தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 என்கவுன்டர்கள்

சித்தரிப்புக்காக
படக்குறிப்பு, சித்தரிப்புக்காக
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டிலும் பல என்கவுன்டர் சம்பவங்கள் இதுபோல நடந்திருக்கின்றன.

1. அல் - உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்)

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினரால் பெங்களூரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து 2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி காவல்துறையினரின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி அவர்கள் பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 32 வயதான இமாம் அலி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். இவருடன் சேர்ந்து தப்பித்த ஹைதர் அலி பிடிபட்ட நிலையில், இமாம் அலி தேடப்பட்டுவந்தார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், AFP CONTRIBUTOR

படக்குறிப்பு, கோப்புப்படம்

பெங்களூரில் உள்ள சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் தங்கியிருக்கும் தகவல் அறிந்து அங்கு சென்ற கோயம்புத்தூர் டி.ஐ.ஜி., மதுரை காவல்துறையின் துணை ஆணையர் ஆகியோர் இமாம் அலியையும் அவருடைய கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சரணடையச் சொன்னபோது, அவர்கள் மறுக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இமாம் அலி, முகமது இப்ராஹிம், சைபுல்லா, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் ஆகிய ஐந்து பேர் இதில் கொல்லப்பட்டனர்.

2. வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் (2003 செப்டம்பர்)

தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த வெங்கடேச பண்ணையார் என்பவர் சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கம் ஏரிக்கரைச் சாலையில் உள்ள ஓர் அபார்ட்மென்டில் இந்த என்கவுன்டர் நடந்தது.

ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். அந்த வீட்டில் வெங்கடேச பண்ணையாருடன் வேறு சிலரும் இருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களைச் சரணடைய சொன்னதாகவும் அவர்கள் மறுத்ததோடு, வெங்கடேச பண்ணையார் துப்பாக்கியை நீட்டியதால் தற்காப்பிற்காக காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் காவல் துறை தெரிவித்தது.

ஆனால், வீட்டின் கதவைத் திறந்தவுடனேயே காவல்துறை வெங்கடேச பண்ணையாரைச் சுட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்தனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருடைய மனைவி ராதிகா செல்வி தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, உள்துறை இணை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

3. சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டர் (2004 அக்டோபர்)

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடைப்பட்ட வனப் பகுதியில் சந்தன மரங்கள், யானைத் தந்தம் ஆகியவற்றைக் கடத்துவதில் ஈடுபட்ட வீரப்பன், ஒரு கட்டத்தில் காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரையும் கொல்ல ஆரம்பித்தார். இவரைத் தேடுவதற்காக இரு மாநில காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது, அந்தப் பகுதியில் வசித்த பழங்குடியினர் பலரும் காவல்துறையின் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த வீரப்பன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது அவருடன் அவருடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, சந்தனக் கடத்தல் வீரப்பன்

வீரப்பனைத் தேடுவதற்காக விஜயகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட அதிரடிப் படை இந்த என்கவுன்டரைச் செய்தது. இந்த அதிரடிப் படையைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசுகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.

4. கோயம்புத்தூர் சிறார் கொலை வழக்கு (2010 நவம்பர்)

கோயம்புத்தூரில் வசித்து வந்த ரஞ்சித் - சங்கீதா தம்பதியின் குழந்தைகள் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று கடத்தப்பட்டனர். குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிச் செல்ல வேனுக்காகக் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன் ஒரு வேனை எடுத்துவந்து அவர்களைக் கடத்தினார். அதற்குப் பிறகு, மோகன்ராஜுடன் அவருடைய நண்பர் மனோகரன் என்பவர் இணைந்துகொண்டார்.

குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்க நினைத்தவர்கள் பிறகு, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பிஏபி கால்வாயில் மூழ்கடித்துக் கொலை செய்தனர். இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

நவம்பர் 8ஆம் தேதியன்று இருவரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். நவம்பர் 9ஆம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கு குற்றங்கள் நடைபெற்றனவோ அந்த இடத்தைக் காண்பிப்பதற்காக குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படிச் சென்று கொண்டிருக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட மோகன்ராஜ் காவலர்களைத் தாக்கி, தப்பிக்க முயன்றதாகவும் இதையடுத்து காவலர்கள் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டபோது, காவலர்களைப் பாராட்டி கோவையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன.

5. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் (2012 பிப்ரவரி)

2012ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டு மிகப் பெரிய வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. ஜனவரி 23ஆம் தேதி ஆயுதம் தாங்கிய நான்கு பேர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்குள் நுழைந்து 19 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.

அதேபோல பிப்ரவரி 20ஆம் தேதி இதேபோல ஆயுதம் தாங்கிய நான்கு பேர் கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கிக்குள் நுழைந்து 14 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவங்கள் சென்னை நகரை உலுக்கிய நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதியன்று அதிகாலை ஒரு மணியளவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், அந்த வீட்டிலிருந்த ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

அந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேறச் சொன்னபோது அவர்கள் வெளியேற மறுத்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், தாங்கள் திருப்பிச் சுட்டதாகக் காவல்துறை கூறியது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 30-35 வயதுக்குட்பட்டவர்கள். வினோத் குமார், சந்திரிகா ராய், வினய் பிரசாத், அபய் குமார், ஹரீஷ் குமார் ஆகிய ஐந்து பேரில் நான்கு பேர் பிஹாரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.

இவர்களிடமிருந்து 14 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. தற்காப்பிற்காகச் சுட்டதாக காவல்துறை சொன்னாலும், அந்தத் தருணத்தில் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

6. காவலரைக் கொலைசெய்ததாக இரண்டு பேர் என்கவுன்டர் (2012 டிசம்பர்)

2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருதுபாண்டியர் குரு பூஜை தினத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆல்வின் சுதர் என்பவர் பிரபு என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் இரண்டு காவல்துறையினரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. இந்த கொலை தொடர்பாக பிரபு உள்ளிட்டவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பிரபு, பாரதி ஆகியோர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர். மதுரை அண்ணா நகர் அருகே வரும்போது பிரபு, பாரதி ஆகிய இருவரும் காவலர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் மானாமதுரை தீர்த்தான்பேட்டை அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரபுவும், பாரதியும் இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும் அவர்களை காவல்துறையினர் நிறுத்தியபோது பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளைக் கொண்டும் தாக்க முயன்றதாகக் கூறிய காவல்துறையினர், தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதாகக் கூறியது.

இந்த என்கவுன்டர் சம்பவங்கள் தவிர, தனித்தனியாக ரவுடிகள், சமூக விரோதிகள் என்ற பெயரில் பலர் கடந்த சில ஆண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: