ஸ்க்விட் கேம் பெயரில் டிஜிட்டல் மோசடி - 99.99 சதவீதம் மதிப்பிழந்த க்ரிப்டோ டோக்கன்

பட மூலாதாரம், NETFLIX
ஸ்க்விட் கேம் என்கிற தென்கொரிய நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் பெயரில் வெளியான டிஜிட்டல் டோக்கன், ஒரு மோசடி என்று தெரியவந்த பின், கிட்டத்தட்ட தன் பெரும்பாலான மதிப்பை இழந்துவிட்டது.
'கிரிப்டோ கரன்ஸியை வெல்ல விளையாடுங்கள்' என விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்க்விட் டிஜிட்டல் டோக்கன், கடந்த சில தினங்களில் பல ஆயிரம் சதவீதம் அதிகரித்தது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அந்த டிஜிட்டல் டோக்கனை மக்கள் விற்க முடியவில்லை என விமர்சிக்கப்பட்டது. இது போன்ற மோசடிகளை 'ரக் புல்' என க்ரிப்டோ முதலீட்டாளர்கள் அழைக்கின்றனர்.
ஒரு டிஜிட்டல் டோக்கனின் ப்ரொமோட்டர், முதலீட்டாளர்களை உள்ளே இழுத்து வந்து, வர்த்தக நடவடிக்கையை நிறுத்திவிட்டு, டோக்கன் விற்பனை மூலம் பணம் பார்க்கும் போதுதான் இப்படி ஒரு மோசடி நிகழ்கிறது.
ஸ்க்விட் டெவலப்பர்கள் டோக்கன் விற்பனை மூலம் 3.38 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் பார்த்ததாக கிஸ்மோடோ என்கிற தொழில்நுட்பம் சார் வலைத்தளம் மதிப்பிட்டுள்ளது.
"க்ரிப்டோ கரன்ஸிகளைப் பெற விளையாடுங்கள்" போன்ற வகையான டோக்கன்களை இணைய கேம்களில் பயன்படுத்த மக்கள் வாங்குவர், மேலும் பல டொக்கன்களை பெறுவர். பிறகு இதை வைத்து மற்ற க்ரிப்டோ கரன்ஸிகளையோ, தேசிய கரன்ஸிகளாகவோ பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
கடந்த செவ்வாய்கிழமை, ஸ்க்விட் டோக்கன் வெறும் ஓர் அமெரிக்க சென்டுக்கு வர்த்தகமானது. ஒரு வார காலத்துக்குள் அதன் விலை 2,856 அமெரிக்க டாலரைக் கடந்தது. தற்போது அதன் மதிப்பு 99.99 சதவீதம் சரிந்துவிட்டது என க்ரிப்டோ கரன்ஸி வலைத்தளமான காயின் மார்கெட் கேப் கூறியுள்ளது.
ஸ்க்விட் டோக்கனைப் பயன்படுத்தி, ஸ்க்விட் கேம் ஓடிடி தொடரைப் போன்ற ஓர் ஆன்லைன் கேமை விளையாடலாம் என்று வழங்கப்பட்டது. அந்த ஆன்லைன் கேம் இந்த மாதம் வெளியாகவிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதற்கு முன்பே க்ரிப்டோ கரன்ஸி நிபுணர்கள் இது ஒரு மோசடியாக இருக்கலாம் என எச்சரித்தனர். ஸ்க்விட் டோக்கனை வாங்கியவர்களால் அதை விற்க முடியவில்லை என பலரும் கூறினர்.
அந்த நிறுவன வலைதளத்தில் பல்வேறு தவறுகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்ததையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர். தற்போது அந்த வலைத்தளம் இணையத்தில் இல்லை, இதுநாள் வரை அந்த டிஜிட்டல் டோக்கனை பிரபலப்படுத்திக் கொண்டிருந்த சமூக வலைத்தள பக்கங்களைக் காணவில்லை.
"மோசமான க்ரிப்டோ ப்ரொமோட்டர்கள், சில்லறை முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அவர்களைச் சுரண்டும் பல திட்டங்களில் இதுவும் ஒன்று" என பிபிசியிடம் கூறினார் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஈஸ்வர் பிரசாத்.
க்ரிப்டோ கரன்ஸியைக் கண்காணிக்க எந்த வித நெறிமுறை அமைப்புகளும் இல்லை என்பதால், முதலீடு செய்பவர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என பேராசிரியர் பிரசாத் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"திடீரென முதலீடு செய்ய வைத்து பிறகு விற்று வெளியேறுவது, க்ரிப்டோ உலகில் அதிகம் நடக்கும். பொதுவாக முதலீட்டாளர்கள் விலை ஏற்ற இறக்கத்தை சமாளித்து, விலை சீர்குலைவதற்கு முன் விரைவாக ஒரு லாபத்தை பார்த்துவிடலாம் என கண்களைத் திறந்தபடி தான் இதில் முதலீடு செய்கின்றனர்" என்கிறார் பிரசாத்.
ஸ்க்விட் டோக்கன் பேன் கேக் ஸ்வாப் மற்றும் டோடோ போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு இருந்தது. இவை எல்லாம் பரவலாக்கப்பட்ட க்ரிப்டோ பரிவர்த்தனை சந்தைகள்.
"இன்றைய தேதியில், ஒரு புதிய க்ரிப்டோ கரன்ஸி அல்லது க்ரிப்டோ காயினை பரவலாக்கப்பட்ட பரிவர்த்தனை சந்தைகளில் எந்த வித சரி பார்ப்பு மற்றும் நெறிமுறைகளின்றி பட்டியலிடலாம்" என்கிறார் ஓபன்மைனிங் என்கிற சிங்கப்பூரைச் சேர்ந்த க்ரிப்டோ கரன்ஸி நிறுவனமான ஜின்னான் ஓயங்க்.
"எனவே நீங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும், எந்த வித நோக்கத்துக்காகவும் நீங்கள் க்ரிப்டோ கரன்ஸியை வாங்க முடியும்"
பிற செய்திகள்:
- 1,000 ஆண்டுகளுக்கும் மேல் நீருக்குள் சிதையாத மாயன் கால படகு கண்டுபிடிப்பு
- அஜித் பவார் தொடர்புடைய 1000 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
- பருவநிலை மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன?
- 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்: உலகத்துக்கு மோதியின் 5 வாக்குறுதிகள்
- இலங்கை ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லாதது ஏன்? - அரசின் பதில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












