சைகோ கொலைகாரனா துரைமுருகன்? போலீஸ் என்கவுன்டர் பின்னணி என்ன?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தூத்துக்குடியில் முத்தையாபுரம் பகுதியில் போலீசாருடன் நடந்த மோதலில் தொடர் குற்றச்செயல்களில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த துரை முருகன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் ஒரு சைகோ கொலைகாரன் என்று போலீஸ் தரப்பும் இந்த என்கவுன்டரே போலியானது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர். என்ன நடந்தது? தூத்துக்குடி அடுத்துள்ள கூட்டாம்புளி காமராஜ் நகரை சேர்ந்தவர் துரைமுருகன் (39). இவர் மீது 7 கொலை வழக்குகள், 21 கொள்ளை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் துரை முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரை முருகன் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படை சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்த போலீசார் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அப்போது துரைமுருகன் காவலர்களை அரிவாளால் தாக்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சார்பு ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் டேவிட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.இதையடுத்து தங்களை தற்காத்து கொள்ள துரைமுருகன் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்தது.

இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.பின்னர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த துரைமுருகனின் சடலத்தை உடல் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்த காவலர்களை அவர்கள் சேர்க்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று தென் மண்டல ஐஜி அன்பு, நெல்லை சரக டிஐஜி பிரேம்குமார் அபினவ் ஆகியோர் நலம் விசாரித்தார்.
யார் இந்த துரைமுருகன்?
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "துரைமுருகன் பணத்திற்காக ஆட்களை கடத்தி பின் கொலை செய்வதை தொழிலாகக் கொண்டவர். 2001ஆம் ஆண்டு ஒருப கொலை வழக்கில் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். பின் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட கள்ள தொடர்பால் அந்த பெண்ணுக்காக அவரின் கணவர், உறவினர்கள் என 3 பேரை கடத்தி அவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்தான்.
2010ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஒரு கொலை வழக்கு, 2011ஆம் ஆண்டு மதுரை ஒத்தக்கடையில் ஒரு கொலை வழக்கு என மொத்தமாக 8 மாவட்டங்களில் அவர் மீது 35 வழக்குகள் உள்ளன. இதில் ஏழு கொலை வழக்குகள் அடங்கும்.கொலை செய்வதற்கு முன்பு கொலை செய்ய வேண்டிய நபரை கடத்தி 15 நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி பணம் பறித்து விட்டு பின் அந்த நபரை வெட்டி கொலை செய்து புதைத்து விடுவது துரைமுருகனின் பாணி. அவர் ஒரு சைக்கோ கொலைகாரன்," என்றார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டவர்2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை சிறையில் இருந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் கடந்த 7ஆம் தேதி பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முதல் குற்றவாளி துரை முருகன் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை தனிப்படை தேடி வந்தது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் துரை முருகன் தனது கூட்டாளிகளுடன் முத்தையாபுரம் பொட்டல் காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துரை முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் என மூவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்யும் போது துரைமுருகன் தனது கையில் இருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து துரைமுருகனும் மற்ற இருவரும் தப்பி ஓடிய நிலையில் காவலர்கள் தற்காப்புக்காக துரைமுருகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் துரைமுருகன் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டின் போது துரைமுருகன் உடன் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவரும் போலீசாரிடம் பிடிபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எதிர்க்கும் செயல்பாட்டாளர்கள்
இதற்கிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து மக்கள் கண்காணிப்பகம் மண்டல சட்ட அலுவலர் அதிசய குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை என்கவுன்டர் நடைபெற்றது இல்லை. காவல் நிலைய மரணங்கள் மட்டும் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இரண்டு முறை என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியிலும் என்கவுன்டர்கள் நடந்துள்ளன ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே மனித உயிர்களை பறிக்கின்றன.போலீசாரின் தரப்பில் கேட்கும்போது தற்காப்புக்காக சுட்டோம் என கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று நடந்த சம்பவம் மிகப்பெரிய மனித உரிமை மீறல். காவல்துறை இதனை செய்யக்கூடாது.இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பின் பாவூர்சத்திரம் கொலை வழக்கில் துரை முருகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். காரணம் 2015ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் துரைமுருகன் மீது ரவுடி வரலாற்று பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் துரைமுருகன் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் அதிசய குமார்.மேலும், "குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துரிதப்படுத்தி நீதிமன்றம் வாயிலாக உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால் இவ்வாறான நபர்கள் வெளியே வராமல் இருப்பார்கள். அதை தவிர்த்து போலீசாரே நேரடியாக இவ்வாறு தண்டனை கொடுப்பது தவறு. இது ஒரு போலி என்கவுன்டர்," என்றார் அதிசயகுமார்.காவலர்கள் மீது ரவுடிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இந்த மாதிரியான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட துரைமுருகன் உடலை தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டுதலின்படி உரிய மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் மண்டல சட்ட அலுவலர் அதிசய குமார் வலியுறுத்தினார்.துரைமுருகன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து அவரது குடும்பத்தினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனரா என கருத்து கேட்பதற்காக பிபிசி தமிழ் முயன்றபோதும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து துரை முருகனின் குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கும்பட்சத்தில் அதை இந்த செய்தியில் பதிவு செய்கிறோம்.
தொடரும் என்கவுன்டர்கள்
இதேவேளை, காவல்துறை குற்றவாளிகளை என்கவுன்டர் மூலம் கொல்லும்போது பெரும்பாலானவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால், இம்மாதிரியான கொலைகளை ஆதரிப்பது எதிர்காலத்தில் மிக ஆபத்தான நிலைமைக்கு எடுத்துச் செல்லும் என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநில கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற போது கொள்ளையரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். கொள்ளையன் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது கூட்டாளியாக செயல்பட்ட மற்றொருவரை போலீஸார் கைது செய்ததாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், மீண்டும் ஒரு என்கவுன்டர் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது - முன்னாள் நீதிபதி

இந்த என்கவுன்டரை யாரும் எதிர்க்கவில்லை. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நம்முடைய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை போய்விட்டதுதான். வழக்குகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. சீக்கிரம் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆகவே, இது இந்தக் கொண்டாட்டம் என்பது இந்தியாவின் நீதி அமைப்புகளின் தோல்வி. சட்டத்தின் தோல்வி.
ஒருவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தீர்மானிக்க 106 நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவே ஜெயலலிதாவாக இருந்தால் 20 நாட்களில் கிடைக்கிறது.
தற்போது இந்தியாவின் முக்கியமான தேவை, நியாயமான வேகமான விசாரணை. இங்கே ஒரு மோட்டர் வாகனக் குற்றத்தில்கூட சிறிய தீர்ப்பை வழங்க நான்கு வருடங்கள் ஆகின்றன. இம்மாதிரி ஒரு அமைப்பின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். அதனால், இம்மாதிரி என்கவுன்டர்களைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நான்கு பேரில் ஒருவர் குற்றம் செய்யாதவராக இருக்கலாம். குற்றம் செய்த வேறொருவர் வெளியில் இருக்கலாம். ஆனால், இந்த நான்கு பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதை மக்கள், ஊடகங்கள் என எல்லோருமே ஆதரிக்கிறார்கள்.
இங்கிலாந்தில் இம்மாதிரி வழக்குகளில் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் வழக்குகள் முடிந்து தீர்ப்பு வந்துவிடுகிறது. ஆகவேதான், அங்கு இம்மாதிரி என்கவுன்டர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். இங்கே நீதி தாமதமாவதால், இம்மாதிரி நடக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் பலி
- ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 90 பேர் காயம்
- உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? - வெளியான ஆய்வு
- கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












