IPL 2021: சிஎஸ்கே வென்றது எப்படி? தோனி போட்டி முடிந்ததும் சொன்னது என்ன?

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, தோனி
    • எழுதியவர், பு விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

"நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். அதற்குத்தான் நாங்கள் அறியப்பட்டிருக்கிறோம்''

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆஃப் வாய்ப்புக்குத் தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிய பின்னர் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கூறிய செய்தி இது.

கிட்டதட்ட 11 மாதங்களுக்கு பிறகு அந்த வாக்கியத்தை உண்மையாக்கி இருக்கிறது தோனி தலைமையிலான மஞ்சள் ராணுவம்.

வெறும் வெற்றி அல்ல, லீக் சுற்றில் நேர்த்தியாக விளையாடி பிளே ஆஃபில் நுழைந்தது போல ஐபிஎல் 2021 சீசன் இறுதிப்போட்டியிலும் வென்று சாதித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட அணி என்ற போதும், அதிக முறை கோப்பை வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது சிஎஸ்கே. 2010 முதல் 2021 வரை இத்துடன் நான்கு கோப்பைகளை சொந்தமாக்கி இருக்கிறது சிஎஸ்கே.

இதோ இப்போது ஓய்வு பெறப்போகிறார்; அந்தப் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவார்... என செய்திகள் அனுதினமும் அலையலையாக பரவும் சூழலில் 'இளைஞர்களின் ஆட்டம்' என சிலரால் கருதப்படும் டி20 ஃபார்மெட்டில் 40 வயதிலும் கோப்பையை வென்று முடித்திருக்கிறார் தோனி.

வெங்கடேச் அய்யர்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, வெங்கடேச் அய்யர்

193 ரன்கள் எனும் சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தாலும் சென்னை ரசிகர்களின் இதயதுடிப்பு ஒன்றும் சீராக இல்லை. அதற்கு காரணம் வெங்கடேஷ் அய்யரும், சுப்மன் கில்லும் தான்.

தீபக் சாஹர் முயற்சித்துப் பார்த்தார் முடியவில்லை, ஹாசில்வுட்டுக்கும் பலன் கிடைக்கவில்லை; பிராவோவால் ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது, விக்கெட்டுகள் விழவில்லை, ஜடேஜாவின் ஓவர்களை இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கியிருந்தார்கள்.

பத்து ஓவர்களாகியும் இந்த இருவரையும் பிரிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த சென்னை.

அப்போது தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் ஷர்துல் தாக்கூர். அதுவரை கொல்கத்தாவுக்கு 'ஹீரோ இன்னிங்ஸ்' விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் அய்யரை பெவிலியனுக்கு அனுப்பினார். அதில் ஜடேஜாவுக்கும் பெரும் பங்குண்டு.

அதே ஓவரில் நிதிஷ் ராணாவையும் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஷர்த்துல். மூன்றே பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். அந்த புள்ளியில் ஆட்டம் சென்னை பக்கம் நகர்ந்தது. அதன் பின் கொல்கத்தாவின் ஆட்டம் எடுபடவில்லை.

இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன என்றதுமே கிரிக்கட் புள்ளிவிவரங்கள் சுவாரஸ்யத்தை கூட்டின. அதற்கு காரணமும் இருக்கிறது.

அடிப்படையில் இந்த இரு அணிகளும் முரண்களால் எதிரெதிர் திசையில் இருந்தன.

கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாதி தொடரில் கீழ் வரிசையில் இருந்தது. முதல் ஏழு போட்டிகளின் முடிவில் இரண்டில் மட்டுமே வென்று பிளே ஆஃப் வாய்ப்பையே சிக்கலாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் சென்னை அணியோ ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக வைத்திருந்தது.

துபாய் மண்ணில் நடந்த இரண்டாவது பாதியில் கொல்கத்தா ஆடிய ஆட்டம், ஐபிஎல் வரலாற்றின் 'சிறந்த மீண்டெழுதலில்' நிச்சயம் சேர்க்கப்படவேண்டிய ஒன்று.

புள்ளிப்பட்டியலில் சாவகாசமாக முதல் இரண்டு இடங்களில் சென்னை அமர்ந்திருக்க, ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா என்ற நிலையில் விளையாடி, ஐந்து முறை சாம்பியன் மும்பையை வெளியேற்றி அதிரடியாய் பிளே ஆஃபுக்குள் நுழைந்தது கொல்கத்தா.

சென்னை பேட்டர்கள்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, சென்னை பேட்டர்கள்

குவாலிஃபயர் 1 போட்டியில், டெல்லியை, தோனியின் அனுபவ அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் வென்று இறுதிப்போட்டிக்குள் நேரடியாக நுழைந்தது சென்னை.

ஆனால், புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. அதிக அழுத்தம் நிறைந்த பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு, டெல்லி என இரு வலுவான அணிகளையும் கடைசி ஓவர்களில் வென்று முடித்து சென்னையுடன் மோத தயாரானது கொல்கத்தா.

ஹாட்ரிக் கோப்பையை தடுப்பது, 2012-ம் ஆண்டு சீசனை நினைவுபடுத்தும் ஆட்டம், ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோல்வியையே தழுவாத அணி, 180 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஐபிஎல் இறுதிப்போட்டியில் இருமுறை சேஸிங் செய்த ஒரே அணி எனும் பெருமையுடன் கொல்கத்தா இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதத் தயாரானது.

சென்னைக்கும் சரி, கொல்கத்தாவுக்கு சரி நியூசிலாந்து வீரர்கள் தான் பயிற்சியாளர்கள். ஆனால் ஒருவர் அதிரடி அக்ரஸிவ் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பிரண்டன் மெக்குல்லம். அவர் முன்னாள் சிஎஸ்கே பிளேயரும் கூட.

மற்றொருவர் அனுபவம் வாய்ந்த செயல்முறையில் பெரும் நம்பிக்கை கொண்ட ஸ்டீஃபன் ஃபிளமிங். இவர் சென்னை அணியின் பயிற்சியாளர்.

கொல்கத்தா அணியின் கேப்டனும் சரி, சென்னை அணியின் கேப்டனும் சரி தத்தமது அணிக்கு உலக கோப்பை கனவுகளை நனவாக்கியவர்கள்.

கொல்கத்தா பேட்டர்கள்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, கொல்கத்தா பேட்டர்கள்

சென்னை அணி பேட்டிங்கில் வலுவான அணி என்றால், கொல்கத்தாவோ பந்துவீச்சில் மிரட்டலான அணியாக உருவெடுத்திருந்தது.

இப்படி சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெவ்வேறு செய்திகளை விவரித்திருந்த நிலையில்தான், துபாய் மண்ணில் வெள்ளிக்கிழமை இரவு போட்டி தொடங்கியது.

டாஸ் போட வந்த தோனி நாணயத்தை சுண்டினார். மோர்கன் வென்றார். சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். தோனியும் கூட டாஸ் வென்றிருந்தால் சேஸிங்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்றார்.

ஆனால் போட்டி தொடங்கிய பிறகு நடந்ததெல்லாம் வேறு கதை.

முதல் இரு ஓவர்களின் முடிவில் இரட்டை இலக்கத்தை கூட சென்னை அணியின் ஸ்கோர் எட்டவில்லை. ஆனால் பவர்பிளே முடிவில் 50 ரன்களை கடந்திருந்தது.

மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டார் தினேஷ் கார்த்திக். அந்த தவறு தான் போட்டி கொல்கத்தாவிடமிருந்து நழுவிச்செல்லும் முதல் படி என அப்போது அவர் அறிந்திருப்பாரா? என்று தெரியவில்லை.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பௌண்டரிக்கும், மூன்றாவது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் ருதுராஜ்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, மகேந்திர சிங் தோனி

உடனேயே தனது உத்தியை மாற்றினார் மோர்கன். இரண்டாவது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஷிவம் மாவிக்கு பதிலாக ஃபெர்குசனை அழைத்தார்.

ஆம், 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஓவரை வீசிய அதே ஃபெர்குசன் தான். அந்த ஓவரில் தான் தோனி ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் கோப்பை கனவு கானல் நீரானது.

சரி, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வருவோம். அவர் வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் ருதுராஜை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை இயான் மார்கன் தவறவிட்டார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ், ஸ்டம்பை தகர்க்க வந்த பந்தை, மூன்று ஸ்டம்புகளும் தெரியும் வண்ணம் லெக் சைடில் தைரியமாக நகர்ந்து, கவர் மற்றும் பேக்வெர்டு பாயிண்ட்டுக்கு இடையே கச்சிதமாக ஒரு பௌண்டரி அடித்தார். அது ருதுராஜின் தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாட்டை வெளிக்காட்டியது.

அந்த பந்தே சென்னை அணியின் நேர்த்தியான, தன்னம்பிக்கை மிகுந்த ஆட்ட பாணிக்கு அடிகோலியிருக்கக் கூடும்.

பவர்பிளே முடிந்தவுடன் சுனில் நரைன் பந்தை கையில் எடுத்தார். சென்னை அணியின் ரன்ரேட் மட்டுப்படத் துவங்கியது. அதிரடி ஆட்டம் ஆடும் முயற்சியில் ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்தார்.

பத்தாவது ஓவர் முடியும் தருவாயில், 3 ஓவர்களாக பௌண்டரி, சிக்ஸர் விளாசாமல் தவித்த சென்னை, டுபிளசிஸின் இரு அட்டகாசமான சிக்ஸர்களால் மீண்டும் தலைநிமிர்ந்தது.

10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் சென்னை வீரர்கள் ஆடிய ஆட்டம் அதகளம் தான்.

உத்தப்பா வந்தார், தான் ஏன் ரெய்னாவுக்கு பதிலாக தேர்ந்தெடுப்பட்டேன் என்பதை தனது பேட்டிங்கின் மூலம் விளக்கிவிட்டுச் சென்றார். 15 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள்.

அதன்பின்னர் மொயின் அலி வந்தார். இங்கிலாந்து அணியிலேயே இவருக்கு கீழ் நடுத்தர வரிசையில்தான் பெரும்பாலும் பேட்டிங் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், ராயுடு, தோனி ஆகியோருக்கும் முன்னர் தன்னை களமிறக்கும் சென்னை நிர்வாகத்தின் முடிவு சரியானதே என்பதை விவரிக்கும் வகையில் லாவகமாக பந்துகளை சிக்சருக்கும் பௌண்டரிக்கும் விரட்டி, கொல்கத்தா அணியின் ஃபீல்டர்களை கலங்கடித்தார்.

நட்சத்திர வீரர் ஃபெர்குசன் வீசிய 4 ஓவர்களில் மட்டும் 56 ரன்கள் எடுத்தது சென்னை அணி. டுபிளசிஸ் ஒரு மூத்த வீரராக பொறுப்புடன், கடைசி ஓவரின் கடைசி பந்து வரை களத்தில் இருந்து 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.

கடைசி பந்தில் அவர் சிக்ஸர் விளாசியிருந்தால், தன்னுடன் இணைந்து விளையாடிய சகவீரர் ருதுராஜிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி இருப்பார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவுட் ஆனார்.

தோனி

பட மூலாதாரம், Robert Cianflone

படக்குறிப்பு, தோனி

சென்னை அணி பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட்டதை ஸ்கோர்போர்டு காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்திருந்தது.

எனினும் கொல்கத்தாவின் சேசிங் சாதனைகள், சென்னை அணி இந்த சீசனில் பந்துவீச்சில் சொதப்பிய தருணங்கள் ஆட்டம் முழுமையாக சென்னை பக்கம் நகர்ந்துவிடவில்லை என்பதை உணர்த்தின.

வெங்கடேஷ் அய்யர் கொடுத்த சற்றே கடினமான கேட்ச் ஒன்றை விக்கெட் கீப்பர் தோனி தவறவிட, அதை பயன்படுத்திக் கொண்டு லாவகமாக பந்துகளை விளாசினார். அவர் கிரீஸில் இருக்கும் வரை ஆட்டம் கொல்கத்தா நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

11-வது ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில், சுனில் நரைன் களமிறங்கினார். இவர் தான் பிளே ஆஃபில் பெங்களூரு அணியின் கதையை முடித்தவர்.

அப்போது ஜடேஜாவுக்கு பதிலாக ஹாசில்வுட்டை அழைத்தார் தோனி. அவரது நகர்வு சரியே என்பதை ஹேசில்வுட் நிரூபித்தார். சுனில் நரைன் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

14வது ஓவரில் தீபக் சாஹர் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தியதும், களம் புகுந்த தினேஷ் கார்த்திக் அதிரடி சிக்ஸர் வைத்தார். ஆனால் அவரது விக்கெட்டையும் ஷகிப் விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஜடேஜா.

ஐபிஎல் 2021 டைட்டிலை வென்ற சென்னை

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, ஐபிஎல் 2021 டைட்டிலை வென்ற சென்னை

திரிபாதி, மோர்கன் ஆகியோரும் ரன்ரேட் அழுத்தம் தாங்கமுடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

19வது ஓவரில் ஷர்துல் தாகூர் நோபால், வைடு என சற்றே மோசமாக செயல்பட தோனி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிந்தது. பிராவோ கச்சிதமாக கடைசி ஓவரை முடித்துவைக்க 27 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது சென்னை அணி.

20 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட செக் சென்னை அணியின் வசமானது.

ஆட்டநாயகன் விருதை டுபிளசிஸ் வென்றார். ஐபிஎல் தொடர் நாயகன் விருது ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு இந்த விருதை வெல்லும் இந்தியர் இவர்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை அல்லது மும்பை அணிகளே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு, முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதித்த தோனி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்தும் தனது 40வது வயதில் தனது தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்திருக்கிறார்.

போட்டி முடிந்தபிறகு ஹர்ஷா போக்லேவுடன் உரையாடினார். அப்போது, இந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வெல்ல தகுதியான அணி எதாவது உண்டு எனில், அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்றே உணர்கிறேன் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :