும். அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?'' என்று வினவுகிறார் ஷேராவின் மனைவி சிதாரா.

சிதாரா தனது கணவர் ஷேராவின் மரணத்திற்கு நீதி கோரி புதிய விண்ணப்பத்தை எழுதினார். சந்திரசேகர் பாபாவையும் அவரது உதவியாளர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சிதாரா தனது விண்ணப்பத்திற்கு போலீசார் செவிசாய்க்கவில்லை என்றும், தனது கணவரின் கொலைக்கு எஃப்ஐஆரில் ' முன்பின் தெரியாத கிராமவாசிகள்' குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் கூறுகிறார்.

மதுரா கிராமத்தில் சந்திரசேகரின் மாட்டுத் தொழுவத்தின் முன் ஒரு பிக்-அப் டிரக் நிறுத்தப்பட்டுள்ளது. பெரிய மற்றும் தடிமனான இந்தி எழுத்துக்கள் அதில் காணப்படுகின்றன. கௌ ரக்ஷா தள் அதாவது பசு பாதுகாப்பு பிரிவு.

"எங்கள் பசுக்களுக்கு எந்தத் தீங்கும் நேரிடக்கூடாது என்பதற்காக நான் இரவில் கோடாரியை ஏந்திக்கொண்டு சுற்றி வருகிறேன். சம்பவம் நடந்த நாளில் நான் அருகிலுள்ள கிராமத்தில் தங்கியிருந்தேன். எனக்கு தகவல் கிடைத்ததும், கிராம மக்களிடம் மோதலை நிறுத்துமாறும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் சொன்னேன். ஆனால் இவர்கள் என் பெயரை இழுத்து என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்."என்று சந்திரசேகர் பாபா பிபிசியிடம் தெரிவித்தார்.

பசுக் காவலர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கிராமத்தைச் சேர்ந்த பலர் எங்களிடம் தெரிவித்தனர்.

எங்கள் கேள்விகளுடன் மதுராவின் எஸ்பி (ஊரகம்) ஸ்ரீஷ் சந்திராவை அணுகினோம், நான்கு மாதங்கள் ஆகியும் காவல்துறை ஏன் இந்த வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை, ஏன் எப்ஐஆரில் யாருடைய பெயரும் இல்லை என்று கேட்டோம்.

எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறிவிட்டார்.

வைரலான தாக்குதல் வீடியோ

டெல்லியில் இருந்து 190 கிமீ தொலைவில் உள்ள மொரதாபாத் நகரத்தில் இருந்து ஒரு வீடியோ மே மாதம் வைரலானது. இந்த வீடியோவில் சிலர் மரத்தின் அருகே ஒரு நபரை தாக்குவதைக் காணமுடிகிறது.

இந்த வீடியோவில் தாக்கப்படுவர் மொராதாபாத்தில் வசிக்கும் ஷகீர் குரேஷி.

ஷகீர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்துடன் வாழ்கின்றனர். வீட்டிற்கு வெளியே எங்களைப் பார்த்ததும், அவரது தாய் அழ ஆரம்பித்து, "நாங்கள் இந்த வேலையில் ஈடுபடவில்லை. (என்) மகன் வீட்டில் இல்லை" என்று முணுமுணுக்கிறார்.

பேச பயந்த ஷகீர் உள்ளேயே இருந்தார். இறுதியில் அவர் சம்பவம் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்னால் தங்கள் வேலை போய்விடும் என்கிறார்கள் சாட்சிகள்.
படக்குறிப்பு, குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்னால் தங்கள் வேலை போய்விடும் என்கிறார்கள் சாட்சிகள்.

"நாங்கள் குரேஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இறைச்சி சப்ளை செய்யும் தொழிலில் இருக்கிறோம். நகரத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 40 கிலோ எருமை இறைச்சியை சப்ளை செய்யவிருந்தேன். அதை எனது ஸ்கூட்டரில் டெலிவரி செய்வதற்காக நான் வெளியே சென்றிருந்தேன். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். நான் பசுமாட்டிறைச்சியை எடுத்துச் செல்லவில்லை என்று அவர்கள் முன் அழுது மன்றாடினேன். ஆனால் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினார்கள்," என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியபோது, தான் காவல்துறையிடம் சென்றதாக ஷகீர் கூறுகிறார்.

வீடியோ வைரலாவதற்கு முன்பு, இந்த விஷயத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறையை அணுக அவர் பயந்தார்.

ஆனால், இந்த வீடியோ வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கிய குற்றவாளியான மனோஜ் தாக்கூர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பிறகு மனோஜ் தாக்கூர் ஜாமீனில் வெளிவந்தார்.

மனோஜ் தன்னை 'கெள ரக்ஷா யுவ வாஹினி' அதாவது பசு பாதுகாப்பு இளைஞர் படையின் முன்னாள் துணைத் தலைவர் என்று கூறிக்கொள்கிறார். இது டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இருப்பினும் வீடியோ வைரலானதால் மனோஜ் தாக்கூர், அமைப்பின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் மீது புகார் கூறப்படுவது இது முதல் முறையல்ல. பசு பாதுகாப்பு என்ற போர்வையில், மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தாக்கூருக்கு எதிராக பல புகார்கள் வந்ததை அடுத்து 2020 டிசம்பரில் எஸ்பி அந்தஸ்து அதிகாரியின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்று மொராதாபாத்தின் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. ஆனால், விசாரணையின் முடிவு என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலாகப் பரவாமல் இருந்திருந்தால், எந்த சூழ்நிலையிலும் நான் சிறைக்குச்சென்றிருக்க மாட்டேன் என்று சொல்கிறார் தாக்கூர்.

மொரதாபாத் எஸ்எஸ்பி பப்லு குமாருக்கு பிபிசி கேள்விகளின் பட்டியலை அனுப்பியது, ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இத்தகைய வழக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இருக்கிறதா?

பிபிசி கவனித்த வழக்குகள் சில வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வன்முறை அல்லது கொலைச் சம்பவங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர் அல்லது தற்காலிகமாக வெளியேறினர். தங்கள் பாதுகாப்புக்கு பயந்து மற்றும் தாங்கள் அனுபவித்த அதிர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாங்கள் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எல்லாமே, தங்கள் வழக்குகளில் போலீஸ் நடவடிக்கையில் முழுமையாக திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. ஆனால், காவல்துறையும் அதிகாரிகளும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர் அல்லது குறிப்பிட்ட வழக்குகளைப் பற்றி பேச மறுத்துவிட்டனர்.

பிபிசி ஆராய்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயரிடப்படவில்லை அல்லது உள்ளூர் நீதிமன்றங்களால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2018 ஜூலையில் ஒரு மனு மீதான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இதுபோன்ற கும்பல் தாக்கி நிகழும் கொலை வழக்குகளை ஆராய வேறு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியது.

இத்தகைய கொலை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தியாவில் இதுவரை மணிப்பூர், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே கும்பல் தாக்கி செய்யப்படும் கொலைக்கு எதிரான சட்டங்களை இயற்றியுள்ளன.

2019 ஜூலையில் உத்தரப் பிரதேச மாநில சட்ட ஆணையம், ஆணவக் கொலைகளுக்கு எதிரான வரைவு மசோதாவைத் தயாரித்து, மாநில அரசிடம் சமர்ப்பித்தது.

கொலைச் சம்பவங்களில் வெளிப்படும் நுணுக்கங்கள், தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று ஆணையக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், யோகி அரசு இன்னும் வரைவை சட்டமாக மாற்றவில்லை. இந்த வரைவின் நிலை மற்றும் சில வழக்குகளில் நாங்கள் கண்ட ஒற்றுமைகள் குறித்தும் கேட்க பிபிசி, உத்திரபிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (தகவல்தொடர்பு) நவ்நீத் செய்கலை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :