பட்டினி பட்டியல்: பாகிஸ்தான், ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான இடத்தில் இந்தியா

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு பட்டியலில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான நடப்பு 2021ம் ஆண்டுக்கான இந்தப் பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது. இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும்.

இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமாகவோ கள எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94வது தர நிலையில் இருந்தது.

இந்த உலக பட்டினிப் பட்டியல் என்பது ஜெர்மனியைச் சேர்ந்த Welt hunger hilfe மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டுவருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நாடுகளை, பல்வேறு அளவீடுகள், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மதிப்பிட்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. உலகளாவிய அளவிலும் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் ஒப்பீடுகள் செய்யப்பட்டு, மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் பட்டினியை எதிர்கொள்வதற்கான யுத்தத்தில், இந்தப் புள்ளிவிவரங்கள் உதவக்கூடும் என்ற நோக்கில் இவை கணக்கிடப்படுகின்றன.

பட்டினி என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு சில அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நான்கு விஷயங்களுக்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன. முதலாவதாக, போதுமான சத்துணவு இல்லாத மக்களின் சதவீதம். இரண்டாவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருத்தல். மூன்றாவது, குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற உயரமின்றி குன்றிப்போயிருத்தல். நான்காவது, ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம். இவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

உணவு பட்டினி

பட மூலாதாரம், Getty Images

இதில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை 'கீழ்' என்ற பிரிவில் பட்டியலிடப்படுகின்றன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சுமார்' என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சீரியஸ்' என்ற பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'ஆபத்தான' என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை 'தீவிர ஆபத்தான' என்ற பிரிவிலும் வைக்கப்படுகின்றன. அதாவது அதிக மதிப்பெண் பெற்றால் மோசமான நிலை என்று பொருள்.

2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. கோஸ்டாரிகா, சூரிநாம், கயானா, நிகராகுவா, கானா, எத்தியோப்பியா, பர்கின ஃபாஸோ, சூடான், ருவாண்டா போன்ற பின்தங்கிய ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் இந்தியாவைவிட பட்டியலில் மேம்பட்ட நிலையில் உள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தான் 92வது இடத்திலும் சீனா 5வது இடத்திலும் நேபாளம் 76வது இடத்திலும் இலங்கை 65வது இடத்திலும் பர்மா 71வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் பிரச்சனை என்பது செல்வம், சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய மக்களில் 22 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலக பெரும் கோடீஸ்வரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் சேர்ந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களிபடி, உலகில் வளர்ச்சிக் குறைபாடான குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர்.

இந்தியா குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், ஏழை மக்கள் பொது விநியோகத் திட்டத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதை இந்தத் திட்டம் அதிகரித்திருப்பதாகவும் கூறிகிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் நாட்கள் குறைவாக இருக்கின்றன என்றும் அதனை அதிகப்படுத்த வேண்டுமென்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இறுதியாக, இந்தியாவின் மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், சமூக ரீதியிலான, பொருளாதார ரீதியிலான, அரசியல் ரீதியிலான பாகுபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.

இந்தியாவின் பல வளர்ந்த மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதில் ஒரு சிறிய அளவிலான தீர்வுகளையாவது தருகிறது. ஆனால், பொதுவிநியோகத் திட்டத்தில் ஓட்டைகளை அடைப்பதற்காக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தால், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் அதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

பட்டினிப் பட்டியல் தரவரிசையைப் பொறுத்தவரை, ஒரு ஆண்டின் தரவரிசைகளோடும் மதிப்பெண்களோடும் மற்றொரு ஆண்டின் தரவரிசையை ஒப்பிடுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :