காப்பீட்டு திட்டங்கள் எந்த அளவுக்கு தேவை?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்

ஆனந்த் ஸ்ரீநிவாசன்
படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாசன்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசிதமிழ்

காப்பீடு திட்டங்கள் நமக்கு எந்த அளவுக்கு அவசியம்? பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் அளிக்கும் விரிவான விளக்கம் இதோ.

காப்பீடு என்பதும் முதலீடு என்பதும் வேறு வேறு. காப்பீடு என்பது பாதுகாப்பு. முதலீடு என்பது லாபத்தை எதிர்பார்த்து செய்யப்படுவது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்துமே முதலீட்டையும் காப்பீட்டையும் சேர்த்து வழங்குகின்றன. இதில் நுகர்வோருக்கு எந்த லாபமும் கிடைக்காது. வெறும் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் வழங்கினால் தங்களுக்கு லாபமில்லையென காப்பீட்டு நிறுவனங்கள் நினைக்கின்றன. அதனால், முதலீட்டுத் திட்டங்களையும் சேர்த்தே வழங்குகின்றன.

ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களுக்கு பெருந்தொகையை மொத்தமாக அளிப்பது Term Policy எனப்படும். வாடிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு அதற்கான ப்ரீமியத்தை மட்டும் கட்டினால் போதும். ஆனால், எந்த நிறுவனமுமே வெறும் Term Policyஐ தர மாட்டார்கள். பல திட்டங்களை அதனோடு சேர்த்துத்தான் தருவார்கள்.

காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை முதல் தவணையாக 100 ரூபாய் கட்டினால், ஏஜென்ட் கமிஷனாக 30 ரூபாய் போய்விடும். அதற்குப் பிறகு அலுவலகச் செலவுகளுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் போய்விடும். 60 ரூபாய்தான் முதலீடே செய்வார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் 80 -85 சதவீதம் முதலீடு செய்யப்படும். ஆகவே 60- 85 ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 100 ரூபாய் முதலீட்டிற்கான லாபத்தை எதிர்பார்த்தால் எப்படிக் கிடைக்கும்? ஆகவே, முதலீடுகள் என்ற வகையில் காப்பீடுகள் லாபத்தைத் தராது.

காப்பீடுகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் மிக முக்கியமான காப்பீடு, முன்பே பார்த்ததைப் போல டெர்ம் இன்ஸ்ஷூரன்ஸ்தான் முக்கியமானது. அதாவது ஒருவர் தனது மரணத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினருக்கு பணம் சென்று சேரும் வகையில் செய்யப்படும் காப்பீடு இது. ஒருவரைச் சார்ந்து பெரிய அளவில் குடும்பத்தினர் இருந்தால், வேறு சொத்துகள் இல்லாவிட்டால், இந்த காப்பீட்டை நிச்சயம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குத் தேவையில்லை. இந்த காப்பீட்டை சிறிய வயதில் எடுத்தால் வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கட்டினால், உங்கள் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், மரணமடையாதவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்காது. அதற்குப் பதிலாக, பணம் திரும்ப கிடைக்கவேண்டும் என நினைத்தால், அதற்காக கூடுதல் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.

ஆனால், காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, வெறும் Term Insuranceஐ விற்காமல், இத்தோடு முதலீட்டு வாய்ப்புகளையும் சேர்த்து விற்பார்கள்.

காப்பூட்டு முதலீடுகள்

பட மூலாதாரம், Getty Images

இப்போது பல காப்பீட்டு நிறுவனங்கள் யூனிட் லிங்க்ட் பாலிசி என்பதை விற்கிறார்கள். 2007 - 08 பங்குச் சந்தை உச்சத்திற்குப் போனபோது, காப்பீட்டு நிறுவனங்களால் தங்களது காப்பீடுகளை விற்க முடியவில்லை. ஆகவே, வாடிக்கையாளர்களை ஈர்க்க, அவர்களது முதலீட்டில் ஒரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, லாபம் அளிக்கப்படும் என்று கூறினார்கள். அப்படித்தான் இந்த யூனிட் லிங்க்ட் பாலிசி என்பது வந்தது.

அடுத்ததாக என்டோமென்ட் பாலிசி என ஒரு காப்பீடு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் பணம் கட்டினால், அதன் முடிவில் நீங்கள் கட்டிய பணமும் கூடுதலாக ஒரு தொகையும் கிடைக்கும் என்பார்கள். ஆனால், அதைக் கணக்கிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட 4 சதவீத வட்டிதான் கிடைக்கும். மணிபேக் பாலிசியில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள். ஆகவே வட்டி இன்னும் குறைவாகக் கிடைக்கும்.

வேறு சில Policyகளில் குறிப்பிட்ட காலத்திற்குப் பணம் கட்டினால், பிறகு ஓய்வூதியம் போல கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள். ஆனால், எப்படிப்பார்த்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் வட்டி கிடைக்காது.

ஒருவர் தனக்கு காப்பீடு வேண்டுமா, வேண்டாமா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டு, மூன்று காப்பீட்டுத் திட்டங்களில் பணத்தைக் கட்டுவது தேவையில்லாதது. டெர்ம் இன்ஷுரன்ஸ் மட்டும் போதுமானது. பலர் வரியைச் சேமிக்க காப்பீட்டுத் திட்டங்களில் சேர்கிறார்கள். ஆனால், அதற்கு ஃபிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் போன்ற பலவற்றில் முதலீடு செய்யலாம். அதற்காக காப்பீடு செய்யத் தேவையில்லை.

காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வுசெய்வதில், அரசு நிறுவனங்களைத் தேர்வுசெய்ய வேண்டுமா அல்லது தனியார் நிறுவனத்தைத் தேர்வுசெய்ய வேண்டுமா என்ற கேள்வி இனி அர்த்தமில்லாதது. ஏனென்றால் அரசு நிறுவனமான எல்ஐசியும் தனியார்மயமாக்கப்படுகிறது. ஆகவே, எதில் முதலீடு செய்தாலும் ஒன்றுதான்.

சிலர் சேமிப்பைப் போல இதைச் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால், சேமிக்க வேறு நிறைய வழிகள் இருக்கின்றன. இருப்பதிலேயே மிக மோசமான சேமிப்புத் திட்டம், காப்பீடுகளாகத்தான் இருக்கும். அதில் பணத்தைச் செலுத்தி சேமிக்க வேண்டியதில்லை.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனின் பேட்டியை முழுமையாகப் பார்க்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :